அமெரிக்கா இடைக்கால தேர்தல்.. டிரம்ப் தோற்றால் அடுத்து என்ன நடக்கும்? பெரிய சிக்கலே இருக்கு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் டிரம்பின் குடியரசுக்கட்சி தோல்வி அடைந்தால், அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் அதிபர் டிரம்பின் அரசியல் செல்வாக்கு அடியோடு சரியும்.
அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக்கட்சி பின்னடவை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

என்ன மாதிரியான தாக்கம் ஏற்படக்கூடும்
அமெரிக்காவில் தானே தேர்தல் நமக்கென்ன என்று உலக நாடுகள் ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவுகள் ஒவ்வொன்றும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஈரானில் போர் தொடுக்கும் முடிவை டிரம்ப் எடுத்ததால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியாவின் கடை கோடி வரை எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது.
அதேபோல கூடுதல் வரி விதித்தால், பெரும் பொருளாதார தாக்கம் ஏற்படும். இப்படி சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா இருப்பதால், அந்த நாட்டின் தேர்தல் முடிவுகள் உலகமே உன்னிப்பாக கவனிக்கும் ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் கட்சி பின்னடவை சந்தித்துள்ளது. குடியரசுக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவால் அமெரிக்காவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படக்கூடும் என்ற விவரங்களை பார்க்கலாம்.
டிரம்பின் செல்வாக்கு அடியோடு சரியும்
குடியரசுக்கட்சி தோல்வி அடைந்தால், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதிபர் டிரம்பின் அரசியல் செல்வாக்கு அடியோடு சரியும். நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், டிரம்ப் அரசின் குடியேற்றக் கொள்கைகள், பெருநிறுவன ஊழல்கள் மற்றும் டிரம்ப் குடும்பத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. இது டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஒருவேளை குடியரசு கட்சி தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், டிரம்பின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். அவரது நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கருதி, டிரம்ப் மேலும் தனது கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடியும்.
சட்ட மசோதாக்களை நிறைவேற்ற
ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் பிரதிநிதிகள் சபை சென்றால், சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் சவால்கள் ஏற்படும். இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பே ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால், அவரது ஆர்டர்கள் நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். எனினும், அதிபருக்கு உரிய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்பால் உத்தரவுகளை பெற முடியும். சர்வதேச அளவில் பொறுத்தவரை டிரம்புக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால் அவரது ஈரான் போர் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் அவரது தீவிர நிலைப்பாட்டு மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications
