"மோடி நல்ல நண்பர் தான்.. ஆனால்.." இந்தியா மீது 26% ரெசிப்ரோக்கல் வரியை தடாலடியாக அறிவித்த டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவுக்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்போவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், நாடுவாரியாகவும் வரி விகிதங்களை அறிவித்தார். அதன்படி இந்தியா மீது 26% வரியை விதிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாகப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோக்கல் வரியை அமல்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் வணிக போரைத் தொடங்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ரெசிப்ரோகல் வரி
இதற்கிடையே ரெசிப்ரோகல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப்ரல் 3 அதிகாலை 1.30) செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், உலகில் எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி விதிக்கப் போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சார்டில் பல்வேறு நாடுகளின் பெயர்களும் அந்த நாட்டிற்கு எவ்வளவு சதவிகிதம் வரி என்பது குறித்த விவரம் இடம்பெற்று இருந்தது.
இந்தியா உட்பட பல நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரிகளை அறிவித்தார். அதன்படி இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி வசூலிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும், உலக நாடுகள் மீதான வரியில் சலுகை காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது முழுமையாகப் பரஸ்பர வரி இல்லை என்றும் உலக நாடுகள் வசூலிப்பதில் சுமார் 50% வரியை மட்டுமே அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு எத்தனை சதவிகிதம்
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பட்டியலைக் காட்டி டிரம்ப் விளக்கினார். அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா 52 சதவீத வரியை விதிக்கிறது என்று அவர் கூறினார். அதேநேரம் இனி இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 26% மட்டுமே வரி விதிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார். இந்த வரிகள் ஏப்ரல் 9ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா குறித்து டிரம்ப்
இந்தியா மீதான வரிகள் குறித்துப் பேசிய டிரம்ப், "கடந்த பிப்ரவரி மாதம் தான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வந்திருந்தார். நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர். ஆனால் மிகவும் கடுமையான வரிகளை இந்தியா நம் மீது விதிக்கிறது. அமெரிக்காவை இந்தியா சரியாக நடத்தவில்லை.
பிரதமர் சில வாரங்களுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்து சென்றிருந்தார்.. அப்போது அவரிடம் கூட இந்தியா அமெரிக்காவைச் சரியாக நடத்துவதில்லை என வரிகளைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.. இப்போது கூட அமெரிக்கா மீது இந்தியா 52 சதவீதம் இறக்குமதி வரியை வசூலிக்கிறது. நாங்கள் பல ஆண்டுகளாக அவர்கள் மீது எந்தவொரு வரியையும் விதிக்கவில்லை. இப்போது நான் வந்த பிறகே வரியை அறிவிக்கிறேன்" என்றார்.
அடிப்படை வரி
மேலும், வெளிநாட்டில் உற்பத்தி செய்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படை வரியாக 10 சதவீதம் இருக்கும் என டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுடன் அதிக வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு அதிக விகிதங்கள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மேலும் டிரம்ப், "உங்கள் தயாரிப்புகளுக்கு வரி இருக்கக்கூடாது என நினைத்தால் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள். அதுவே ஒரே தீர்வு" என்று அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியாவுக்குப் பாதிப்பு?
டிரம்ப்பின் இந்த இறக்குமதி வரியால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் ஏற்றுமதி என்பது அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை. பல்வேறு நாடுகளுக்கும் இருப்பதால் 3 முதல் 3.5 சதவிகிதம் மட்டுமே பாதிப்பு இருக்கும் என்றும் மற்றபடி பெரியளவில் இருக்காது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications