Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார்’!

Subscribe to Oneindia Tamil

- மா.ச. மதிவாணன்

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை?

South East Aisas Socrates Thanthai Periyar E.V.R

- இது முதுபெரும் ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் எழுதியது.

செருப்பெடுத்து
அடிச்ச
போதும்
சிரிச்சவன்டா
பெரியார்

நாம
செருப்பு
போட்டு
நடக்கும்
இந்தச்
சிறப்புக்கு
உரியார்!

- இது பாவலர் அறிவுமதி எழுதியது.

கி.பி.2021-ம் ஆண்டில் நின்று கொண்டு இன்றைய இந்திய சமூகத்தை உற்று நோக்கிப் பாருங்கள். இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாடு மட்டும் தனிச்சிறப்புகளுடன் திகழக் கூடியதாக தெரியும்.

பெரும்பாலான இந்திய மாநிலங்களில் மனிதர்களின் பெயர்களில் ஜாதிய அடையாளம் இருக்கும். ஆனால் தமிழகத்தில் அதைப் பார்க்க முடியாது

பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் வீட்டுக்குள் முடங்கியவர்களாக இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பார்க்க முடியாது

பெரும்பாலான இந்திய மாநிலங்கள் கல்வியில் பின் தங்கி இருக்கும்; ஜாதிய மேலாதிக்கம், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடி நிற்கும். ஆனால் தமிழகத்தில் அப்படியெல்லாம் பார்த்துவிட முடியாது.

இப்படி ஒரு தனித்துவமான மானுடப் பண்புகள் விரிவானம் போல தமிழர் நிலத்தில் மட்டும் எப்படி விரிந்து கிடக்கிறது? இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களுக்கும் எழுச்சிக்கும் பிரதான காரணமாக ஒருவரைச் சொல்ல முடியும் எனில் அவர்தான் தந்தை பெரியார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் ஒரு ஜாதியின் ஆதிக்கம்தான் கோலோச்சிக் கொண்டிருந்தது. ஜாதி, மதம், சாஸ்திரங்கள், கடவுள்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்த சமூகத்தில் மிகக் குறைவான விழுக்காடு இருக்கும் அந்த ஜாதி மட்டுமே அத்தனை துறைகளிலும் கோலோச்சி கொடிகட்டிப் பறந்தது.

சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முந்தைய மண்ணின் மைந்தர்கள் பல்வேறு வகைப்படுத்தப்பட்ட அடிமைத்தனங்களில் சிக்கி சக மனிதர்களை, சரிபாதி பெண்களை ஈவிரக்கமற்ற வகையில் நடத்திக் கொண்டிருந்த பேரவலம் இந்தியா முழுவதும் இருந்தது. அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னை மாகாணம்தான் அதாவது இன்றைய தமிழ்நாடுதான் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியது.

பார்ப்பனரல்லாதார் சங்கம், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என இந்த கலகக் குரலின் வரலாறு நெடியது. இந்த வரலாற்றின் முன்னத்தி ஏர்களாக நடேசனார், சர் பிட்டி தியாகராயர், பனகல் அரசர் என பலரும் இருந்தாலும் சமரசமே இல்லாமல் சமூக விடுதலை, மக்கள் விடுதலை, மண் விடுதலை, மொழி விடுதலை, பெண் விடுதலை என அத்தனை திசைகளிலும் களமாடியவர் ஒருவர்தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற ஈ.வெ.ராமசாமி என்ற ஈ.வெ.ரா என்ற தந்தை பெரியார்.

எதன் பெயராலும் எவரது ஆதிக்கமும் கூடாது.. இதுதான் தந்தை பெரியாரின் தத்துவத்தின் ஒற்றை சாராம்சம். ஆதிக்கம் கூடாது என்று பேச்சுவாக்கில் முழங்கிவிட்டு மட்டும் செல்லவில்லை.. சண்டை செய்தார்... போராட்டம் நடத்தினார்.. சிறைவாசம் அனுபவித்தார்.. தமது தத்துவங்களை ஒட்டுமொத்த சென்னை மாகாணத்தின் மக்களுக்கும் கொண்டு சேர்த்தார்... அன்றைய கேரளாவில் வைக்கத்திலும் ஆதிக்கத்துக்கு எதிராக போய் போராடி சிறை தண்டனையை ஏற்றார்.

இன்றைக்கும் தந்தை பெரியார் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு அஜீரணமாகவே இருக்கிறது.. தந்தை பெரியார் என உச்சரித்தாலே நச்சரவம் போல இன்றைக்கும் ஒருசாரார் நடுங்குகின்றனர். இத்தனைக்கும் தந்தை பெரியார் ஜனநாயக பாதையை மட்டுமே நம்பினார்.. ஒருநாளும் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் அவர் இந்த மக்களுக்கு சொன்னது, நானே சொன்னாலும் உன் புத்தியை கொண்டு ஆராய்ந்து சரி என்றால் ஏற்றுக் கொள் என்கிற பகுத்தறிவைத்தான். அந்த பகுத்தறிவு போதனைகள்தான் தமிழ் மக்களை இன்றைக்கு இப்பாடியான ஒரு அறிவார்ந்த சமூகமாக செதுக்கி இருக்கிறது.

நம் தாத்தா காலம் வரை படித்திருக்க மாட்டார்கள்.. நம் அப்பா, அம்மாக்கள் காலம்தான் படிப்பின் அருமையை உணர்ந்தது. அதை நமக்குக் கடத்தினார்கள்.. நமது இன்றைய நல் வாழ்க்கைக்கு எல்லாம் காரணம் தந்தை பெரியார் என்று சொன்னால் வியப்புறுகிறார்கள் இளைய சமுதாயத்தினர். யதார்த்தமே அதுதான் என்பது இன்றைய தலைமுறைக்கு உரைக்க மறுக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக இந்தியாவின் அரசியல் சாசனத்தையே எரிக்கும் போராட்டத்தை நடத்திய வரலாறும் தந்தை பெரியாருக்கு உண்டு. தமது சாத்வீக ஜனநாயக வழிப் போராட்டத்தால் இந்தியாவில் அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு தொடர்பான முதலாவது திருத்தத்தை கொண்டுவந்து சாதித்தவரும் தந்தை பெரியார்தான்.

தந்தை பெரியார் தொடங்கிய அத்தனை ஜனநாயக யுத்தங்களும் மகத்தான வரலாறு கொண்டவை. 1938 முதலாவது இந்தி எதிர்ப்பு போர்.. இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக திருச்சியில் இருந்து பல நூறு பேர் கொண்ட பெரும்படையாக கால்நடை பயணம் சென்னை நோக்கி புறப்பட்டது. இன்று போல் அன்றைய சாலை பயணம் இல்லையே.. வரும் வழியிலேயே செத்து செத்து மாண்டவர்கள் எத்தனை எத்தனையோ பேர்.. இதையெல்லாம் திருச்சியில் இருந்து நகரதூதன் என்ற பத்திரிகை நடத்திய மணவை ரெ.திருமலைசாமி பக்கம் பக்கமாக எழுதி குவித்தார். அப்படியான பெரும்படை சென்னையில் ஒன்று திரண்ட போதுதான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு தமிழருக்கே என தந்தை பெரியார் பிரகடனம் செய்தார்.

South East Aisas Socrates Thanthai Periyar E.V.R

இப்படித்தான் பெரியாரை பகுத்தறிவால் ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சமரசத்துக்கும் எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் களமாடினார்கள். பெரியாரின் தளபதிகள் எத்தனை எத்தனையோ பேர் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறாமலேயே மக்கள் விடுதலைக்காக போராடி மாண்டு போயிருக்கிறார்கள். பெரியார்தான் பேரறிஞர் அண்ணாவை இந்த மண்ணுக்கு கொடுத்தார்.. பெரியார்தான் கருணாநிதியை இந்த நிலத்துக்கு கொடுத்தார்.. பெரியாரை தலைவராக கொண்ட திராவிட கட்சிகள்தான் இந்த தமிழ்நாட்டை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. இந்தியா நிலமெங்கும் வலதுசாரிகள் ஊடுருவ முடியும்.. தேர்தல் கண்ணாமூச்சிகளை விளையாடிக் காட்ட முடியும்.. வெல்லலாம்.. தோற்கலாம்.. ஆனால் தமிழ் மண்ணில் தலைகீழாக நின்றாலும் வலதுசாரிகள் வலம் வருவதற்கே குலைநடுங்கிப் போகக் காரணம் பெரியார்தான்.

தந்தை பெரியார் நூல்கள் ஒன்றும் நாட்டுடைமையாகிவிடவில்லை. தந்தை பெரியார் தத்துவங்கள் அப்படியாக ஒன்றும் முழு வீச்சோடு இந்த மண் பரப்பு எங்கும் சென்று சேர்ந்துவிடவில்லை. ஆனாலும் ஜனநாயக மரபுகளையும் மாந்த நேயத்தையும் பெருமளவு விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்... பெரியார் தத்துவங்களை தமிழகத்தை ஆளும் அரசாங்கம் கையில் எடுத்து வீதி தோறும் வீடு தோறும் பரப்பினால் எத்தகைய அதி அற்புதம் இங்கே நிகழும் என்பதை நாம் ஒருகணம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏனெனில் பெரியாரின் தத்துவங்கள் அறிவியல் பூர்வமானவை. அறிவை செதுக்குபவை. ஆக்கப்பூர்வமானவை. அதனால்தான் அறிவாசான், தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ் என தந்தை பெரியார் போற்றப்படுகிறார்.

தான் மரணித்து மண்ணுக்குள் புதைக்கப்படும் வரை என் மக்களை சாஸ்திரங்களின் படி கீழ்ஜாதி மக்களாகவும் அரசியல்படி அடிமைகளாகவும் விட்டுச் செல்கிறேனே என தவித்துப் புலம்பிய தந்தை பெரியார் நம்மை விட்டு பிரிந்த நாள்.. தந்தை பெரியார் நினைவுநாள் இன்று- இன்று நான் எழுவதுதற்கும் சிந்திப்பதற்கும் விதை போட்டது அந்த கிழவன் என்கிற பெருநன்றி எமக்கு உண்டு.. அந்நன்றி அத்தனை தமிழருக்கும் அவசியம் இருந்தால் அத்தனையும் சாத்தியம்! அறிவோம் பெரியாரை.. படிப்போம் பெரியாரை.. போற்றுவோம் பெரியாரை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+