இறங்கி அடிக்க தயாராகும் விஜய்.. தவெக மாநாட்டில் நிறைவேற்றப்படும் 19 தீர்மானங்கள்? பரபர தகவல்
விக்கிரவாண்டி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருமொழிக்கொள்கை, ஆளுநரை கண்டித்து தீர்மானம், மின் கட்டணம் தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தொடங்கியுள்ளது. 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து விஜய் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். விக்கிரவாண்டி சாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

மாநாட்டு திடலுக்கு சற்று நேரத்தில் விஜய் வருகை தர உள்ளதாக தெரிகிறது. திடலுக்கு வந்ததும் அங்கு வைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றும் விஜய், ரேம்ப் வழியாக மாநாட்டு மேடைக்கு வருகை தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு தொடங்கியுள்ள நிலையில், விஜய் நடித்த படத்தின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன.
இன்றைய மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகள், கொடிக்கான விளக்கம் ஆகியவற்றை பேசப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். இதனால், விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எகிறியுள்ளது. இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் 19 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல், மின் கட்டணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மகளிர் பாதுகாப்பு, இரு மொழி கொள்கை உள்ளிட்டவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இதேபோன்று ஆளுநரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மாநாடு தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து தொடர்ந்து தொண்டர்கள் வருகை தருவதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நடந்தே பல தொண்டர்கள் நடந்து வருகிறார்கள். தொண்டர்கள் முன்கூட்டியே குவிந்ததால், மாநாடு திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே தொடங்கியுள்ளது.
முதலில் விஜய் பாட்ல்கள் ஒளிபரப்பப்பட்ட நிலையில், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. விஜய்யின் கட்சி மாநாட்டில் அவரது தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications