விரைவில் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க்! அதிபரே சொல்லிட்டாராம்.. என்ன காரணம்!
வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் டாஜ் துறையைக் கவனித்து வருகிறார். அதாவது அரசின் செலவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிப்பது இவரது பொறுப்பு. இதற்கிடையே சீக்கிரமே எலான் மஸ்க் தனது நிர்வாகத்தில் இருந்து விலகவுள்ளதாக டிரம்ப் தனது நெருங்கிய வட்டாரங்களிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் நிர்வாகத்தில் டாஜ் துறையின் தலைவராக எலான் மஸ்க் இருக்கிறார். அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைப்பதே எலான் மஸ்கின் பொறுப்பாகும். இருப்பினும், எலான் மஸ்க் எடுத்து வரும் நடவடிக்கைகள் கடந்த சில காலமாகவே பலருக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தி வருகிறது. இதனால் அவர் அரசு நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளது.

எலான் மஸ்க் விலகுகிறார்
இதற்கிடையே எலான் மஸ்க் விரைவில் தனது நிர்வாகத்தில் இருந்து வெளியேற உள்ளதாக அதிபர் டிரம்ப் தனது நெருங்கிய வட்டாரத்திடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட நெருங்கிய வட்டாரத்துடன் டிரம்ப் இந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளாராம். தற்போது டாஜ் துறையைக் கவனித்து வரும் எலான் மஸ்க் விரைவில் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகப் போகிறாராம்.
காரணம் என்ன
ஆனால், எலான் மஸ்க் விலகுவதால் அவருக்கும் டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு என்று அர்த்தம் இல்லை. எலான் மஸ்கின் செயல்பாடு அவரது டாஜ் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் டிரம்பிற்கு மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறதாம். இருப்பினும், எலான் மஸ்க் தனது பிஸ்னஸில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அலுவலகத்தில் உள்ள பெயர் குறிப்பிடப்பட விரும்பாத 3 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் அமைச்சரவை
எலான் மஸ்க்கை பொறுத்தவரை நாளுக்கு நாள் அவர் மீதான அதிருப்தி அதிகரித்தே வருகிறது. வெளியே மட்டுமில்லை.. டிரம்ப் நிர்வாகத்திலேயே பலரும் எலான் மஸ்க் மீது கோபத்தில் தான் இருக்கிறார்களாம். கணிக்க முடியாதபடி திடீர் திடீரென எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் தங்கள் நற்பெயரையும் பாதிப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.
மேலும், எலான் மஸ்க் சமீபத்தில் விஸ்கான்சின் உச்ச நீதிமன்ற தேர்தலில் பழமைவாத நீதிபதி பிராட் ஷிமெலுக்கு ஆதரித்தார். இருப்பினும், அந்தத் தேர்தலில் பிராட் ஷிமெல் சுமார் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எலான் மஸ்க் நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளதையே இது காட்டுகிறது. எலான் மஸ்க் நிர்வாகத்தில் தொடர்ந்தால் அது தங்கள் பெயரையும் பாதிக்கும் என டிரம்ப் அமைச்சரவையில் உள்ளவர்களே கூட கருதுகிறார்கள். இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் விரைவில் அரசு பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகை நிலைப்பாட்டில் மாற்றம்
அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தொடரவே வாய்ப்பு இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருந்தனர். டிரம்ப் டாஜ் துறையின் தலைவராக எலான் மஸ்க்கை அறிவித்தபோது அவரால் 130 நாட்கள் மட்டுமே அந்த பொறுப்பில் இருக்க முடியும் என்று இருந்தது. ஆனால், அதையும் தாண்டி டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தொடர்வார் என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் கடந்த மாதம் கூறியிருந்தனர். அந்த நிலைப்பாட்டில் தான் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் எலான் மஸ்க் வெறுமன ஆலோசகர் என்ற முறையில் டிரம்ப் நிர்வாகத்தில் தொடர வாய்ப்பு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதாவது எலான் மஸ்க் இப்போது டாஜ் துறையின் தலைவராக இருக்கும் சூழலில், அதில் இருந்து விலகலாம். ஆனால், ஆலோசகர் என்ற பதவியில் எலான் மஸ்க் தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்போது அவரது அதிகாரம் குறையும்.
எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டங்கள்
எலான் மஸ்க்கை பொறுத்தவரைச் சமீப காலமாகவே அவருக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இதனால் டெஸ்லா விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்லா பங்குகளும் கடுமையாகச் சரிந்துள்ளன. இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் அரசு பொறுப்பில் இருந்து விலகி மீண்டும் பிஸ்னஸில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கே கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் மே மாதம் இந்த பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications