மதுரையில் இன்று மழை பெய்யுமா? தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ் இருக்கு! வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறுவதால் அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. நேற்று மற்றும் நேற்று முன் தினம் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. நேற்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்தது. பிற மாவட்டங்களில் பெரிதாக மழை பெய்யவில்லை.

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், சென்னையில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22-08-2025 மற்றும் 23-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-08-2025 மற்றும் 26-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (21-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 - 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று 21-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.
மதுரையில் மழை பெய்யுமா?
மதுரையில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது எனவும், வெயில் கொளுத்தும் எனவும் கூறப்படுகிறது. பகல் நேரங்களில் வானம் தெளிவாக காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் வேண்டுமானால் ஒரு சில நேரம் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தனியார் ஆய்வாளரான ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
பெரும்பாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுவதால் தமிழக வெற்றிக் கழகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக மாநாடு ஏற்பாடுகளை செய்துள்ளதால் மழை குறுக்கிட்டால் அனைத்துமே வீணாக போய்விடும் என்பதால் தவெக தொண்டர்கள் எங்கு வேண்டுமானாலும் மழை பெய்யட்டும் ஆனால் மதுரையில் மட்டும் இன்று மழை பெய்ய வேண்டாம் என வேண்டிக்கொண்டதையும் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications