மகாளய அமாவாசை 2022.. பெண்கள் மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..தோஷம் ஏற்படுமாம்!
சென்னை: மகாளய அமாவாசை நாளை ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் பெண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாமா என்று பலரும் கேட்டு வருகின்றனர். மறைந்த முன்னோர்களுக்கு நாம் எப்படி தர்ப்பணம் கொடுப்பது அமாவாசை நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்பணம், வருஷ ஸ்ரார்தம், மஹாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் முக்கியமான தர்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசையும் மகாளய அமாவாசையும் முக்கியமான ஒன்றாகும். அதேபோல உத்தராயணத்தில் தை அமாவாசையும் முக்கியமானது.

மகாளய பட்ச காலங்கள்
மகாளய பட்ச காலத்தில் நம்முடன் இருக்கும் முன்னோர்களை நாம் சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

பித்ரு தோஷம் பாதிக்கும்
குடும்பத்தில் இயற்கையாக மரணித்தவர்கள் தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையான கர்மகாரியங்களை செய்வது அவசியம். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் பித்ருலோகத்தை அடையும். அவ்வாறு செய்யாமல் விடுவதன் மூலம் பலவித தோஷங்கள் ஏற்படுகின்றன. அவை ஜாதகக் கட்டங்களில் அமர்கின்றன.

காரியத்தடைகள் உண்டாகும்
இதனால் நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியினருக்கும் திருமண தடை, குழந்தையின்மை ஏற்படும். வேலையில்லாத நிலையும், எதற்கெடுத்தாலும் பிரச்சினை, தீராத நோய்கள், கடன் பிரச்சினை என வாட்டி வதைக்கும். இதனால் கோபம், மன உளைச்சல், நிம்மதியற்ற வாழ்க்கையால் சிலருக்கு தற்கொலை சிந்தனை ஏற்படும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது ஏன்?
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின் பிண்ட ரூபத்தில் இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்பணம் செய்வதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.

எள்ளும் தண்ணீரும்
சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு சனீஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம்.

தானம் செய்தால் பாவம் தொலையும்
புனிதமான மகாளய அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. சிலர் தண்ணீர் கூட தானமாக தரலாம். ரொம்ப முக்கியமானது அன்னதானம்தான். நம் முன்னோர்களை மகிழ்விக்கும்.

யார் விரதம் இருக்க வேண்டும்
தாய் தந்தை இருக்கும் போது ஆண்கள் அமாவாசை விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை ஆனால் தாய் அல்லது தந்தை ஒருவர் இல்லையென்றாலும் இருவரும் இல்லையென்றாலும் இந்த அமாவாசை விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருமணமான பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்க கூடாது. குறிப்பாக அவர் கணவர் இருந்தால் கண்டிப்பாக விரதம் கூடாது.

பெண்கள் தர்ப்பணம் தரலாமா?
அந்த பெண்ணுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தால் அவர்கள் தான் அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்பெண்ணுக்கு சகோதரர்கள் யாரும் இல்லாத நிலையில் தாய் மட்டும் இருந்தால் அவர் விரதம் இருக்கலாம். தர்ப்பணம் கொடுக்கலாம். அதே போன்று அப்பா இருந்து அம்மா இல்லாத நிலையில் அவர் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.

பெண்கள் செய்யக்கூடாதவை
அப்பெண்ணுக்கு யாரும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் இருவரும் இல்லை. உடன் பிறந்தவர்களும் இல்லை என்றால் அப்பெண் விரதம் இருக்க கூடாது. முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டு வழிபாடு செய்யலாம். அதிலும் கணவர்கள் உயிருடன் இருக்கும் போது பெண்கள் விரதம் இருக்கக் கூடாது. கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். கோயிலுக்கு சென்று தானம் செய்யலாம். அமாவாசை நாளில் அன்னதானம் செய்யலாம்.

என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
மகாளய அமாவாசை நாளில் வீடு வாசலை சுத்தம் செய்து முன்னோர்களை வரவேற்க வேண்டும். மறந்தும் வாசலில் கோலம் போடக்கூடாது. வீட்டில் சைவ உணவுகளை சமைத்து நம்முடைய முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்களை வைத்து படைத்து காகத்திற்கு உணவு வைத்து விட்டு நாம் சாப்பிட வேண்டும். மறக்காமல் சிலருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.

பித்ரு தர்ப்பண ஸ்தலங்கள்
இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி.ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். திருச்சி காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். உங்களுடைய ஊருக்கு அருகில் உள்ள பித்ரு தர்ப்பண ஸ்தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் நீங்கும்.












Click it and Unblock the Notifications