ஜெயிலர் 2வின் 3வது நாள் வசூலில் நடந்த மாற்றம்.. ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் இப்போது பாக்ஸ் ஆபீஸில் எந்த அளவுக்கு வேகமெடுத்திருக்கிறது தெரியுமா? படம் வெளியாகி 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.317 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மொத்த வசூல் மட்டுமல்ல 2வது நாளில் குறைந்த வசூல், 3வது நாளில் மீண்டும் அதிகரித்திருப்பதுதான்.

3வது நாள் வசூல் நிலவரம்
அக்டோபர் 15-ம் தேதி வெளியான இந்த படத்துக்கு முதல் நாளிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இந்தியாவில் முதல் நாள் நெட் வசூல் சுமார் ரூ.59.70 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வசூல் ரூ.37.10 கோடியாக குறைந்தது. இதைப் பார்த்து படம் வசூலில் தடுமாறுகிறதா என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் சனிக்கிழமையான 3வது நாளில் வசூல் மீண்டும் ரூ.47.80 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 28.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இப்போது 3 நாள் கணக்கை பார்த்தால், இந்தியாவில் மட்டும் படத்தின் நெட் வசூல் சுமார் ரூ.144.60 கோடி. இந்தியாவின் மொத்த கிராஸ் வசூல் ரூ.169.65 கோடி என்றும், வெளிநாடுகளில் கிடைத்த கிராஸ் வசூல் ரூ.147.50 கோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையெல்லாம் சேர்த்தால் உலகளவில் ரூ.317.15 கோடி என்ற நிலையை ஜெயிலர் 2 எட்டியிருக்கிறது.
மாஸ் காட்டிய தமிழ் ரிலீஸ்
இன்னொரு முக்கியமான விஷயம், இந்த வசூலில் தமிழ் ரிலீஸ் தான் அதிக வசூல் பெற்றிருக்கிறது. ம3வது நாளில் தமிழ் ரிலீஸ் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.34.60 கோடி நெட் வசூல் செய்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ரூ.8.50 கோடியும், இந்தியில் ரூ.4.25 கோடியும் வசூல் செய்திருக்கின்றன. இதிலிருந்து தமிழ் ரசிகர்கள் படத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது புரிகிறது.
சென்னையிலும் 3வது நாள் திரையரங்க வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது சென்னையில் ஆங்காங்கே மழை அதிகமாக இருந்தாலும் படத்துக்கு நல்ல மவுசு கிடைத்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முதல் நாளில் கிடைத்த ஓப்பனிங் பெரிய விஷயம்தான். ஆனால் அதற்கு பிறகும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்களா என்பதுதான் ஒரு படத்தின் அடுத்தடுத்த நாட்களின் வசூலைத் தீர்மானிக்கும். ஜெயிலர் 2 படத்தை பொறுத்தவரை, 2வது நாளில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு 3வது நாளில் மீண்டும் வசூல் அதிகரித்திருக்கிறது. இது படத்துக்கு ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் வசூல்
மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை நாளில் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள். 3வது நாள் வசூல் உயர்ந்திருக்கும் நிலையில், 4வது நாளிலும் இதே வேகம் தொடருமா? என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. அதற்கான அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
மொத்தத்தில், ஜெயிலர் 2 மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.300 கோடி வசூல் மைல்கல்லைக் கடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இந்த படம் 1000 கோடி வசூலில் இணையுமா? என்று முதல் நாளிலிருந்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நடக்குமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications
