"வசூலிச்ச மொத்த பணத்தையும் எண்ணி டேபிளில் வை.." டிரம்பிற்கு எதிராக வழக்கு போட்ட பிரபல நிறுவனம்
வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றம் பரஸ்பர வரிகளை ரத்து செய்த நிலையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகவே ஃபெட்எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தன்னிடம் இருந்து வசூலித்த அனைத்துப் பரஸ்பர வரிகளையும் திரும்பத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு உலக நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார். உலகின் மற்ற நாடுகள் இத்தனை காலம் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்ததாகவும் அதற்குப் பதிலடி தரும் வகையிலேயே இந்த வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். சீனா தொடங்கி அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடுகளான இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் கூட இதில் தப்பவில்லை.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்
இந்தச் சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வரிகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அதாவது குறிப்பிட்ட பரஸ்பர வரியை விதிக்கும் அதிகாரமே அதிபருக்கு இல்லை என்றும் இதனால் வரிகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது டிரம்ப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு வந்தவுடனேயே அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கட்டிய வரியைத் திரும்பக் கேட்கும் என வல்லுநர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையே முதல் பெரிய நிறுவனமாக அமெரிக்காவின் முன்னணி டெலிவரி நிறுவனமான ஃபெட்எக்ஸ் நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. டிரம்ப் விதித்த வரிகளைச் சட்டவிரோதம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தன்னிடம் இருந்து வசூலித்த வரிகளை உடனடியாகத் திரும்பத் தர வேண்டும் எனச் சொல்லி ஃபெட்எக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
பெட்எக்ஸ் நிறுவனம்
இதற்காக அமெரிக்கச் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் பெட்எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை ரத்து செய்தது. அவசரக்கால அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது அவருக்கு ஒரு பெரிய அரசியல் பின்னடைவாக அமைந்தது. அதைத் தொடர்ந்தே பெட்எக்ஸ் நிறுவனம் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
முதல் வழக்கு
டிரம்ப் நிர்வாகத்தின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறைக்கு எதிராக ஃபெட்எக்ஸ் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. அதில் இத்தனை காலம் தான் இறக்குமதி செய்த பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் வசூலித்த வரியைத் திரும்பத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. முன்பே குறிப்பிட்டது போல உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, டிரம்ப்பிற்கு எதிராகப் பெரிய நிறுவனம் தொடுத்த முதல் வழக்கு இதுவாகும். இதில் பெட்எக்ஸ் நிறுவனம் எத்தனை கோடி கேட்டுள்ளது.. எவ்வளவு வரி செலுத்தியுள்ளது உள்ளிட்ட தகவல்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை.
சிக்கல் என்ன
அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் வரிகளைச் சட்டவிரோதம் என அறிவித்தாலும் கூட இதுவரை வசூலித்த வரிகளைத் திரும்ப அளிப்பது குறித்துத் தெளிவுபடுத்தவில்லை. இதனால் அங்கு ஒரு சிக்கலான சூழல் உருவாகியுள்ளது. அதாவது இதுவரை வசூலிக்கப்பட்ட வரிகள் தானாகத் திரும்பத் தரப்படாது. மாறாக ஒவ்வொரு நிறுவனமும் இதுபோல கீழமை நீதிமன்றத்திடம் முறையிட வேண்டும். அதில் தனித்தனியாகவே வழக்கு விசாரணை செய்யப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். எனவே, இந்த பிராசஸ் முடியச் சில ஆண்டுகள் வரையிலும் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது வரியை ரத்து செய்த உடனேயே டிரம்ப் நிர்வாகம் புதிய வரிகளை விதித்தது. அதன்படி அனைத்து உலக நாடுகள் மீதும் முதலில் 10% வரிகளை அறிவித்தார். பிறகு அந்த வரிகளை 15%ஆக உயர்த்தப்பட்டது. இன்று முதல் புதிய வரி முறை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications