6 வருஷமா இல்லாத கொண்டாட்டம்! அன்று மட்டும் வெட்டப்பட்ட கேக்! செஞ்சி வழக்கில் திடீர் சாமியார் என்ட்ரி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி காணாமல் போன வழக்கு, நாளுக்கு நாள் பெரும் மர்மக் கதையாக மாறிக் கொண்டிருக்கிறது. உள்ளூர் காவல்துறையினர் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள சில புதிய தகவல்கள் இந்த வழக்கில் மிகப்பெரிய அதிர்ச்சித் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

Gingee Missing Girl Case

ஒரே அறையில் தூங்கிய பெற்றோர் மற்றும் பாட்டி: நள்ளிரவில் நடந்தது என்ன?

வழக்கின் தொடக்கத்தில் இருந்தே காவல்துறையினரைக் குழப்பும் முதல் கேள்வி, குழந்தை எப்படி வெளியே போனார் என்பதுதான்.

சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் அக்டோபர் 11-ஆம் தேதி இரவு, சிறுமி தனியாக வேறு அறையில் தூங்கவில்லை. பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் சிறுமியின் பாட்டி ஆகிய மூவருடன் ஒரே அறையில்தான் படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் குழந்தை மட்டும் எப்படி எழுந்து வெளியே சென்றார்? யாருக்கும் எந்தவித சத்தமும் கேட்கவில்லையா? அல்லது யாராவது கதவைத் திறந்து உள்ளே வந்து குழந்தையைத் தூக்கிச் சென்றார்களா? அவ்வாறு தூக்கிச் சென்றிருந்தால் பெற்றோர் அல்லது பாட்டிக்கு எப்படித் தெரியாமல் போனது?

இந்த முரண்பாடுகளை உடைக்க, சிறுமியின் பெற்றோர் மற்றும் பாட்டியிடம் புலனாய்வு அதிகாரிகள் மிகத் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டம்: திடீர் கேக் கட்டிங் பின்னணி என்ன?

இரண்டாவது சந்தேகப் புள்ளி, சிறுமியின் பிறந்தநாள் விவகாரம்.

சிறுமி ஹேமாவதிக்கு இப்போது 7 வயது முடிந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் சிறுமிக்கு ஒருமுறை கூட பிறந்தநாள் கொண்டாடியதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த ஆண்டு மட்டும் சிறுமிக்குத் திடீரென கேக் வெட்டிப் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரைக் கண்கலங்க வைத்துள்ளது.

"இதுவரை ஒருமுறை கூட பிறந்தநாள் கொண்டாடாத நிலையில், குழந்தை காணாமல் போன அன்று இரவு மட்டும் திடீரென ஏன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது? பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு யார் யோசனை கொடுத்தது? இதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?" என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அந்தப் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் கிராமத்து நபர்களின் பட்டியலை எடுத்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

சாமியார் சரவணன் மாயம்: வழக்கில் எழுந்த புது சந்தேகம்

இவை எல்லாவற்றையும் விடப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது சரவணன் என்ற சாமியாரின் திடீர் தலைமறைவு.

ஆலம்பூண்டி கிராமப் பகுதியில் தங்கி இருந்த சரவணன் என்ற சாமியார், சிறுமி காணாமல் போன அதே தினத்தில் திடீரென அந்த ஊரை விட்டு மாயமாகியுள்ளார். சிறுமி காணாமல் போன அதிர்ச்சியில் கிராமமே திரண்டு தேடிக் கொண்டிருந்தபோது, சாமியார் எந்தவிதத் தகவலும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறியது போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் அவரது செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அவரது செல்போன் டவர் இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அவர் திருவண்ணாமலை வழியாகச் சென்று விழுப்புரம் அரசூர் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவரைப் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். மூடநம்பிக்கை, நரபலி அல்லது ஏதேனும் செய்வினை சடங்குகளுக்காக குழந்தை கடத்தப்பட்டதா அல்லது குடும்பத்தினருடன் சாமியாருக்கு ஏதேனும் ரகசியத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடக்கிறது.

விடைதெரியாத புதிர்கள்

பிறந்தநாள் கொண்டாட்டம், ஒரே அறையில் தூங்கிய குடும்பத்தினர், திடீரென ஊரைவிட்டு ஓடிய சாமியார் என அனைத்துச் சந்தேகங்களும் ஒரே புள்ளியில் வந்து நிற்கின்றன. வெளிப்புறக் கடத்தல் கும்பல் குழந்தையைத் தூக்கிச் சென்றதா அல்லது குடும்பத்திற்குத் தெரிந்த நபர்களே இதற்குப் பின்னணியில் உள்ளனரா என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சிபிசிஐடி போலீசார் இரவு பகலாகத் துப்பறிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+