கனமழையால் இரவில் நடந்த துயரம்! வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தூங்கி கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பலி!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நடந்த இந்த விபத்தில், மாணவி முத்துச் செல்வியின் தாயார் சோலையம்மாளும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் சூழலில், வரும் நாட்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகி உள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்.26 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை வெளுத்து வாங்கியது.
மழையால் சாத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சுற்று வட்டாரப் பகுதிகளான சங்கரநத்தம், படந்தால், இருக்கன்குடி, சடையம்பட்டி, போத்திரெட்டிபட்டி, உப்பத்தூர், குமராபுரம், வெங்கடேஸ்வரபுரம், சிறுகுளம், கணபதியாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில், சாத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்தார். மேட்டமலை கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 12 ஆம் வகுப்பு மாணவி முத்துச்செல்வி உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மாணவியின் தாயார் சோலையம்மாள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
