ஆங்கிலேயர் கால சிவப்பு பட்டை நீக்கம்.. இந்திய கடற்படைக்கு புதிய கொடி! அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஐஎன்எக்ஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி தொடர்ந்து இந்திய கடற்படைக்கான புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பலம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா தனது முப்படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்திய கடற்படையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பலை இணைக்க இந்தியா திட்டமிட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்க
அதன்படி, உள்நாட்டிலேயே இந்தக் கப்பல் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடைபெற்றது. 4 கட்டங்களாக நடந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தன.

நாட்டுக்கு அர்ப்பணித்தார்
இதையடுத்து விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் இன்று முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்பட்டது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படைக்காக புதிய கொடி ஒன்றையையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சிவப்பு பட்டைகள் நீக்கம்
இந்திய கடற்படைக்காக பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்த புதிய கொடியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிதாக அந்த கொடியில், மூவர்ண கொடியும், அசோக சின்னம், நங்கூரம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக புதிதாக பிரதமர் மோடி அறிமுகம் செய்த கொடியில், இடது மேல்புறத்தில் மூவர்ண கொடி உள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ்
நீல நிறத்தில் இடம் பெற்றுள்ள எண்கோண வடிவத்தில், நான்முக சிங்கம் மற்றும் நங்கூரம் மற்றும் ஒரு கேடயமும் உள்ளது. வலிமையான கடற்படையை கொண்டிருந்த மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியை பெருமைப்படுத்தும் வகையிலும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்டன் நிற பார்டர்களுடன் கூடிய எண்கோண வடிவம், சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

எல்லையை பாதுகாக்க வலிமையான கடற்படை
மகாரஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜி, வெளிநாட்டு படையெடுப்பு, போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயரிடம் இருந்தும் எல்லையை பாதுகாக்க வலிமையான கடற்படையை உருவாக்கி வைத்திருந்தார். சிவாஜி கடற்படையில் 60 போர்க்கப்பல்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களும் இருந்தனர். எனவே சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரையிலிருந்து எண்கோண வடிவம் எடுக்கப்பட்டுள்ளது.