585 கி.மீ வேகத்தில் விழுந்த விமானம்.. கடைசி நொடியில் கேட்ட கூக்குரல்! புளோரிடாவில் பயங்கரம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பிசினஸ் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
விமான விபத்துக்கள் என்றாலே அது கொடூரமாகத்தான் இருக்கும். ஆனால் புளோரிடாவில் நடந்த விபத்து.. மிகவும் மோசமானதாக இருந்திருக்கிறது. விமானம் ஏறத்தாழ தலைகீழாக விழுந்திருக்கிறது. விழுந்த இடத்தில் பெரிய சைஸ் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

'லியர்ஜெட் 60' என்கிற ரகத்தை சேர்ந்த விமானம், டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. பஹாமாஸ் தீவுகளுக்கு போய் சேர வேண்டும்! இதுதான் பிளான். விமானம் திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் எல்லாம் ஓகேவாகத்தான் இருந்தது. ஆனால், கொஞ்ச தூரம் போன பிறகு விமானி ஒரு விஷயத்தை கவனித்தார். அதாவது விமானத்தின் இறக்கைகள் மீது பனி படிய தொடங்கியிருக்கிறது.
இப்படி நடந்தால், விமானத்தின் எடை அதிகரித்து.. அது கீழே விழுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். விமானம் இப்போது 35,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருக்கிறது. 41,000 அடி உயரத்துக்கு கொண்டு போனால், பனியின் தாக்கம் குறைவாக இருக்கும் என விமானி கணக்குப்போடுகிறார். எனவே இதற்காக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் விஷயத்தை சொல்லி அனுமதி கேட்கிறார். அனுமதியும் கொடுக்கப்படுகிறது. ஆனால், பிரச்சனையே இதற்கு அப்புறம்தான் தொடங்குகிறது.
விமானம் 35,000 அடி உயரத்திலிருந்து 36,000 அடி, 36,500 அடி என மேலே எழும்புகிறது. 37,000 அடியை எட்டும்போது.. மிகக்கடுமையான காற்று சுழற்சியில் விமானம் சிக்கியிருக்கிறது. இடி, மின்னல் மேகங்களுக்கு நடுவே விமானம் மாட்டிக்கொண்டது. அங்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே பனி காரணமாக விமானத்தின் கட்டுப்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு சிறிய தவறு நடந்தால் கூட.. மொத்தமும் கையை மீறி போய்விடும் என்று இருந்தது. சரியாக இந்த நேரத்தில்தான் காற்று சுழற்சியில் விமானம் சிக்கிக்கொண்டது. 'லியர்ஜெட் 60' என்பது சிறிய ரக விமானமாகும். காற்று அழுத்தத்தை சமாளிக்கும் அளவுக்கு இதன் வடிவமைப்பு இருக்காது.
எனவே, விமானம் உடனடியாக கட்டுப்பாட்டை இழக்கிறது. விமானி என்னென்னவோ செய்து பார்க்கிறார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை! விமானம் நேரடியாக தரையை நோக்கி பாய்கிறது. நிமிடத்திற்கு 35,000 அடி வேகத்தில் விமானம் பூமியை நோக்கி ராக்கெட் போல வந்துக்கொண்டிருக்கிறது. யோசிக்கவும், செயல்படவும் சில விநாடிகள் மட்டும்தான் நேரம் இருந்தது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்ததிலிருந்து 90 விநாடிகளில்.. அதாவது ஒன்றரை நிமிடத்தில் விமானம் பூமியில் மோதியிருக்கிறது. மோதும்போது விமானத்தின் வேகம் 585 கி.மீ. விமானத்தில் பயணித்த 9 பேரும் பலி. விமானம் விழுந்த இடத்தில் பெரிய சைஸில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து, இதுவரை நடந்த விமான விபத்துக்களில் மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது.
விபத்து நடந்த இடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும் மார்-அ-லாகோ இல்லத்திலிருந்து வெறும் 14 கி.மீ தொலைவுதான். டிரம்ப் வெளியில் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. விமானம் விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும், கடைசியாக விமானி அச்சத்துடன் பேசிய வாய்ஸ் கிளிப்பும் சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.


Click it and Unblock the Notifications
