வயநாடு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 40 பேரை பறிகொடுத்த டெய்லர்.. அதிகாலை 2 மணிக்கு என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், அங்கு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 40 பேரை தையல்காரர் ஒருவர் பறிகொடுத்துள்ளார். இன்னொரு குடும்பத்தினர் 16 பேரைபறிகொடுத்துள்ளனர். வயநாட்டில் மலைச்சரிவில் சிக்கிய டெய்லர் அளித்த பேட்டியை இப்போது பார்ப்போம்.
வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டிவிட்டது. இன்னும் 500க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் முண்டக்கை கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 40 பேரை நாசர்(வயது 42) என்ற தையல்காரர் பறிகொடுத்திருக்கிறார். சகோதார்கள், சகோதரிகள், உறவினர்கள் அவர்களின் குடும்பத்தினர் என 40 பேரை பறிகொடுத்த டெய்லர் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
அப்போது நாசர் கூறுகையில், முண்டக்கை கிராமத்தில் நான் தையல் கடை நடத்தி வந்தேன். சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் கனமழை பெய்து எனது வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதை கவனித்த நான் உடனே தூக்கதில் இருந்து எழுந்தேன். தொடர்ந்து என்னுடைய மனைவி, குழந்தைகளை எழுப்பினேன். அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்த நான், அருகிலுள்ள மலை குன்றின் மீது உள்ள ஓய்வு விடுதிக்கு விரைவாக குடும்பத்துடன் சென்றுவிட்டேன்.
அதன்பிறகு பயங்கர சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சில மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தேன். அப்போது அக்கம்பக்கத்தில் வசித்து வந்த எனது சகோதர, சகோதரிகள் உள்பட குடும்பத்தினர் 40 பேரை காணவில்லை. அவர்களது வீடு முற்றிலும் தரைமட்டமாகி இருந்தது. 6 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளது" என கண்ணீர் மல்க டெய்லர் கூறினார்.
இதேபோல முண்டக்கை பகுதியில் வசித்து வந்த இன்னொரு குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள், பேரன், பேத்திகள் என 16 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த குடும்பத்தை சேர்ந்த சிலரது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதுபற்றி வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் நிலச்சரிவில் உயிர் தப்பிய கமர் என்ற வாலிபர் கூறுகையில், சம்பவத்தன்று இரவு பலத்த மழை இடை விடாமல் பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நிலச்சரிவு ஏற்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே பக்கத்து ஊரில் உள்ள எனது தங்கையின் வீட்டிற்கு விரைந்து சென்று விட்டேன்.
நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் எனது ரூ,2 கோடி மதிப்புள்ள வீடு, நிலம் என அனைத்தும் சேதமடைந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நானும், எனது குடும்பத்தினரும் உயிர் தப்பிவிட்டோம். உடைமைகளை இழந்த போதிலும் எங்களது உயிரை கடவுள் காப்பாற்றிவிட்டார். ஆனால் எனது நண்பர்கள், உறவினர்கள் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்து விட்டனர். பலரது நிலை என்னவென்றே எனக்கு தெரியவில்லை. மண்ணில் புதைந்த அவர்களது உடல்களை என்னால் பார்க்க முடியவில்லை.. இதயமே நொறுங்கிப்போய் உள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications