
ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் குவியும் பக்தர்கள்..12 நாட்களில் 52 கோடி வசூல்..அறுபடைவீடு தரிசனம்
சபரிமலை: ஐயப்பசாமியை தரிசனம் செய்ய உலகமெங்கிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மலை எங்கும் சரணகோஷம் எதிரொலிக்கிறது. மண்டல பூஜைக்காலம் தொடங்கியது முதல் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 12 நாட்களில் மட்டும் 52 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமாகும்.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் ஐயப்பசாமி பிரம்மச்சாரியாக தவம் செய்து வருகிறார். ஐயப்பனை தரிசனம் செய்ய மாதந்தோறும் பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை மண்டல மகர பூஜை காலமாகும்.
ஒரே புகை மூட்டமா இருக்கே..சென்னைவாசிகள் அதிகாலை பேச்சு.. மூடுபனியால் ரயில்,விமான சேவை பாதிப்பு
சபரிமலையில் பிரம்மச்சாரியாக தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசனம் செய்ய மலையேறி வருகின்றனர். கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை நடை திறக்கப்படுவது முதல் இரவு கோவில் நடை அடைக்கப்படுவது வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பதினெட்டாம் படியேறி சபரிமலை ஐயப்பனை தரிசிக்கின்றனர். விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் மட்டும் ஒன்றே முக்கால் லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வருகிற 30ஆம தேதி வரை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். உடனடி முன்பதிவையும் சேர்த்தால் 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கோவிலில் குவியும் வருமானம்
கடந்த 12 நாட்களில் மட்டும் கோவிலுக்கு 52 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது கடந்த ஆண்டு இதே காலத்தில் 9 கோடியே 92 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் கண்டெய்னர் அரவணை பிரசாதம் விற்பனையாகி வருவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

ஐயப்பனின் அறுபடை வீடுகள்
சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எரிமேலி,பந்தளம் ஆகிய ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.
பிரம்மச்சாரி கடவுளான சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாத பெண்கள் அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஐயப்பனை இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் தரிசனம் செய்து வரலாம்.

பால சாஸ்தா குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது குளத்துப்புழா. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இங்கு சுற்றுலா போல அனைத்து தரப்பு மக்களும் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம். இங்கு கோயிலுக்கு அருகில் கல்லடையாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் மீன்களுக்கு பொரி போடுவது ஒரு வித வழிபாடாகவே இருக்கிறது. மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோயில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல்ஆரோக்கியம் போன்ற விஷயங்களில சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள். இக்கோயிலில் தை மாதம் முதல் தேதி மகர விளக்கு வைபவமும் மிக விமரிசையாக நடக்கும்.

ஆரியங்காவு ஐயப்பன் தரிசனம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் ஆரியங்காவு அமைந்துள்ளது. பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரே திருத்தலம் ஆரியங்காவுதான். இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் ஐயப்பன். இங்கு திருமண கோலத்தில் காட்சி தரும் ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த ஐயப்பனை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை

அச்சன்கோவில் அரசன் கல்யாண சாஸ்தா
செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அச்சன்கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா - புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கின்றனர். இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை பெரும் மருத்துவர் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அச்சன்கோவில் ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும். பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம். அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பந்தளம் அரண்மனை
வனத்தில் கண்டெடுக்கப்பட்ட மணிகண்டன் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன. பெட்டியை மலைக்கு கொண்டு போகும்போது பகவான் விஷ்ணு கருடன் வடிவில் பெட்டிக்கு காவலாக வருவதாக ஐதீகம். பெட்டியை மலைக்கு கொண்டு செல்ல அந்த குறிப்பிட்ட நாள் அன்று அனைத்தும தயாராக இருந்தாலும் வானத்தில் கருடன் தெரிந்த உடன் தான் அவர்கள் மலைக்கு கிளம்புகிறார்கள். பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் ஐயப்பன் என்றாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரி மலைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செல்வர்கள். காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என்று ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

எருமேலி வேட்டைக்காரர்
எருமேலியில் ஐயப்பன் வேட்டைக்கு செல்வது போல கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். சபரிமலை தர்மசாஸ்தாவை தரிசனம் செய்யும் முன்பு கன்னி சாமிகள் பேட்டை துள்ளி வேடமிட்டு பக்தர்கள் நடனமாடுவார்கள். சபரிமலைக்குச் செல்ல மரபுவழிப்பாதை எருமேலியிலிருந்துதான் தொடங்கும். இங்கு பேட்டை துள்ளி நீராடி பக்தர்கள் புறப்படவேண்டும். இங்கு சாஸ்தாவிற்கு சிறியதும், பெரியதுமாக இரண்டு கோயில்கள் உண்டு. இந்த இரு கோவில்கள் தவிர வாவர் மசூதியிலும் வழிபாடுகள் நடக்கும்.இங்கு அனைத்து தரப்பு பக்தர்களும் சென்று தரிசனம் செய்வது முடியாத காரியம்.

எங்கும் ஒலிக்கும் சரணகோஷம்
சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் பயணக்களைப்பு நீங்க சாமியோ சரணம் ஐயப்பா என்ற பக்தி முழக்கமிட்டு செல்வார்கள். கால்களில் செருப்பு அணியாமல் மலை மீது ஏறும் பக்தர்கள் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா தூக்கி விடப்பா ஏற்றி விடப்பா என்று ஐயப்பனை அழைத்துக்கொண்டே செல்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்வதால் மலை எங்கும் சரண கோஷம் எதிரொலிக்கிறது.