98% பேர் ஓரின/இருபாலின சேர்க்கையாளர்கள்.. குரங்கு அம்மை யாரை குறி வைக்கிறது.. ஆய்வில் பரபர தகவல்
திருவனந்தபுரம்: உலக நாடுகளை கொரோனா போல பயமுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட புதிய தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று பரவலில் இருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வராதநிலையில், குரங்கு அம்மை (Monkeypox) எனும் வைரஸ் நோய் உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருகிறது. தற்போது இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. குறிப்பாக கடந்த 14-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரள நபருக்கு இந்தியாவில் முதன்முதலாக நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் 3 பேருக்கு பாதிப்பு
அதைத்தொடர்ந்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை உறுதியானதால், தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

குரங்கு அம்மை நோய் அறிகுறிகள்
ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு நோயான குரங்கு அம்மை, மனிதர்களை தாக்கினால், வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ, இல்லாதவர்களுக்கோ இந்நோயினால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் உள்ளிட்டவையே குரங்கு அம்மை பாதித்ததற்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது. தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகீர் தகவல்
இந்த நிலையில், குரங்கு அம்மை பரவியவர்களில் 98 சதவீதம் பேர் ஓரின சேர்க்கையாளர்கள், இருபாலருடனும் உறவு கொள்ளும் பை செக்சுவல் நபர்களாகவே இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி இதழ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 16 நாடுகளில் குரங்கு அம்மை பரவியதை மையப்படுத்தி இங்கிலாந்து மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், '16 நாடுகளில் 528 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படதாக எங்களுக்கு ஏப்ரல் மாதம் 27 முதல் ஜுன் 24 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் தகவல் கிடைத்தது.
Recommended Video

ஓரின சேர்க்கையாளர்களுக்கே அதிகம்
இதில் 98 சதவீதம் பேர் ஓரின சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலருடனும் உறவு கொள்பவர்களாகவே உள்ளனர். இவர்களில் 41 சதவீதம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்பும் உள்ளவர்கள். அவர்களின் சராசரி வயது 38 ஆக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியான நெருக்கமான தொடர்பால் மிக எளிதாக பரவும் தன்மை கொண்டது என்பதால் குரங்கு அம்மை இத்தகைய சமூகத்தினர் மத்தியில் பரவலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குரங்கு அம்மை சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்க துரிதமாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பது அவசியமானது என்பதும் மருத்துவ நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது.












Click it and Unblock the Notifications