கர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள் - சுக பிரசவத்திற்கு சொல்ல வேண்டிய மந்திரங்கள்
சென்னை: பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி பத்து மாதம் கர்ப்பத்தில் தங்கியிருக்கும் போது அந்த கருவின் வளர்ச்சிக்கு கடவுளின் ஆசி அவசியம். குழந்தைக்காக சிலர் தவமாக தவமிருக்கின்றனர். வரமாக கிடைத்த குழந்தை கர்ப்பத்தில் ஆரோக்கியமாக வளர பத்து மாதமும் வணங்க வேண்டிய தெய்வத்தையும் சுகபிரசவம் நடைபெற சொல்ல வேண்டிய மந்திரத்தையும் பார்க்கலாம்.
அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு.

முதல் மாதம் கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.
இரண்டாவது மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்திருக்கும். இதற்கு காரகம் செவ்வாய் அதிபதி. ஸ்ரீமுருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும் வணங்கவேண்டும்.
மூன்றாவது மாதம் குழந்தையின் கை, கால்கள் உருவாகியிருக்கும். குரு அதிபதி. இந்திரன், பிரம்மா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும்.
நான்காவது மாதம் குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனாரை வணங்கினால், கரு நல்ல வளர்ச்சி பெறும்.
ஐந்தாவது மாதம் குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் ஸ்ரீதுர்கை அம்மனை வணங்கவேண்டும்.
ஆறாவது மாதம் குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். இதற்கு சனி அதிபதி. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீவிநாயகரை வழிபடவும்.
ஏழாவது மாதம் பிராணன் உருவாகும். புதன் அதிபதி. ஸ்ரீவிஷ்ணுவை வணங்கவேண்டும்.
எட்டாவது மாதம் கருவின் உடல் வளர்ச்சி பெருகும். ஸ்ரீவிநாயகரை வணங்கவேண்டும்.
ஒன்பதாவது மாதம் கரு முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சந்திரனே அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் துர்கையை வழிபட வேண்டும்.
பத்தாவது மாதம் குழந்தை பிறந்துவிடுவதால் ஆத்ம பலம் பெறும். இதற்கு ஆத்மகாரகனான சூரியன் அதிபதி. சிவனாரை வழிபட வேண்டும்.
சுக பிரசவம் நடைபெற ஆரோக்கியமாக குழந்தை பிறக்க இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ய சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே.
இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை. கரு உருவானது முதல் பிரசவம் நடைபெறும் வரைக்கும் கர்ப்பரட்சாம்பிகையை தவறாமல் வணங்கி வர கரு ஆரோக்கியமாக வளரும் சுக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை.