செஞ்சி சிறுமி மாயம்.. 22 நாட்களாகியும் முடியல! சுழன்றடிக்கும் யூ டர்ன்.. கேசில் தோற்ற தவெக அரசு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து இன்றுடன் 22 நாட்கள் கடந்துவிட்டன. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் படுக்கையறையில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் உறங்கிய குழந்தை, அக்டோபர் 12 அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடி எந்தத் துப்பும் கிடைக்காமல் திணறியதால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால், சிபிசிஐடி களமிறங்கி பல நாட்கள் உருண்டோடிய நிலையிலும் உருப்படியான ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பாய்வதும், இறுதியில் தொடங்கிய இடத்திற்கே திரும்பி யூ-டர்ன் அடிப்பதும் காவல் துறையின் ஒட்டுமொத்தப் புலனாய்வுத் திறனையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தையும் கடுமையான கேள்விக்குறியாக்கியுள்ளது.

gingee villupuram

அடுத்தடுத்த யூ-டர்ன்கள்... திசைமாறிய புலனாய்வு

ஆரம்பத்தில் காடுகள், விவசாயக் கிணறுகள், ஏரிகள் என ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள், மீன்பிடி வலைகளைக் கொண்டு தேடினார்கள். அங்கு எதுவும் கிடைக்காததால்:

சிறையில் இருந்த பழைய குற்றவாளி ராஜதுரையை வெளியே எடுத்து விசாரித்தனர். தப்பியோடிய சாமியார், பூசாரி, ஜாதகம் எழுதியவர் என மாந்திரீகக் கோணத்தில் சுற்றினர். தந்தை வழி உறவினர்களைத் தேடி கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை போலீஸ் படை விரைந்தது.

நள்ளிரவில் கதவு தட்டப்பட்ட மூதாட்டி மணிமேகலை, 2,000 ரூபாய் கொடுத்ததால் விஷம் குடித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என அடுத்தடுத்த நபர்களை வளைத்தனர். இப்போது வனத்துறையுடன் காடுகளில் கூட்டுத் தேடுதல் வேட்டை நடத்திவிட்டு, இறுதியில் மீண்டும் சிறுமியின் தந்தையிடமே வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இத்தனை நாட்களாக ஒரு 7 வயதுக் குழந்தை எங்கே இருக்கிறார் என்ற மிக அடிப்படையான தகவலைக் கூட உறுதி செய்ய முடியாமல், விசாரணை வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பது அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

சாமானியனின் குழந்தைக்குப் பாதுகாப்பே கிடையாதா?

"குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசி தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்" என்று பொதுவெளியில் பேசி, மக்களின் பெரும் ஆதரவையும் வாக்குகளையும் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஒரு அரசு, இன்று அதே குழந்தைகளின் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் பரிதாபமாகத் தோற்று நிற்கிறது என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது.

ஒரு பெரும் பணக்காரரின் குழந்தையோ அல்லது செல்வாக்குமிக்க அரசியல் புள்ளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ காணாமல் போயிருந்தால் காவல் துறை இத்தனை நாட்கள் இழுத்தடிக்குமா? ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிக்கும் ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியின் குழந்தை என்பதால் தான் இவ்வளவு சுணக்கமா என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். வீட்டுக்குள் பெற்ற தாயின் அருகில் படுத்திருந்த குழந்தையை யாரோ தூக்கிச் சென்று 22 நாட்கள் ஆகியும் ஒரு துணிகூடக் கிடைக்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் சாமானிய ஏழை மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கசப்பான உண்மை அறைகிறது.

விளம்பர அரசியலுக்கு நடுவே கதறும் தாய்

முதல் 10 நாட்கள் உள்ளூர் போலீசார் தடயங்களைப் பாதுகாக்காமல் விட்ட சொதப்பல்கள், பின்னர் வந்த புலனாய்வுத் துறையின் தொடர் குழப்பங்கள் என அனைத்தும் சேர்ந்து வழக்கை ஒரு முடிவில்லாப் புதிராக மாற்றியுள்ளன. காவல்துறையும் உளவுத்துறையும் நவீனத் தொழில்நுட்பங்கள் கையில் இருந்தும் ஒரு கிராமத்துப் பெண் குழந்தையை மீட்க முடியாமல் திணறி வருவது, காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசின் நிர்வாகத் தகுதியையே ஆட்டம் காண வைத்துள்ளது.

"என் குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்டுத் தாருங்கள்" என்று தாய் பவானி நடுரோட்டில் நின்று கதறும் கண்ணீருக்கு ஆட்சியாளர்களிடம் என்ன பதில் இருக்கிறது? அறிக்கைகளாலும், அதிகாரி மாற்றங்களாலும் ஒரு குழந்தையின் உயிரை மீட்டுவிட முடியாது. அரசு தனது தூக்கத்தைக் கலைத்து, ஒட்டுமொத்தக் காவல் துறையையும் முடுக்கிவிட்டுச் சிறுமி ஹேமலதாவை உயிருடன் மீட்காவிட்டால், இது தமிழக சட்டம் ஒழுங்கு வரலாற்றில் அழிக்க முடியாத பெரும் கறையாகவே நிலைத்து நிற்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+