ரேடார் கொடுக்கும் சூப்பர் சிக்னல்.. சென்னையில் தீபாவளி நாளில் அடுத்த ரவுண்டு மழை.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அடுத்த மழைச்சுற்று இன்று மீண்டும் கனமழையைக் கொடுக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென் சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், செங்கல்பட்டு பகுதிகளிலும் இந்த முறை நல்ல மழை கிடைக்கலாம் என அவர் கணித்துள்ளார்.
இந்தியாவில் இந்த முறை தென்மேற்கு பருவமழை பெரியளவில் பெய்யவில்லை. பெரும்பாலான பகுதிகளில் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவான மழையே பெய்திருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தவுடன், நிலைமை மாறிவிட்டது. தமிழ்நாடு, ஆந்திர பகுதிகளில் மழை வெளுத்து வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன்
தீபாவளி நாளான இன்றும் கூட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. நள்ளிரவில் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டியது. சென்னை நகர் பகுதிகள், புறநகர், செங்கல்பட்டு என பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையே சென்னையில் மழை மேலும் தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
மழை வெளுக்கும்
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "அடுத்த ரவுண்டு மழை ரெடியாக இருக்கிறது. சென்னை, தமிழகம் கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும். இந்த தீபாவளி பண்டிகை மிக அதிக மழை கொட்டும் தீபாவளியாக அமையக்கூடும். இன்று சென்னையில் மேலும் 40-50 மி.மீ மழை பதிவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரேடாரை பார்க்கும்போது மிகவும் சாதகமான சூழலே நிலவுகிறது. இம்முறை தென் சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
24 மணி நேரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு குறித்த தகவல்களையும் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார். நவம்பர் 8ஆம் தேதி காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை பதிவில் சென்னை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதேநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் அதிகபட்சமாக 99.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை பாரிமுனை பகுதியில் 93.4 மி.மீ, மதுரவாயலில் 92.7 மி.மீ மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 92.4 மி.மீ மழையும், சென்னையின் வேப்பேரியில் 87.6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளன. புளியந்தோப்பில் 80 மி.மீ, நுங்கம்பாக்கத்தில் 78 மி.மீ, தண்டையார்பேட்டையில் 77.7 மி.மீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தில் மற்றொரு மழைமானி நிலையத்தில் 77.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதாவது சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கணிசமான மழை பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பார்த்தால், முதல் 50 இடங்களில் சென்னையில் இருந்து மட்டுமே 35 இடங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தளவுக்கு சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
