ஐசியூவில் நடந்த திருமணம்.. புற்றுநோய் முற்றிய தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்! நெகிழ்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் 81 வயது தாய் புற்றுநோய் முற்றி ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற மகள் ஒருவர் தனது காதலனை மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் டொன்னா கம்மிங்ஸ். இவருக்கு வயது 81. இவர் தற்போது கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வடக்கு புளோரிடாவில் உள்ள எச்சிஏ புளோரிடா எனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐசியூவில் டொன்னா கம்மிங்ஸ்க்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இருக்கும் டொன்னா கம்மிங்ஸ்க்கிற்கு மகள் உள்ளார். அவரது பெயர் கேமி கம்மிங்ஸ். இவர் சாண்டி ஆடம்ஸ் என்பவரை விரும்பினார். இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கும் டொன்னா கம்மிங்ஸ் 'ஓகே' கூறினார். ஆனால் அதற்குள் டொன்னா கம்மிங்ஸ் புற்றுநோய் முற்றியது. 'ஸ்டேஜ் 4' என்ற நிலையை புற்றுநோய் எட்டியுள்ளது. இதனால் அவரை குணமாக்குவது கடினம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் மனம் வருத்தமடைந்த டொன்னா கம்மிங்ஸ் எப்படியாவது தனது மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.
இதுபற்றி மகள் கேமி கம்மிங்ஸ் மற்றும் அவரது காதலன் சாண்டி ஆடம்ஸ்ஸிடம் தெரிவித்தார். எனக்கு கடைசி ஆசை உள்ளது. அது உங்களின் திருமணத்தை பார்ப்பது தான் என்று கூறி கண்கலங்கினார். இதையடுத்து இருவரும் மருத்துவமனை ஐசியூவிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிததனர்.
மருத்துவமனை நிர்வாகமும் 'ஓகே' கூறியது. டொன்னா கம்மிங்ஸ் சிகிச்சை பெறும் ஐசியூவை அலங்கரிக்க செய்தனர். அங்கிருந்த சிகிச்சைக்கான உபகரணங்களை ஓரம்கட்டி இருவரும் திருமணம் செய்வதற்கு ஏற்ப அந்த அறையை மாற்றி கொடுத்தனர். டொன்னா கம்மிங்ஸ் மருத்துவமனை பெட்டில் இருக்க அவரது மகள் கேமி கம்மிங்ஸ் தனது காதலன் சாண்டி ஆடம்ஸ்ஸை கரம்பிடித்தார். அதன்பிறகு அனைவரும் கேக் வெட்டி திருமணத்தை கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications
