For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி பவுர்ணமி..சதுரகிரிக்கு சாமி தரிசனம் செய்யப்போறீங்களா? பக்தர்களுக்கு வனத்துறை குட்நியூஸ்

Google Oneindia Tamil News

விருதுநகர்: மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளனர்.கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.

சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்குவதற்கு வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது அகஸ்தியர் நாடி.

Margazhi Pournami: Forest department 4 days permission for devotees to go to Sathuragiri Temple

காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.

Margazhi Pournami: Forest department 4 days permission for devotees to go to Sathuragiri Temple

சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.
இதனையடுத்து பச்சரிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசனம் செய்யலாம். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் சுந்தரமூர்த்தி லிங்க வடிவத்தில் வீற்றிருக்கிறார். இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம். சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இந்த அம்மனின் சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

Margazhi Pournami: Forest department 4 days permission for devotees to go to Sathuragiri Temple

பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.

இன்றைக்கும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி வந்து மலையேற சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து செல்கின்றனர். அமாவாசைக்கு 4 நாட்களும் பவுர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மழை காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.

மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 7ஆம் தேதி வரைக்கும் சதுரகிரியில் மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், பக்தர்கள் இரவில் மலை மேலே தங்குவதற்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் உரிய விதிமுறைகளை பின்பறி சாமி தரிசனம் செய்யலாம்.

English summary
The forest department has given permission for devotees to visit Chaturagiri Sundaragiri Mahalingam temple for 4 days on the occasion of Margazhi Poornami. People with fever, cold and cough should avoid visiting the temple. The forest department also said that people below 10 years of age and people above 60 years of age are not allowed to climb the mountain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X