டிரம்ப் கொடுத்த கோல்டன் ஆஃபர்.. முகத்தில் அடித்த மாதிரி நிராகரித்த கனடா
வாஷிங்டன்: அமெரிக்காவுடன் கனடா இணைந்தால் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த ஆஃபரை கனடா நிராகரித்துள்ளது.
கோல்டன் டோம் என்பது ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். உலகில் வான் பாதுகாப்பை வலிமையாக்கும் வகையில் கோல்டன் டோம் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டிருந்தார். எந்தப் பகுதியில் இருந்தும் அமெரிக்காவை தாக்க முடியாத வகையில், 175 டாலர்கள் பில்லியன் மதிப்பில் இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்றும், மூன்று ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - கனடா இடையேயான உறவுகள் மிகவும் மோசமாகி வருகின்றன. கூடுதல் வரி, அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் போன்ற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கோல்டன் டோம் பாதுகாப்பை கனடா அமெரிக்காவுடன் இணையாமல் சுதந்திர நாடாகவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் 61 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆனால், அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா இணையும் பட்சத்தில் இந்த டோம் பாதுகாப்பு அமைப்பு முழுமையாக கனடாவுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.
அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா இணைந்தால் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு இலவசமாக வழங்கப்படும் என்று டிரம்ப் கனடாவுக்கு ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார். ஆனால், அதிபர் விடுத்த கோரிக்கையை கனடா பிரதமர் மார்க் கார்னி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
கனடா பெருமை மிகுந்த சுதந்திரமான நாடு என்றும், நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் எந்தவொரு திட்டமும் தங்களுக்கு இல்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் கோல்டன் டோம் திட்டம் பற்றிப் பேசியிருந்தனர். அப்போது, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார்.
அப்போது, கனடாவுக்கு கோல்டன் டோம் பாதுகாப்பு சிறந்ததுதான். மக்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லதே என்றாலும் கனடா விற்பனைக்கு இல்லை. ஒருபோதும் விற்பனைக்கு கிடைக்காது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications