கேரளாவில் தொடரும் 'நோக்குக்கூலி' அராஜகம்! டைல்ஸ் பாக்ஸ்களை தலையில் ஏற்றி விதவைப் பெண் சித்ரவதை
திருவனந்தபுரம்: கேரளாவில்'நோக்குக்கூலி' என்ற பெயரில் நடைபெறும் அராஜகத்தின் ஒருபகுதியாக, ஒரு விதவைப் பெண்ணின் தலையில் 60 டைல்ஸ் பாக்ஸ்களை ஏற்றி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் அடாவடியான இந்த நோக்குக் கூலி நடைமுறைக்கு நீதிமன்றம் தடைவிதித்த போதிலும், எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படையாகவே இன்றும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எந்த அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கும் இந்த நோக்குக்கூலி முறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே கேரள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நோக்குக்கூலியும் கேரளாவும்...
கேரளாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நோக்குக் கூலி நடைமுறையில் இருக்கிறது. சுமைதூக்கும் தொழிலாளர்களின் வறுமை நிலையை போக்குவதற்காக, அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 1960-களில் 'நோக்குக்கூலி' என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் தொழிற்சங்கங்களின் பலம் அதிகரித்ததால், இந்த நடைமுறை மிரட்டிப் பணம் பறிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.

அது என்ன நோக்குக்கூலி?
கேரளாவில் ஒருவர் தனக்கு சொந்தமான சரக்குகளையோ, பொருட்களையோ அவருக்கு தெரிந்தவர்களை கொண்டோ அல்லது பணியாட்களை கொண்டோ ஏற்றி இறக்க முடியாது. சுமை தூக்கும் தொழிலாளர்களையே வைத்தே அவற்றை இறக்க வேண்டும். அப்படி அவர்களை பயன்படுத்தாமல், நமது தெரிந்தவர்கள் மூலமாக நாம் பொருட்களை இறக்கினால், சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதை அங்கிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் வேலை முடிந்ததும், அந்த உரிமையாளரிடம் 'நோக்குக்கூலி' கேட்பார்கள். அதாவது, அந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்ததற்காக அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இது, சுமை தூக்குவதற்கு கேட்கும் கூலியை விட அதிகமாக இருக்கும். இந்த அராஜக நடைமுறைக்கு கேரள உயர் நீதிமன்றமே தடைவிதித்துவிட்ட போதிலும், இன்னும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு சம்பவம்தான் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் கொடுமை
திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீகார்யபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (34). கணவரை இழந்தவரான திவ்யா, அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்கு சென்று தனது மகளை தன்னந்தனி ஆளாக வளர்த்து வருகிறார். இதனிடையே, மகளின் எதிர்காலத்துக்காக வீடு கட்ட நினைத்த திவ்யா, கடந்த 4 ஆண்டுகளாக சிறுக சிறுக பணம் சேமித்து வைத்து அந்தப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை கட்டினார். பின்னர் தங்கள் வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காக 60 லோடு டைல்ஸ் பாக்ஸ்களை அவர் ஆர்டர் செய்தார். அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு லாரியில் டைல்ஸ் பாக்ஸ்கள் வந்தன.

டைல்ஸ் பாக்ஸை தலையில் ஏற்றி..
இந்நிலையில், இந்த டைல்ஸ் பாக்ஸ்களை அந்த நிறுவனத்தில் இருந்த ஆட்களை கொண்டே திவ்யா இறக்கியுள்ளார். அப்போது அதனை பார்த்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அங்கு சென்று, "எப்படி எங்களை கூப்பிடாமல் லோடு இறக்கி வைப்பீர்கள்" எனக் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். பின்னர், இறக்கி வைத்த லோடுகளை மீண்டும் லாரியில் ஏற்ற வைத்த அவர்கள், திவ்யாவின் தலையில் ஒவ்வொரு டைல்ஸ் பாக்ஸ்களாக வைத்து இறக்கச் செய்துள்ளனர். அவருக்கு உதவுவதற்காக அவரது சகோதரரரும், மனைவியும் வந்துள்ளனர். ஆனால் அவர்களை தடுத்த தொழிலாளர்கள், திவ்யாவை மட்டும் அந்த வேலையை செய்ய வைத்தனர். ஒற்றை ஆளாக டைல்ஸ் பாக்ஸ்களை இறக்கி வைத்ததால் திவ்யா மயக்கம் அடைந்தார். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications