சொந்த வீடு கட்ட ஆசையா?.. செவ்வாய்கிழமை செய்யும் பரிகாரம்.. சீக்கிரமே கிரகப்பிரவேசம் செய்ய வைக்கும்
சென்னை: எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வாடகை வீட்டில் வசிக்கும் பலருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். சொந்த வீடு கட்ட விரும்புபவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமையான இன்றைய தினம் செய்யும் பரிகாரம் சொந்த வீடு வாங்கும் யோகத்தை கொடுக்கும்.
பூமி காரகன்: நவ கிரகங்களில் செவ்வாய் அருள் இல்லாமல் சொந்த வீட்டை நாம் எளிதாக வாங்கிவிட முடியாது. சொந்த வீடு கட்டுவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்க வேண்டும். செவ்வாய் பகவான் பூமி காரகன். பூமி காரகனாக இருக்கும் இந்த செவ்வாய் பகவான் சொந்த வீடு வாங்கும் யோகத்தை ஒருவருக்கு கொடுக்கிறார்.

பூமாதேவி: பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்த வீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம். செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடம் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு நாம் நன்றிக்கடன் செலுத்தலாம்.
முருகன்: செவ்வாய்க்கு அதிபதியாக இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும். தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லா சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.
செவ்வாய்கிழமை விரதம்: செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் சாப்பிட்டு, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். வழக்கமான வேலைகளை செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால் வீடு கட்டும் யோகம் தேடி வரும்.
செவ்வாய்: பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார். நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வந்து வணங்க செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் தேடி வரும்.
வாடகை பணம்: பூமி காரகனாக விளங்கும் செவ்வாய் பகவானுக்குரிய தானியம் துவரம் பருப்பு ஆகும். துவரம் பருப்பை தானம் செய்பவர்களுக்கு செவ்வாய் அருள் கிடைக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டிற்காக நீங்கள் அந்த வாடகை பணத்தை உரிமையாளரிடம் கொடுக்கும் போது வீட்டின் வாடகை பணத்தை துவரம் பருப்பில் வைத்துக் கொடுப்பது சிறந்த பரிகாரமாக இருக்கும்.
துவரம்பருப்பு தானம்: உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கும் துவரம் பருப்பு டப்பாவில் ஒரு பாலித்தீன் பையில் திங்கட் கிழமை காலையில் பணத்தை வைத்து விடுங்கள். செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமை செவ்வாய் என்பதால் மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று நீங்கள் வாடகை பணத்தை மதியம் 12 மணிக்குள் கொடுங்கள். பணத்தை அக்கவுண்டில் போடுகிறோம் என்று சொல்பவர்கள் செவ்வாய்கிழமை செலுத்தவும். முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆறு பேருக்கு துவரம் பருப்பை தானம் செய்ய வேண்டும். இதன் மூலம் விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.
சிறுவாபுரி: வீடு கட்டும் யோகம் தரும் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். சிலர் சொந்த ப்ளாட்கூட வாங்கியிருக்கின்றனர். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்குச் சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
வாஸ்து சாஸ்திரம்: பொதுவாக வீடு கட்டும் முன்பே வாஸ்து பார்த்து அதற்கு ஏற்றவாறு கட்டுவது அவசியம். கட்டிய வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அதற்கு சில பரிகாரங்களும் உள்ளன. அதே போல ஒரு சொந்த வீடு என்றாலும் வாடகை வீடு என்றாலும் அந்த வீட்டில் எந்த பொருளை எங்கு வைத்தால் நமக்கு நன்மைகள் பெருகும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சங்கு வழிபாடு: வீடுகளில் உள்ள வாஸ்து குறைபாடுகளை போக்க உதவுகிறது சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். அதோடு பிரதி வெள்ளிக்கிழமைகளில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு வீடு முழுக்க தெளித்தால் அந்த வீட்டில் உள்ள சகல தோஷங்களும் விலகும். வீட்டில் சங்கு இல்லாதவர்கள் சங்கை கையில் ஏந்தியவாறு உள்ள மகா லட்சுமியின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைப்பதன் பலனாக வாஸ்து தோஷம் நீங்கும்.
புல்லாங்குழல்: அதே போல புல்லாங்குழலை வீட்டில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெருகும், பணக்கஷ்டங்கள் நீங்கும். அதோடு வீட்டில் இருக்கும் சில வாஸ்து குறைபாடுகள் நீங்கி இதமான மனநிலை உருவாகும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதனால் வீட்டில் நிம்மதி அதிகரிக்கும் பண வரவும் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கவும், சொந்த வீட்டில் வசிப்பவர்களும் மகிழ்ச்சியோடு வசிக்கவும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.












Click it and Unblock the Notifications