இது முக்கியம்.. இந்தியாவிலிருந்து போனாலும் டிரம்ப் வரி "இந்த" பொருட்களுக்கு இல்லை! ஏன் தெரியுமா?
வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இந்த வரியால் இந்திய வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் எல்லா இந்தியப் பொருட்களுக்கும் ஒன்றும் அமெரிக்கா வரி விதிக்கவில்லை. பல பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளன. அப்படி அமெரிக்கா வரி விலக்கு கொடுத்த பொருட்கள் எவை.. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது வரிகளை அறிவித்தார். அதில் 25% வரி இம்மாதத் தொடக்கத்தில் அமலுக்கு வந்துவிட்டது. மீதமுள்ள 25% வரி நேற்று ஆகஸ்ட் 27ம் தேதி அமலுக்கு வந்தது. டிரம்ப்பின் இந்த வரியால் இந்தியா வர்த்தகர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்குப் பின்னடைவு
இதனால் அமெரிக்காவுக்கான இந்திய வர்த்தகம் 40- 50% வரை பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக ஜவுளி, தங்கம், ரத்தினங்கள் உள்ளிட்ட துறைகள் இதனால் மோசமாகப் பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவு தான் என்பதில் சந்தேகம் இல்லை.
எல்லா பொருளுக்கும் வரி இல்லை
அதேநேரம் இந்த வரியால் எல்லா துறைகளும் பாதிக்கப்படுவதாகச் சொல்ல முடியாது. சில துறைகளுக்கும் டிரம்ப் அரசு விலக்கு கொடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பொருட்களுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது.
வரி விலக்கு
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் சுமார் 30.2% பொருட்களுக்கு இந்த வரி விலக்கு கிடைக்கும். என்ன தான் டிரம்ப் 50% வரி போட்டாலும் இந்தப் பொருட்கள் ஜீரோ சதவிகித கூடுதல் வரியுடன் அமெரிக்கா சென்றடையும். இதுபோல வரி விலக்கு இல்லாமல் அமெரிக்கா போகும் பொருட்களின் மதிப்பு சுமார் $27.6 பில்லியன் ஆகும். முக்கியமாக மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்டிவ் பார்மாசூட்டிகல் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளுக்கு வரி விலக்கு தரப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் 56% பங்கு இந்த மருத்துவப் பொருட்களுக்கே வரி விலக்கு கிடைக்கிறது. அமெரிக்காவில் ஜெனரிக் மருந்து பிரிவில் இந்திய நிறுவனங்களுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. இந்த ஜெனரிக் மருந்துகள் பொதுவாக விலை குறைவாக இருக்கும். பெரும்பாலான அமெரிக்க மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். இதற்கு வரி விதித்தால் அமெரிக்கர்களே கோபம் கொள்வார்கள். இதன் காரணமாகவே டிரம்ப் தரப்பு மருத்துவப் பொருட்களுக்கு வரி விலக்கு கொடுத்துள்ளது.
மற்ற பொருட்கள்
அதேபோல ஸ்மார்ட்போன்கள், ஸ்விட்சிங் மற்றும் ரூட்டிங் கருவிகள், ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், பொருத்தப்படாத சிப்கள், டையோடுகளுக்கான வேஃபர்கள், மற்றும் சாலிட்-ஸ்டேட் ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மின்னணு ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கிறது. அதாவது தமிழகத்தில் ரெடியாகும் ஐபோன்களுக்கு அமெரிக்காவில் 50% வரி இல்லை.
அடுத்துச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பெட்ரோல், விமான எரிபொருள், புத்தகங்கள், பிரசுரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஃபெரோமேங்கனீஸ், ஃபெரோசிலிகான் மேங்கனீஸ், ஃபெரோக்ரோமியம், கணினி கருவிகள், நிக்கல், துத்தநாகம், குரோமியம், டங்ஸ்டன், பிளாட்டினம், பல்லேடியம், தங்கம், தங்க நாணயங்கள், இயற்கை ரப்பர், பவளம், எக்கினோடெர்ம்ஸ் மற்றும் கணவாய் எலும்பு போன்ற பல பொருட்களுக்கும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
எந்தப் பொருட்கள் எல்லாம் அமெரிக்கா தனக்கு அத்தியாவசியம் என கருதுகிறதோ.. அந்தப் பொருட்களுக்கு எல்லாம் வரி விலக்கு கொடுத்துள்ளது. இதுபோல அவர்களுக்குத் தேவையான பொருட்களுக்கு மட்டும் வரி விலக்கு தருவது ஒருதலைப்பட்சமானது தான் என்றாலும் கூட இதனால் இந்தியாவுக்கு ஓரளவுக்கு பலன் கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications