94 ஆண்டுகளுக்கு பிறகு.. டிரம்ப் கோட்டையில் கொடி நாட்டிய ஜனநாயக கட்சி! சம்பவம் செய்த அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில், அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்திருக்கிறது. குறிப்பாக 94 ஆண்டுகளுக்கு பிறகு.. முதன்முறையாக கேன்சாஸ் மாநில செனட் சபைக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த தொகுதியில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆடம் ஹாமில்டன், குடியரசு கட்சியின் வேட்பாளர் ரோஜர் மார்ஷலை வீழ்த்தியிருக்கிறார். இத்தனைக்கும் ரோஜருக்காக டிரம்பும், துணை அதிபர் வேன்ஸும் நேரில் சென்று பிரச்சாரம் செய்திருந்தனர். ஆனாலும் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

யார் இந்த ஆடம் ஹாமில்ட்?
62 வயதான இவர், அமெரிக்காவின் மிகப்பெரிய 'யுனைடெட் மெதடிஸ்ட்' திருச்சபையின் பாஸ்டராக உள்ளார். கிறிஸ்தவம் மற்றும் இறையியல் சார்ந்த 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். தன்னை ஒரு சுயாதீன சிந்தனை கொண்ட ஜனநாயகவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். மக்களின் பொருளாதார சுவை மற்றும் இரு தரப்பு இணக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து, பிரச்சாரம் செய்த இவர்.. எதிர்க்கட்சியினர் தன் மீது சுமத்திய தீவிர இடதுசாரி என்ற விமர்சனங்களை நிராகரித்தார். இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த தொகுதியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அதிரடி சோதனைகளை விமர்சித்த இவர்.. அதை குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக விமர்சித்து பேசியிருந்தார். இது வாக்காளர்களிடையே பெரிய அளவுக்கு எடுபட்டது.
அதே போல, எதிர் தரப்பில் போட்டியிட்டிருந்த ரோஜர் மார்ஷல், மருத்துவத் தொழிலை விட்டு அரசியலுக்கு வந்தவராவார். இவர், 2016ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கும், 2020ல் செனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்.. மருத்துவ கட்டணம் செலுத்தாத 700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவரது பின்னடைவுக்கு இந்த விஷயமும் ஒரு காரணமாக அமைந்தது.
இது தவிர, ஈரானில் ஏற்பட்டுள்ள போர் சூழலால்.. டீசல் மற்றும் உரங்களின் விலை உயர்ந்துள்ளதால் இந்த மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் வாக்குகளை பெற, இரு வேட்பாளர்களுமே முயன்றனர். அக்டோபர் 19ஆம் தேதி விசிட்டாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப், விவசாயிகளின் செலவை ஈடுகட்ட.. அமெரிக்க வேளாண் துறை மூலம் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான 'அறுவடை எரிபொருள் நிவாரண திட்டத்தை' அறிமுகப்படுத்துவதாக உறுதி அளித்திருந்தார். இருந்தும்.. இந்த அறிவிப்பு குடியரசு கட்சியின் தோல்வியை தடுக்க பெரியதாக கை கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications
