ரூ.23,000 கோடி மெகா டீல்.. ஐரோப்பாவின் 2வது பெரிய திரவ சேமிப்பு நிறுவனத்தை வாங்கும் அதானி!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஐரோப்பாவின் 5 நாடுகளில் 8 துறைமுக முனையங்களுடன் செயல்படும் Evos நிறுவனத்தை கையகப்படுத்துகிறது அதானி போர்ட்ஸ். இதன் மூலம் சர்வதேச துறைமுக மற்றும் போக்குவரத்து வணிகத்தை விரிவுபடுத்துகிறது.

அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் (APSEZ), நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Evos B.V. நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குகிறது. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய திரவ சேமிப்பு நிறுவனமான Evosஐ, இக்னியோ உள்கட்டமைப்பு பாட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து அதானி போர்ட்ஸ் வாங்குகிறது.

adani India

Evosஐ வாங்கிய அதானி

பங்குகளை கொடுத்து வாங்காமல்.. முழுமையான கேஷ் டீலாக நடைபெறவுள்ள இந்த ஒப்பந்தத்தில், Evos நிறுவனத்தின் மொத்த நிறுவன மதிப்பு 2.56 பில்லியன் யூரோவாகவும், பங்கு மதிப்பு 1.18 பில்லியன் யூரோவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.23,000 கோடியாகும்.

இதன் மூலம் ஐரோப்பாவில் 5 நாடுகளில் அமைந்துள்ள 8 துறைமுக முனையங்களை கொண்ட திரவ சேமிப்பு தளத்தை அதானி போர்ட்ஸ் உருவாக்க உள்ளது. 2025ம் ஆண்டின் EV/EBITDA அடிப்படையில் 11.7 மடங்கு மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

லாப வரம்பு

2025ம் ஆண்டில் Evos நிறுவனம் 392 மில்லியன் யூரோ வருவாயையும், 219 மில்லியன் யூரோ EBITDAவையும் ஈட்டியுள்ளது. இதன் EBITDA லாப விகிதம் 56 சதவீதமாகும். இந்த கையகப்படுத்தலுக்கு ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்களுடன், ஊழியர் மன்றத்தின் நடைமுறையும் தேவைப்படுகிறது.

நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், மால்டா ஆகிய நாடுகளில் Evos நிறுவனத்தின் 8 முனையங்கள் அமைந்துள்ளன. இவற்றின் மொத்த சேமிப்புத் திறன் 63 லட்சம் கன மீட்டர். 2025ம் ஆண்டில் இந்நிறுவனம் 3.7 கோடி மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.

ஏன் முக்கியம்

ஆம்ஸ்டர்டாம்-ராட்டர்டாம்-ஆண்ட்வெர்ப் பிராந்தியம், ஹாம்பர்க் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி உள்ளிட்ட ஐரோப்பாவின் முக்கிய எரிசக்தி மற்றும் தொழில் மையங்களில் இந்த முனையங்கள் அமைந்துள்ளன. மொத்தம் 452 சேமிப்பு தொட்டிகள், கப்பல்கள் மற்றும் படகுகளுக்கான 63 நிறுத்துமிடங்கள், பல்வேறு ஒருங்கிணைந்த குழாய் இணைப்புகள் இதில் உள்ளன. ஸ்கிபோல் விமான நிலையம் மற்றும் மத்திய ஐரோப்பிய குழாய் அமைப்புடனும் இவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, 10 நாடுகளில் உள்ள 28 துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் கொண்டதாக அதானி போர்ட்ஸின் சர்வதேச நெட்வொர்க் விரிவடையும்.

பெட்ரோல், கேஸ் ஆயில், கப்பல் எரிபொருள், விமான எரிபொருள் போன்ற வழக்கமான எரிபொருட்களுடன், நிலையான விமான எரிபொருள், பயோ எரிபொருட்கள், மெத்தனால், பயோஎத்தனால் உள்ளிட்டவற்றையும் Evos சேமித்து வருகிறது.

சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள்

சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள், தொழில் மற்றும் ரசாயன நிறுவனங்கள், சரக்கு வர்த்தகர்கள் என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இதன் பிஸ்னஸில் சராசரி சேமிப்பு மையத்தின் பயன்பாடு 99 சதவீதமாக உள்ளது. நீண்டகால வாடிக்கையாளர் உறவுகள், குறைந்தபட்ச கொள்முதல் உறுதியளிக்கும் ஒப்பந்தங்கள், ஆகியவை இதன் வருவாய்க்கு முக்கிய பங்காற்றுகிறது. மேலும், முதலீட்டு தர மதிப்பீட்டையும் Evos பெற்றுள்ளது.

உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து தளத்தை உருவாக்கும் தனது இலக்குடன் இதை செய்வதாக APSEZ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவில் தனது இருப்பை வலுப்படுத்துவதுடன், திரவ சேமிப்பு வணிகத்தையும் விரிவுபடுத்த முடியும். புதிய வகை எரிபொருட்களை நோக்கிய நீண்டகால மாற்றத்திலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

லாபம்

Evos நிறுவனத்தின் 56 சதவீத EBITDA லாப விகிதம், 2027 நிதியாண்டின் முதல் பாதியில் அதானி போர்ட்ஸின் சர்வதேச துறைமுக வணிகம் பதிவு செய்த 44.8 சதவீதத்தைவிட அதிகமாகும். இதன் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் அதிக லாப விகிதத்துடன் கூடிய மற்றும் கணிக்கக்கூடிய பணப்புழக்கம் அதானி நிறுவனத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக APSEZ நிர்வாக இயக்குநர் கரண் அதானி கூறுகையில், "ஒரு பில்லியன் டன் சரக்குகளை கையாளும் இலக்கையும், உலகளாவிய ஒருங்கிணைந்த போக்குவரத்து தளத்தை உருவாக்கும் முயற்சியையும் நோக்கிய பயணத்தில் இந்த கையகப்படுத்தல் முக்கிய மைல்கல்" என்றார்.

சர்வதேச துறைமுக வணிகத்தில் அதானி போர்ட்ஸ்

2026 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 2027 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் APSEZ நிறுவனத்திடம் ரூ.12,502 கோடி ரொக்க இருப்பு இருந்தது. 2027 நிதியாண்டின் முதல் பாதியில் சர்வதேச துறைமுக வணிகம் ரூ.3,586 கோடி வருவாயையும், ரூ.1,608 கோடி EBITDA-வையும் பதிவு செய்தது. EBITDA லாப விகிதம் 44.8 சதவீதமாக இருந்தது. சரக்கு கையாளும் அளவு முந்தைய நிதியாண்டின் முதல் பாதியில் 1.7 கோடி மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது 4.7 கோடி மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கொழும்பு, தான்சானியா, ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே இதற்கு காரணமாக இருந்துள்ளது.

அதானி போர்ட்ஸ் நிறுவனம் பற்றி!

அதானி குழுமத்தின் ஓர் அங்கமான APSEZ, சரக்குகளை துறைமுகங்களுக்கு கொண்டு வருவது, கையாள்வது, ரயில் போக்குவரத்து, போக்குவரத்து தளங்கள், கிடங்குகள், சாலை போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனமாகும். இந்தியாவின் கடற்கரைகளில் 16 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை இந்நிறுவனம் இயக்குகிறது. ஆஸ்திரேலியா, கொழும்பு, இஸ்ரேல், தான்சானியா ஆகிய நாடுகளிலும் 4 சர்வதேசத் துறைமுகங்கள் உள்ளன.

தற்போது ஆண்டுக்கு 671 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட APSEZ, இந்தியாவின் மொத்த துறைமுக சரக்கு போக்குவரத்தில் சுமார் 27 சதவீதத்தைக் கையாளுகிறது. 2031 நிதியாண்டுக்குள் இந்த அளவை ஒரு பில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+