டிரம்பின் தலையெழுத்தை மாற்ற போகும் இந்தியர்கள்.. இன்னும் மூன்று வாரங்களில் நடக்க போகுது சம்பவம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு இந்திய வம்சாவளியினர் முக்கியத்துவம் பெறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தனது கண்ட்ரோலை தக்கவைக்க டிரம்பிற்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியம்! இதனால் இந்தியர்களின் வாக்கும் நன்கொடையும் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் டிரம்ப் தனது அதிகாரங்களை அப்படியே தக்கவைத்து கொள்ள இந்த தேர்தலில் வென்றாக வேண்டியது அவசியம். இதில் தோல்வி அடைந்தால் நாடாளுமன்றம் டிரம்ப் கட்சியின் கையைவிட்டு போய்விடும். பிறகு டிரம்பால் நினைத்த சட்டங்களை நினைத்த நேரத்தில் கொண்டு வர முடியாது. இதனால் மிட் டேர்ம் தேர்தல் முக்கியமானதாக மாறியுள்ளது.

இந்தியர்கள்
சமீப காலமாகவே அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடியேற்ற விவகாரம் இப்போது அமெரிக்க அரசியலில் முக்கிய விவாதமாகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், அங்கு வசிக்கும் சுமார் 52 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது. மெக்சிகோ மக்களுக்கு அடுத்து அங்கு இரண்டாவது பெரிய வம்சாவளியினராக உள்ள இந்தியர்கள், அதிக வருமானம் ஈட்டும் வம்சாவளியினர்களில் ஒருவராகவும் உள்ளனர்.
அதிகரிக்கும் பிரதிநிதித்துவம்
2012ம் ஆண்டுக்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலிப் சிங் சவுண்ட் 1957 முதல் 1963 வரையும், லூசியானாவை சேர்ந்த குடியரசு கட்சி உறுப்பினர் பாபி ஜிண்டால் 2005 முதல் 2008 வரையும் பதவி வகித்தனர்.
2012ல் கலிபோர்னியாவில் அமி பெரா வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்தது. ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 2017லும், ஸ்ரீ தானேதர் 2023லும், சுஹாஸ் சுப்பிரமணியம் 2025லும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போதைய பிரதிநிதிகள் சபையில் உள்ள ஆறு இந்திய வம்சாவளி உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள். 'சமோசா கூட்டணி' என்று அழைக்கப்படும் இந்த குழுவில் அமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ தானேதர், சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர்.
நம்பர் எவ்வளவு?
ஆனால் நவம்பர் 3 தேர்தலுக்கு பிறகு இந்த எண்ணிக்கை 6ல் இருந்து 4ஆக குறையலாம். கிருஷ்ணமூர்த்தியும் தானேதரும் பதவியிலிருந்து விலகுகிறார்கள். அரிசோனாவில் அமிஷ் ஷா என்பவரும் புளோரிடாவில் பியா தாண்டியும் போட்டியிடும் நிலையில், அவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே 6 இந்தியர்கள் என்ற பிரதிநிதித்துவம் நீடிக்கும். குடியரசு கட்சி சார்பில் ரிதேஷ் டாண்டன், நிரவ் ஷேத், மகேஷ் கணோர்கர் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஜனநாயகக் கட்சி வலுவாக உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதால் அவர்கள் வெல்வது கடினம். இதனால் இந்தியர்கள் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்தே அதிகம்!
இந்தியர்கள் வாக்குகள் ஏன் முக்கியம்?
அமெரிக்காவில் சுமார் 26 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.. குறிப்பாக பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா, டெக்சாஸ், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் இவர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது 66 சதவீத இந்திய அமெரிக்கர்கள் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும், 22 சதவீதத்தினர் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது அப்படியே வாக்குகளாக மாறினால் டிரம்பிற்கு சிக்கல் தான்.
வாக்கு மட்டுமின்றி இந்தியர்களின் நன்கொடைகளும் எங்கு செல்கிறது என்பது முக்கியம். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 1.5 லட்சம் டாலர்களை தாண்டுகிறது. இது அமெரிக்காவின் தேசிய சராசரி வருமானத்தைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். சிலிக்கான் வேலி, வால் ஸ்ட்ரீட், மருத்துவ துறை, சட்டம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்கள் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
நன்கொடை
அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி திரட்டுவது என்பது வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்தியர்கள் நன்கொடை எங்கு செல்கிறது என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. நடப்பாண்டில் அவர்கள் முந்தை தேர்தல்களை காட்டிலும் அதிகம் நன்கொடை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது யாருக்கு செல்கிறது என்பதை பொறுத்தும் தேர்தல் முடிவுகள் அமையும்.
இதனால் நம்பர் அடிப்படையில் ஒப்பீட்டளவில் சிறிய சமூகமாக இருந்தாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளும் அவர்கள் நன்கொடையும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications
