திடீரென வந்த வளைகுடா பணம்! குட்டையை குழப்பிய பாகிஸ்தான்.. டிரம்ப் தோல்விக்கு உண்மையான காரணம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த பின்னடைவுக்கு ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஆனால், அதையும் சேர்த்து டிரம்ப் ஆட்சியில் சாதாரண மக்களை விட அவரது குடும்பத்தினரும், கோடீஸ்வர நண்பர்களுமே அதிக பலன் பெறுகிறார்கள் என்ற விமர்சனமும் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த முடிந்த மிட் டேர்ம் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு மிக பெரிய வெற்றி கிடைத்தது. கடந்த 2024ல் டிரம்ப் அலையால் வென்ற பல இடங்களும் கூட இந்த முறை ஜனநாயக கட்சிக்கு வந்துவிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிரம்பின் கையை விட்டு போய் இருக்கிறது.

என்ன காரணம்
டிரம்ப் தோல்விக்கு ஈரான் போர், விலைவாசி உயர்வு காரணங்களாக சொல்லப்படுகிறது. அத்தோடு சேர்த்து இன்னொரு விமர்சனமும் எழுந்துள்ளது. அதாவது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசில் சாதாரண மக்களை விட டிரம்பின் குடும்பத்தினர், அரசியல் பாட்னர்கள் மற்றும் கோடீஸ்வர நண்பர்களே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்பதே அந்த விமர்சனம். அதாவது டிரம்ப் அரசின் கொள்கைகள் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதை தாண்டி, அவரது அரசு யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது என்ற கேள்வியும் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிரிப்டோ
இது தொடர்பாக அசோசியேட்டட் பிரஸ் அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பை நடத்தியிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஊழல் விவகாரத்தையே பெரிய பிரச்சனையாக கருதியுள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்விலும் அமெரிக்கர்களில் சுமார் 10ல் 6 பேர் டிரம்ப் தனது அதிபர் பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாகவோ லாபம் ஈட்டுவதாக கூறியிருந்தனர். இதுவே டிரம்பிற்கு இந்த முறை வேட்டு வைத்திருக்கிறது. டிரம்ப் குடும்பத்தின் கிரிப்டோகரன்சி முதலீடுகள், அவரது குடும்பத்தினரின் பிஸ்னஸ் ஆகியவை தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளன.
டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய World Liberty Financial என்ற கிரிப்டோகரன்சி நிறுவனம் இந்த சர்ச்சையின் மையத்தில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் இருந்து வந்த முதலீடுகளே முதலில் பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால் அமீரக நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ததாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவின் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பெறுவது தொடர்பாக அமீரகம்- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது இந்த முதலீடு வந்ததே சர்ச்சைக்கு காரணமாகும்.
சர்ச்சை தொடர்பு
டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் முதலீட்டு நிறுவனமான அபினிட்டி பார்ட்னர்ஸுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து பல பில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தங்கள் வந்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. இதே குஷ்னர் தான் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான டிரம்பின் தூதரக நடவடிக்கைகளிலும் பங்கேற்று வருகிறார். அதாவது ஒருபக்கம் டிரம்ப் அரசின் வெளியுறவு விவகாரங்களில் முக்கிய முடிவை எடுக்கும் குஷ்னர், மறுபக்கம் அதே நாடுகளிடம் இருந்து முதலீடுகளையும் பெறுகிறார். இதுவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. கடந்த ஜனவரி 2026ல், மீண்டும் இதே World Liberty Financial நிறுவனத்தின் துணை நிறுவனத்துடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்தது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான பண பரிவர்த்தனைகளுக்கு அந்த நிறுவனத்தின் USD1 என்ற டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்துவது குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டது.
அதாவது அமெரிக்க அதிபரின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தனியார் நிறுவனம், பாகிஸ்தான் அரசுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்திருந்தது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஒரு பிஸ்னஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதிபர் பதவியில் இருக்கும்போது நாட்டை வழிநடத்துவதே அவரது பிரதான வேலையாக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த நடவடிக்கைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை என்பது டிரம்பின் பிஸ்னஸ் நலனை பற்றி யோசித்து செயல்படுகிறதோ என்ற அச்சம் மக்களுக்கு வந்துவிட்டது.
உலக நாடுகள்
உலகளவிலும் டிரம்ப்பின் நண்பர்களுக்கு தேர்தல்களில் பின்னடைவே ஏற்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டில் ஜெய்ர் போல்சனாரோ, பிரிட்டனில் போரிஸ் ஜான்சன், இஸ்ரேலில் நெதன்யாகு என டிரம்பிற்கு நெருக்கமானவர்கள் வரிசையாக தங்கள் பதவிகளை இழந்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் பராகுவே நாட்டின் பிரதமர் சாண்டியாகோ பெனாவும் இணைந்துள்ளார்.
அந்நாட்டின் மிக பெரிய வங்கிகளில் ஒன்றான உஎனோ வங்கியில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது. இது பராகுவே நாட்டையே முடக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபர் சாண்டியாகோ பெனா ராஜினாமா செய்தார். பெனா டிரம்பின் நெருங்கிய பார்டனராக இருந்து வந்தார். அமெரிக்காவுடன் வலுவான தூதரக மற்றும் பொருளாதார உறவுகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடியும் டிரம்பின் சர்வதேச இமேஜை பாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications
