விருதுநகர் அரசு அலுவலகத்தில் இப்படியொரு அதிகாரியா? மேஜை மீது பாருங்க.. மொத்த பேரும் ஸ்டன் ஆயிட்டாங்க
விருதுநகர்: அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் தங்களுடைய வேலை முடிய வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.. லஞ்சம் வாங்குவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஆங்காங்கே லஞ்சப் புகார்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் செய்துள்ள ஒரு விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது என்ன தெரியுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவருக்கு 56 வயதாகிறது. விருதுநகரை சேர்ந்த இவர், இதற்கு முன்பு தூத்துக்குடியில் பணியாற்றியுள்ளார்.

விருதுநகர் சாத்தூர்
இப்போது சாத்தூரில் பணியாற்றி வரும் மாரிமுத்து, தனது அலுவலக மேஜை மீது ஒரு போர்டு வைத்துள்ளார். அதில், "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்" என்று எழுதப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்கள்தான் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், மாரிமுத்து லஞ்சத்துக்கு எதிரான வாசகத்தை தனது மேஜை மீது வைத்திருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. அவருடைய இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்..
அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மட்டுமல்லாமல், அங்கு பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கும் இந்த வாசகம் ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்..
கடம்பூர் ராஜு மீது வழக்கு
இந்த "கறார் மாரிமுத்து" யார் தெரியுமா? ஏற்கனவே தேர்தல் பணியிலும் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கோவில்பட்டி தொகுதியில் பறக்கும் படை அதிகாரியாக மாரிமுத்து செயல்பட்டிருக்கிறார்.. அப்போது அதிமுக அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளார்.
லஞ்சம் புகார்கள்
தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள், தமிழகத்தில் லஞ்சம், ஊழலுக்கு இடமிருக்காது என்றும், ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு பொறுப்பேற்ற பிறகு, 3 மாதங்களுக்குள் ஊழலை ஒழிப்பதற்கான இலக்கை முதல்வர் நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பத்திரப்பதிவு போன்ற பணப்புழக்கம் அதிகம் உள்ள துறைகளில் லஞ்சப் புகார்கள் எழுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றைய தினம்கூட, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தா தாலுகாவில் பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா கைது செய்யப்பட்டார்.. இப்படி அடுத்தடுத்து லஞ்சப் புகார்கள் வெளியாகும் நிலையில், லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்ற வாசகத்தை தனது மேஜை மீதே வைத்துள்ள சாத்தூர் அரசு அதிகாரியின் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
