"ஈரானில் தோல்வி தான்.. டிரம்ப் ஒப்புக்கொள்ள வேண்டும்.." அமெரிக்காவில் இருந்தே கிளம்பிய பகீர் கருத்து
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனெட்டா எச்சரித்துள்ளார். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தெளிவான வழி இரு தரப்பிடமும் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு உலக நாடுகள் முயன்றுவிட்டன. இருப்பினும், இப்போது வரை போர் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. மேலும், இதில் மற்ற வளைகுடா நாடுகளும் உள்ளே வந்தால் மிக பெரிய மோதலாக வெடிக்குமோ எனவும் அஞ்சப்படுகிறது.

மத்திய கிழக்கு மோதல்
இதற்கிடையே அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்த காலத்தில் சிஐஏ இயக்குநராக பணியாற்றிய லியோன் பனெட்டா சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதாவது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இந்த போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்றே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மோதல் மேலும் 6 மாதங்களுக்கு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அமெரிக்காவும் ஈரானும் ஒரு போரை முடிக்க முடியாமல் சிக்கியுள்ளது என்பது ஒன்றும் ரகசியமல்ல. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தற்போது மிகவும் குறைவான வாய்ப்புகளே உள்ளன. மேலும், இந்த மோதல் மேற்கு ஆசியாவில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களை போன்ற மற்றொரு தோல்வியடைந்த போராக மாறக்கூடும். இந்த போர் தீர்வு எட்டப்படாமல் இன்னும் ஆறு மாதங்களுக்கு தொடரும் வாய்ப்பே அதிகம் என்று நான் கருதுகிறேன்" என்றும் பனெட்டா தெரிவித்துள்ளார்.
மூன்று வழிகள்
அமெரிக்க பாதுகாப்பு துறைக்குள் நிலவும் குழப்பம் குறித்தும் பனெட்டா கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் உயர்மட்ட தலைமைக்குள் ஏற்படும் குழப்பங்கள் அமெரிக்கா பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தற்போதைய சூழலில் மூன்று வழிகள் இருப்பதாகவும் பனெட்டா தெரிவித்துள்ளார்.
முதலாவதாக போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர் தோல்வியடைந்துவிட்டது என்பதை ஏற்று கொள்வது. இரண்டாவதாக தற்போது நடைபெற்று வரும் பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து அனுமதிப்பது. மூன்றாவதாக முக்கியமான உலக வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், அந்த வழித்தடத்தில் ஈரானின் கட்டுப்பாடுகளை அகற்றுவது என மூன்று வாய்ப்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
திணறும் அமெரிக்கா
அதேநேரம் போரை இப்போது முடிவுக்கு கொண்டு வர முடியாமல் அமெரிக்கா திணறி வரும் நிலையில், இதே நிலைமை சில காலத்திற்கு நீடித்தால் அமெரிக்க தலைவர்கள் தவிர்க்க விரும்பிய நீண்டகால மேற்கு ஆசிய மோதலாக இது மாறக்கூடும் என்றும் பனெட்டா எச்சரித்துள்ளார். அதாவது இதர வளைகுடா நாடுகளும் இதற்குள் வரும் என்றும் இது முடிவே இல்லாத நீண்ட கால போராக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் மறுப்பு
இருப்பினும், பனெட்டாவின் இந்த கருத்துகளை டிரம்ப் நிர்வாகம் மறுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ராணுவ தலைமை மத்தியில் குழப்பம் நிலவுவதாக பனெட்டா கூறிய கருத்துகளை டிரம்ப் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்தக் குழப்பமும் இன்றி செயல்பட்டு வருவதாகவும் தேவையான முடிவுகளை சரியாக எடுப்பதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
