For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பில்லி,சூனியம், பெரும்பகை அகல..பொல்லா நோய்களும் பொடி பொடியாக.. கந்த சஷ்டி கவசம் இப்படி படிங்க!

Google Oneindia Tamil News

மதுரை: கந்த சஷ்டி திருவிழா முருகன் ஆலயங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எங்கும் கந்த சஷ்டி கவசம் பாடல்கள் ஒலிக்கின்றன. காக்க காக்க கனகவேல் காக்க.. என்று பலரும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார்.

பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம் தான் அனைவராலும் பாடப்படுகிறது.

கந்த சஷ்டி 2022: கந்தன் அருளால் இனி இந்த ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும்..எதிரிகள் தொல்லை ஒழியும் கந்த சஷ்டி 2022: கந்தன் அருளால் இனி இந்த ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும்..எதிரிகள் தொல்லை ஒழியும்

சஷ்டி கவசம் உருவான வரலாறு

சஷ்டி கவசம் உருவான வரலாறு

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை எப்படி என்று சமூக வலைத்தள பக்கமான முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலதேவராய சுவாமிகள் ஒரு சமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான்காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

நோய் நீக்கிய சஷ்டி கவசம்

நோய் நீக்கிய சஷ்டி கவசம்

சஷ்டியை நோக்க சரவண பவனர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...! கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் 'சிரகிரி வேலவன்' எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை. அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்று வலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.

கடன், நோய் எதிரி தொல்லை நீங்கும்

கடன், நோய் எதிரி தொல்லை நீங்கும்

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

அழகன் முருகன்

அழகன் முருகன்

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

 காக்க காக்க

காக்க காக்க

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள் காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

 பயத்தை போக்கும் முருகன்

பயத்தை போக்கும் முருகன்

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

பில்லி சூனியம்

பில்லி சூனியம்

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்கள் நீக்கும் கவசம்

நோய்கள் நீக்கும் கவசம்

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

சஷ்டி கவசத்தை எப்படி படிப்பது

சஷ்டி கவசத்தை எப்படி படிப்பது

கந்தர் சஷ்டிக் கவசத்தை ஆறுமுகப் பெருமான் முன்பாக அமர்ந்து நாள்தோறும் படிப்பது நல்லது. அதற்கு அவகாசம் இல்லாதோர் செவ்வாய்க்கிழமை தோறும் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை படித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வம்சவிருத்தி, காரிய வெற்றி, நோய் நீக்கம், கிரக தோஷ நிவர்த்தி, அறிவு செல்வ வளர்ச்சி, திருமணம் கைகூடும்.. பேய் பிசாசு பயம் நீங்கும். பில்லி சூனியங்கள் அண்டாது.

கந்தன் கருணை

கந்தன் கருணை

"கந்தர் சஷ்டிக் கவசத்தை எப்படிப் பாடினால் பயன் கிடைக்கும் ?" என்ற கேள்விக்கு தேவராய சுவாமிகளே அவரது கவசப்பாடலின் பிற்பகுதியில் சொல்லியுள்ளார். தூய்மையான மனத்தோடும் உடலோடும், சந்தேகம் சிறிதுமில்லாத உண்மையான..நம்பிக்கையோடும், கந்தன் கருணையால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விடாமல் பாடிவருவோர்க்கு கந்தனின் கருணை .. அருள் .. எளிதில் கிடைக்கும் என்று தேவராயரே தெளிவாக கூறியுள்ளார்.

 உண்மையான பக்தி

உண்மையான பக்தி

கந்தர் சஷ்டிக் கவசத்தை எத்தனை நாட்கள் படித்தோம் என்பதை விட உண்மையான பக்தியோடு
எப்படி படித்தோம் என்பதே மிகவும் முக்கியம். தன்னலமில்லாத ஆழ்ந்த தெய்வ பக்தி இருந்தால் நீங்கள் ஒருமுறை கந்த சஷ்டி கவசம் படித்தாலே கருணையின் கடலாகிய கருணா மூர்த்தி கந்தப் பெருமான் நம்மை காக்க ஓடி வருவார். செவ்வாய், வெள்ளி, சஷ்டி, பரணி நட்சத்திர நாளில் இரவு, கார்த்திகை, விசாகம் நட்சத்திர நாட்களில் இந்தக் கவசத்தை சிறப்பாகப் படிக்கவேண்டும். கவச பாராயணத்துக்கு முன்னும் பின்னும், .. சரவணபவ .. என்னும் முருகப் பெருமானின் மூலமந்திரத்தை .. ஓம் .. சேர்த்து "ஓம் சரவணபவ" என 108 முறைகள் கூறவேண்டும். அதுதான் பலன்தர வழிசெய்யும். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் விடாது மனம் உருகி படிக்க அந்த முருகனே காட்சி தந்துவிடுவார்.

நம்பினோர் கெடுவதில்லை

நம்பினோர் கெடுவதில்லை


கந்த சஷ்டி கவச பாராயணம் பாடி முடித்த பிறகு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், கந்தபுராணம் ஆகிய கந்தர் பஞ்ச புராணங்களிலிருந்து ஒவ்வொரு பாடல் வீதம் முறையே பாட வேண்டும். பாராயணம் முடிந்ததும் ஆறுமுகன் திருவுருவத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி ஓம் வடிவமாகக் காட்டி வணங்க வேண்டும். கந்த சஷ்டி நாட்களில் விரதமிருந்து புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் சஷ்டியில் படிப்பதற்கு இந்தக் கவசமே மிகவும் சிறந்தது. நம்பினோர் கெடுவதில்லை அது நான்கு மறை தீர்ப்பு. கந்தன் கைவிடமாட்டான். கட்டாயம் காத்தருள்வான் நம் கவலைகளைத் தீர்ப்பான் கந்தன்.

English summary
Skanda sashti festival is celebrated today in Murugan temples. Kanda Shashti Kavasam songs are playing everywhere. Many people are singing Kakka Kakka Kanakavel Kakka..Kanda Shashti Kavasa protects us from evils and hardships. Armor means something that can protect us. Warriors wear armor to protect their bodies in battle. Here Kanda Shashti Kavasa protects us from evils and hardships.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X