கமல்ஹாசன் மனுஷனா? அவர் கிரேட்! "உன்னால் முடியும் தம்பி” சூட்டிங்கில் நடந்த சம்பவம்! நடிகை தாரணி ஓபன்
சென்னை: சினிமா மற்றும் சீரியலில் நடித்து பிரபலமடைந்த நடிகை தாரணி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து தான் வியந்த பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான "உன்னால் முடியும் தம்பி" திரைப்பட சூட்டிங்கில் கமல் நடந்து கொண்ட விதம் குறித்து தாரணி பேசி இருக்கிறார்.
நடிகை தாரணி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் வடிவேலுவுடன் அவர் நடித்த காட்சிகள் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. வடிவேலு மாலா மாலா என்று இவருடைய புடவையின் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றிவரும் காட்சி இப்போதும் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சீரியல் நடிகை
அதேபோல தாரணி இப்போது சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சன் டிவியில் தாலாட்டு, விஜய் டிவியில் பனி விழும் மலர்வனம், பாரதி கண்ணம்மா உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில் தான் எப்படி சினிமாவில் அறிமுகமானேன் என்று கூறியிருந்தார்.
சினிமாவில் வாய்ப்பு
அதில் தாரணி பேசும் போது, "என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர். ஆனால் அப்பா பிசினஸ்க்காக மதுரைக்கு வந்திருந்த இடத்தில் நான் நடிகையாக தான் மாறுவேன் என்று ஜாதகத்தில் சொல்லி இருக்காங்க. அதைக் கேட்டு தாத்தா என்னை நடிகையாக்க வேண்டும் என்று என்னை டான்ஸ் கிளாஸில் சேர்த்து விட்டிருந்தார். ஏழு வருஷமா நான் டான்ஸ் பிராக்டிஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பங்க்ஷனில் நான் டான்ஸ் ஆடியதை பார்த்து பாலச்சந்தர் சாரிடம் யாரோ சொல்லியிருக்காங்க. அவர் என்னை தேடி வந்திருந்தாங்க.
வியக்க வைத்த கேரக்டர்
உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் தான் நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். கமல்ஹாசனுக்கு தங்கச்சியாக அந்த படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நான் நடிக்கப் போறேன் என்றதும் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. படத்தில் பல பிரபலங்கள் இருந்தாங்க. மனோரமா ஆச்சி, கமல்ஹாசன், ஜெமினிகணேசன் என்று பலர் இருந்திருந்தார்கள். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு நான் நடிக்கப் போயிருந்தேன்.

கமல்ஹாசன் பற்றி நடிகை தாரணி
ஆனால் எனக்கு நடிப்பு தெரியாது. எல்லோர் நடிப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பேன். "கமல்ஹாசன் மனுஷனா? என்று வியக்கத் தோணும்." அந்த அளவிற்கு அருமையாக நடிப்பார். அதுவரைக்கும் எல்லோருடன் பேசிக்கொண்டு இருப்பார், டேக் ஓகே என்று சொன்னதும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார். அந்த படத்தில் தொங்கிக் கொண்டிருப்பது, தண்ணீரில் சாகசம் செய்வது போன்ற எல்லாமே செய்தது அவர் தான்.
அருமையான நடிப்பு
எனக்கு பெருசா நடிக்கவே தெரியாது என்பதால் இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று சொல்வாரு. ஆனால் நான் அவரையே தான் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த படத்தில் நடிப்பதற்காக எங்களுக்காக பிராக்டிஸ் பண்ணுவாங்க ஆனால் கமல் சாருக்கு பிராக்டீஸ் பண்ணவே மாட்டாங்க. அவரிடம் சொல்ல மட்டும் செய்வாங்க, காட்சிகள் குறித்து விவரித்ததும் அவர் டேக் போகலாம் என்று சொல்லிவிடுவார். கேமரா முன்பு அவ்வளவு அருமையாக நடித்து முடித்து விடுவார்.

சொல்லித் தரும் ஆசிரியர்
அந்தப் படத்தில் நடிக்கும் போது அவருக்கு என்னை பெருசா தெரியாது. அதனால் சூட்டிங் தாண்டி எதுவும் என்னிடம் பேசிக் கொண்டது கிடையாது. சில இடங்களில் நாம் ஏதாவது தவறு செய்தால் இதை இப்படி செய்யலாம் என்று மட்டும் சொல்லித் தந்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் அதிகமான காட்சிகள் சூட்டிங் இல்லை என்றாலும் சில இடங்களில் நாம் சரியாக செய்து நடித்து விட்டால் அதை பாராட்டவும் செய்வார்" என தாரணி கமல்ஹாசன் குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோக்களை கமல்ஹாசனின் ரசிகர்கள் பகிர்ந்து அவரை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications