கேரளாவில் பட்டுப்புடவையுடன் ஓடிய டாக்டர் மணப்பெண்.. திடீரென சுருண்ட 2 பெண்கள்.. சபாஷ் ஷிரின் சுபைர்
திருவனந்தபுரம்: கல்யாணம் என்றாலே ஆடம்பரம், அலங்காரம், வெட்டிங் ஷூட், போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது என மணப்பெண்கள் பிஸியாக இருப்பார்கள். ஆனால், கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பனூரைச் சேர்ந்த டாக்டர் ஷிரின் சுபைர், தன்னுடைய திருமணத்தை ஒரு மேடை நாடகமாக மாற்றாமல், மனிதாபிமானத்தின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்... அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் பின்னணியை இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
கேரளாவின் பனூர் பகுதியை சேர்ந்த பெண் ஷிரின் சுபைர்.. டாக்டரான இவருக்கும் டாக்டர் ரியாஸ் என்பவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மணமேடையில் மணமகன், மணமகள் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்..

டாக்டர் பொண்ணு, மாப்பிள்ளை
அந்த நேரம் பார்த்து, கேட்டரிங் குழுவை சேர்ந்த 2 பெண்களுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. விருந்தில் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணுக்கு மூக்கடைப்பும், ரத்தப்போக்கும் ஏற்பட்டது.. இன்னொரு பெண் தலைசுற்றி கீழே சரிந்து விழுந்து விட்டார்.. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் பதறினார்கள்.
இந்த விஷயம் மணமேடையிலிருந்த மணப்பெண்ணுக்கு தெரியவந்தது. அடுத்த நொடியே, தனது பட்டுப்புடவை, கனமான ஆபரணங்கள் என எதையும் பொருட்படுத்தாமல், டாக்டர் ஷிரின் சுபைர் மின்னல் வேகத்தில், சாப்பாடு பரிமாறும் இடத்துக்கு ஓடினார்.
மயங்கி விழுந்த 2 பெண்கள்
ஒற்றப்பாலில் உள்ள வள்ளுவநாடு மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவில் முதலாம் ஆண்டு முதுகலை படித்து வருகிறார் ஷிரின் சுபைர்.. மருத்துவக் கல்வி அவருக்குக் கற்றுக்கொடுத்த முதல் பாடம், "உயிரைக் காப்பது". அதைத்தான் இந்த தருணத்தில் செய்ய முயன்றார். மணமகனும் ஒரு டாக்டர் என்பதால், அவரும் மணப்பெண்ணுடன் ஓடினார்.
மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த பெண்ணை நேராக உட்கார வைத்து, முன் நோக்கி குனிய சொல்லி, மூக்கின் மென்மையான பகுதியை 10 முதல் 15 நிமிடங்கள் வரை அழுத்திப் பிடித்துக் கொள்ள சொன்னார் ஷிரின் சுபைர்.. பிறகு வாய் வழியாக சுவாசிக்கவும் அறிவுறுத்தினார்..

வியக்க வைத்த மணமகள்
அதேபோல மயங்கி விழுந்த இன்னொரு பெண்ணை, கால்களை உயர்த்தி வைத்து படுக்க வைத்தார். முதலுதவி அளித்து அவர்களை நிலைப்படுத்திய பிறகு, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
திருமணத்தில் மும்முரமாக இருந்த பலருக்கும் ஷிரின் ஒரு டாக்டர் என்பது தெரிந்திருந்தாலும், இந்த இக்கட்டான தருணத்தில் அவர் காட்டிய துணிச்சல் எல்லோரையும் வியக்க வைத்தது. இது குறித்துப் பேசிய ஷிரின், "சாலையில் யாராவது விழுந்தால் எப்படி உதவி செய்வோமோ, அதுபோலத்தான் இதையும் கருதினேன். இது கடமை, இதில் பெரிய விஷயம் எதுவுமில்லை," என்று பணிவாக சொல்கிறார்.

நம்பிக்கை நட்சத்திரங்கள்
அவருக்கு உதவியாக இருந்த கணவர் டாக்டர் ரியாஸ், "எங்களுக்கு இதுபோன்ற அவசர கால சூழல்களைக் கையாள்வதில் கூடுதல் வேகம் உண்டு" என்று பெருமையுடன் தெரிவித்தார்.
ஷிரின் செய்த இந்த முதலுதவி வீடியோவாக சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. திருமணத்தின் மகிழ்ச்சியை தாண்டி, ஒரு உயிரைக் காக்க துணிந்த டாக்டர் மணப்பெண்ணின் செயல், இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றே சொல்லலாம்.. டாக்டர் ஷிரின் சுபைர் போன்ற மருத்துவர்களே சமுதாயத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார்கள்...!!


Click it and Unblock the Notifications
