For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓயாத சாவர்க்கரின் மன்னிப்பு கடித சர்ச்சை... யார் இந்த சாவர்க்கர்? என்னதான் நடந்தது அந்தமான் சிறையில்?

Google Oneindia Tamil News

சென்னை: மகாத்மா காந்தி சொன்னதால்தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சாவர்க்கர் அந்தமான் சிறைச்சாலையில் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்த கருத்துகள் விவாதங்களை கிளப்பியுள்ளன.

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில் "கடந்த 1911ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று 6 மாதங்களுக்குபின் முதல் மனுவை எழுதினார். அதன்பின் மகாத்மா காந்தி அறிவுரையின் படி அடுத்த கருணை மனுவை எழுதினார் என்று வரலாறு கூறுகிறது" எனத் தெரிவித்தார்.

What is behind Veer Savarkars apologise letters to British Govt?

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக வரலாற்றை திரித்து எழுத முயல்கிறது என குற்றம்சாட்டினர். மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் வீர சாவர்க்கர் பற்றிப் பேசிய ராஜ்நாத் சிங்கிற்குப் பதிலடி கொடுத்தார். ஒவைசி அளித்த பேட்டியில் " 'பாஜகவினர் வரலாற்றை சிதைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக்கி விடுவார்கள். '' எனத் தெரிவி்த்தார்

இந்நிலையில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் அளித்துள்ள பேட்டியில்" இந்தியா போன்ற நாடுகளில் தேசப்பிதா என ஒருவர் மட்டும் இருக்க முடியாது. ஆயிரக்கணக்கான தலைவர்கள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டார்கள். ஆதலால், இந்த தேசத்தின் தந்தை மகாத்மா காந்திதான் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை தேசத்தந்தை என்ற கருத்துருவையே ஏற்க முடியாது, அதற்கு நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். வீர சாவர்க்கரை யாரும் தேசத்தந்தையாக்க வேண்டும் என யாரும் கேட்கவில்லை.ஏனென்றால். இந்த கருத்தே ஏற்க முடியாத ஒன்று" எனத் தெரிவித்தார்.

சரி.. தேசத் தந்தை மகாத்மா காந்தி படுகொலை, மன்னிப்பு கடிதங்கள் இரண்டு விவகாரங்கள் எங்கு பேசப்பட்டாலும் சாவர்க்கர் பெயர் இப்போதும் அடிபடாமல் இருப்பது இல்லை.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1910-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் ஆட்சியராக இருந்த ஜாக்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் சாவர்க்கரின் சகோதரர்தான் முதலில் கைதானவர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கான துப்பாக்கியை லண்டனில் இருந்து அனுப்பியவர் சாவர்க்கர் என தெரியவந்தது. இதனால் லண்டனிலேயே சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு கப்பலில் சாவர்க்கர் அழைத்துவரப்படும் போது கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தார் அவர். ஆனால் ஆங்கிலேயர்கள் அவரை கடலில் நிர்வாணமாக இழுத்து வந்து கைது செய்தனர்.

இப்படித்தான் ஆங்கிலேய அரசின் கைதியாக சாவர்க்கரின் வாழ்க்கை தொடங்கியது. சுமார் 25 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர் சாவர்க்கர். சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் அந்தமான் சிறைச்சாலையில்தான் 1911 முதல் சாவர்க்கரும் அடைக்கப்பட்டிருந்தார். சார்வக்கர் சிறை வைக்கப்பட்டிருந்த அறை எண் 52. சுமார் 9 ஆண்டுகள் அந்தமான் சிறைவாசத்தை அனுபவித்த சாவர்க்கர் தமது செயல்களுக்காக வருந்தி 6 முறை ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கொடுத்தார் என்கிறது வரலாற்று ஆவணங்கள்.

பெரும்பாலும் இந்த மன்னிப்பு கடிதங்களில் சாவர்க்கர் தமக்கு மன்னிப்பு அளித்து இந்தியாவில் உள்ள இதர சிறைச்சாலை ஒன்றில் அடைக்குமாறு கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படிச் செய்தால் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருக்கவும் தயார் என்பதும் சாவர்க்கர் கடிதங்கள் சொல்லும் வரலாற்று சேதி. சிறைவாசத்துக்குப் பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்திடம் மதிப்பூதியம் பெற்ற ஒரே சிறைவாசியும் சாவர்க்கர் என்கிறது சரித்திரம். நாடு விடுதலை அடைந்த போது 1949-ல் மகாத்மா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது நாதுராம் கோட்சேவுடன் கைது செய்யப்பட்டவர் சாவர்க்கர். 1966-ம் ஆண்டு சாவர்க்கர் மறைந்தார். இதுதான் சாவர்க்கர் எனும் சுதந்திரப் போராட்ட தியாகியின் சுருக்கமான வரலாறு.

சாவர்க்கர் மறைந்துவிட்டாலும் இன்னமும் அவர் பேசுபொருளாக இருப்பதற்கு என்ன காரணம்? அவர் முன்வைத்த இந்துத்துவா கோட்பாடுதான். இந்துத்துவா கோட்பாட்டை தீவிரமாக வலியுறுத்தியதால்தாம் அதனது வாரிசுகளாக பாஜகவினர் இன்றளவும் சாவர்க்கரை கொண்டாடுகின்றனர். தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட சாவர்க்கருக்கும் இந்திய நாடாளுமன்றத்தில் மரியாதை செலுத்தப்படுவது என்பது வினோதம்தான். சாவர்க்கர் குறித்த சர்ச்சைகளில் அதிகமாக பேசப்பட்டது அவரது மன்னிப்பு கடித விவகாரம்தான்.

ஆனால் பாஜகவினரோ இதுவரை சாவர்க்கர் அப்படியான மன்னிப்பு கடிதம் எதனையும் கொடுக்கவே இல்லை; அதற்கான ஆதாரமும் இல்லவே இல்லை என அடித்துச் சொன்னார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களோ, சாவர்க்கர் எழுதிய அத்தனை மன்னிப்பு கடிதங்களையும் அவ்வப்போது பகிரங்கப்படுத்தி பதிலடியும் கொடுத்து வந்தனர். இந்த சர்ச்சைகளின் உச்சமாகத்தான் இப்போது, சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்தது உண்மை. ஆனால் காந்தியடிகளின் ஆலோசனைப்படியே சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்தார் என்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங். இதில் உள்ள உண்மைதான் என்ன?

Gandhi Ashram Sevagram தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சாவர்க்கர் தொடர்பான ஏராளமான கடிதங்களை வெளியிட்டுள்ளது- https://www.gandhiashramsevagram.org/gandhi-literature/collected-works-of-mahatma-gandhi-volume-1-to-98.php. இந்த ஆவணங்களின் சாராம்சமாக நாம் புரிந்து கொள்ளப்படுவது என்னவெனில், அந்தமான் சிறைச்சாலை கொடுமைகளை காந்தியடிகளுக்கு கடிதமாக எழுதி அனுப்பியவர்கள் சாவர்க்கரும் அவரது சகோதரர்களும்தான். சாவர்க்கரின் சக கைதிகள் எல்லாம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தாங்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை என அக்கடிதங்களில் புலம்பினர் சாவர்க்கர் சகோதரர்கள். இதையடுத்து இதனை ஆங்கிலேய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் கடிதங்களை காந்தியார் தொடர்ந்து எழுதினார். இதையடுத்து சாவர்க்கர் அடுத்தடுத்து மன்னிப்பு கடிதங்கள் கொடுத்திருக்கிறார். காந்தியாரின் கடும் நெருக்கடியாலும் சாவர்க்கரின் இடைவிடாத மன்னிப்பு கடிதங்களால் மட்டுமே அவர் மகாராஷ்டிராவின் எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் என்கிறது இந்த வரலாற்று ஆவணங்கள்.

English summary
Here is a story behind Freedom Fighter Veer Savarkar's apologise letters to British Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X