தைப்பொங்கல்.. தைப்பூசம்.. தை அமாவாசை.. தை மாதத்தில் என்னென்ன விரத நாட்கள்
சென்னை: தை மாதம் உத்தராயண புண்ய காலம் தொடங்குகிறது. தை மாதத்தில் முதல் நாள் தொடங்கி மாதம் முழுவதுமே பண்டிகை நாட்களும், விரத நாட்களும் உள்ளன. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை தொடங்கி தை கிருத்திகை, தைப்பூசம், தை அமாவாசை என மாதத்தின் 30 நாட்களும் விஷேச நாட்களாக உள்ளது சிறப்பு.

தை மாத முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள்:
தை 01 - ஜனவரி 15 (திங்கள்) - தைப்பொங்கல் - சூரிய பகவானுக்கும், குல தெய்வத்திற்கும் பொங்கல் வைத்து வழிபடலாம்.
தை 02 - ஜனவரி 16 (செவ்வாய்) - மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், சஷ்டி - கால்நடைகளுக்கு பொங்கல் வைக்கலாம். செவ்வாய்கிழமை சஷ்டி சிறப்பு வாய்ந்த நாள்.
தை 03 - ஜனவரி 17 (புதன்) - காணும் பொங்கல், உழவர் திருநாள்
தை 06 - ஜனவரி 20 (சனி) - தை கிருத்திகை - தை மாதம் வரும் கிருத்திகை சிறப்பு வாய்ந்த நாள். முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.
தை 07 - ஜனவரி 21 (ஞாயிறு) - பீஷ்ம ஏகாதசி
தை 08 - ஜனவரி 22 (திங்கட்கிழமை) - பீஷ்ம துவாதசி, கூர்ம துவாதசி
தை 09 - ஜனவரி 23 (செவ்வாய்) - பிரதோஷம், சிவராத்திரி
தை 11 - ஜனவரி 25 (வியாழன்) - பெளர்ணமி, தைப்பூசம், குரு பூஷ்யம் - வடலூரில் ஜோதி தரிசனம். அன்னதானம் செய்ய நல்ல நாள், சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் தைப்பூசம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தை 12 - ஜனவரி 26 (வெள்ளி) - குடியரசு தினம்
தை 12 - ஜனவரி 26 (வெள்ளி) - வாஸ்து நாள் காலை 10.41 முதல் 11.17 வரை
தை 15 - ஜனவரி 29 (திங்கள்) - சங்கடஹர சதுர்த்தி
தை 18 - பிப்ரவரி 01 (வியாழன்) - சஷ்டி
தை 23 - பிப்ரவரி 06 (செவ்வாய்) - ஏகாதசி
தை 24 - பிப்ரவரி 07 (புதன்) - பிரதோஷம்
தை 25 - பிப்ரவரி 08 (வியாழன்) - சிவராத்திரி
தை 26 - பிப்ரவரி 09 (வெள்ளி) - தை அமாவாசை
தைப்பொங்கல்: தை முதல்நாள் பிறக்கும் போதே கோலாகலமாக தொடங்குகிறது. சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம். கால் நடைகளுக்கு நன்றி சொல்ல மாட்டுப்பொங்கல், உறவினர்களுடன் கூடி மகிழ காணும் பொங்கல் என கொண்டாட்டம் களைகட்டும். கிராமங்களில் பொங்கல் பண்டிகையோடு விளையாட்டுப்போட்டிகளும் களைகட்டும்.
தைப்பூசம்: தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தைப்பூசம் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தில் வருவது சிறப்பு:
தைப்பூசம் சிறப்புகள்: சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. தைப் பூசத்தில் சிவபெருமான் அன்னை உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமை ஒருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது. முருகப்பெருமானுக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து வணங்க நல்ல நாள். பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!
வாஸ்து நாள் சிறப்பு: வீடு கட்ட வாஸ்து நாள் தை மாதம் 12ம் தேதி ஜனவரி 26, வெள்ளிக்கிழமை வாஸ்து நாள் ஆகும். அன்றைய தினம் காலை 10-06 மணி முதல் 10-42 வரை வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. வாஸ்து பகவான் உணவு உண்பது தாம்பூலம் மெல்லுதல் ஆகிய காரியங்களை செய்யும் 36 நிமிடங்களில் வாஸ்து பூஜை செய்வது நன்மை ஏற்படும். அதாவது 10-06 மணி முதல் 10-42 மணிக்குள் வீடு கட்டக் கூடிய நிலத்தில் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு எவ்வித சிரமுமின்றி வீடு கட்டி முடிக்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லாமல் நம் இல்லத்திலும் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரை வீடு முழுவதும் தெளித்து வாஸ்து பூஜை செய்வது வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கும் வாழ்க்கையில் வளமாக்கும்.
தை அமாவாசை முன்னோர் வழிபாடு: உத்தராயண தொடக்கத்தில் வரும் அமாவாசை நாளில், நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்! முன்னோர் வழிபாடு என்பதை, வருடத்தில் அனைத்து மாதங்களிலும் செய்ய முடியாதவர்கள் கூட, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய முக்கிய நாட்களில் மறக்காமல் செய்தால், நம் கடமையைச் செய்தால், நாமும் நம் குடும்பமும் நிறைவுடன் வாழ்வோம். தை 26, பிப்ரவரி 9ஆம் தேதி தை அமாவாசை இந்த நாளில் நாம் முன்னோர் வழிபாடு செய்ய நன்மைகள் நடைபெறும். நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைக் காக்க முடியும்! நம் முன்னோர்கள் நம் சந்ததிகள் வாழ ஆசி வழங்குவார்கள்.












Click it and Unblock the Notifications