செஞ்சி சிறுமி மாயம்.. ரவுடி ராஜதுரையிடம் 4வது முறையாக விசாரணை.. ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து 27 நாட்களை எட்டிவிட்டது. இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.

villupuram gingee

உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் சிறுமியைப் பற்றிய எந்தவொரு சிறு துப்பும் கிடைக்காமல் போனதால் வழக்கு சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆலம்பூண்டியிலேயே முகாமிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர். பெற்றோர், சாமியார், 14 நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்கள், நடுப்பட்டு வில்லுப்பாட்டு குழுவினர், சுடுகாடுகள், நாமக்கல் தாதகிரி முருகன் கோவில் எனப் பல கோணங்களில் சல்லடை போட்டும் குழந்தை எங்கே என்ற மர்மம் விலகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை விசாரிக்கப்பட்ட பரடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி ராஜதுரையை, சிபிசிஐடி தனிப்படையினர் நேற்று 4-வது முறையாக மீண்டும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிர கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

மீண்டும் ராஜதுரையை நோக்கித் திரும்பிய சிபிசிஐடி

ஆலம்பூண்டிக்கு மிக அருகில் உள்ள பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், குழந்தை காணாமல் போன அதே நள்ளிரவில் ஆலம்பூண்டி பகுதியில் தனது கூட்டாளிகளுடன் மது அருந்தியதாகவும், வடிவேலு வீட்டில் நகை, பணம் இருப்பதாகப் பேசி கொள்ளையடிக்க நோட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே இவர் பயன்படுத்திய 4 போலி சிம்கார்டுகளைப் பறிமுதல் செய்து, சிறையில் இருந்த இவரை வெளியே கொண்டுவந்து மூன்று முறை அதிகாரிகள் விசாரித்திருந்தனர். ஆனால், தற்போது வழக்கில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், ராஜதுரையை மீண்டும் 4-வது முறையாக சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது.

4-வது முறை விசாரணைக்குக் காரணம் என்ன?

ராஜதுரையின் நெருங்கிய கூட்டாளியான ஆடு மேய்க்கும் தொழிலாளி அரவிந்தை சிபிசிஐடி போலீசார் முகத்தை மூடி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தீவிர கள விசாரணை நடத்தினர். அப்போது அடர்ந்த வனப்பகுதிகள், பாறை இடுக்குகள் மற்றும் நள்ளிரவு நடமாட்டங்கள் குறித்து அரவிந்த் சில தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வாக்குமூலங்களை ராஜதுரை முன்பு கூறியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த மறுவிசாரணை நடத்தப்படுகிறது.

குழந்தை மாயமான நள்ளிரவு மற்றும் அதிகாலைப் பொழுதில் 2 மர்ம நபர்களுடன் சிறுமி சென்றதாகப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், அந்த நபர்கள் ராஜதுரைக்குத் தெரிந்த உள்ளூர் குற்றவாளிகளா அல்லது வெளியூர் கடத்தல் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை அந்த டவர் எல்லையில் பதிவான 600-க்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்களில், ராஜதுரையுடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார் யார் என்பதைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.

ரகசிய இடத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு

பொதுமக்கள் அல்லது ஊடகங்களின் பார்வை படாத வகையில், செஞ்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு ராஜதுரையை அழைத்துச் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். "குழந்தையைக் கடத்தியது யார்? குழந்தை தற்போது உயிருடன் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளார்? உள்ளூர் நெட்வொர்க்காக இருந்து பின்னணியில் வழிகாட்டினீர்களா?" என அடுக்கடுக்கான நேரடி கேள்விகளை முன்வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

27-வது நாளில் விடை கிடைக்குமா?

சம்பவம் நடந்து 27 நாட்களை எட்டியுள்ள நிலையில், "என் புள்ளை கண்டிப்பா உயிருடன் இருக்கிறாள்.. அவளை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள்" என்று தாய் பவானி தொடர்ந்து கண்ணீர் மல்கக் கதறி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் பல திசைகளில் அலைக்கழிந்துவிட்டு, மீண்டும் ரவுடி ராஜதுரையிடமே சிபிசிஐடி வந்து நிற்பது, இந்த கடத்தல் அல்லது மாயமான பின்னணியில் உள்ளூர் குற்றவாளிகளின் நேரடிப் பங்கு இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. ராஜதுரையிடம் நடத்தப்பட்டு வரும் இந்த 4-வது கட்ட ரகசிய விசாரணை, 27 நாட்களாகத் தொடரும் ஆலம்பூண்டி சிறுமி ஹேமலதா வழக்கின் மர்மத்திற்கு மிக விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+