Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாழப் பறக்கும் காக்கைகள் -8: தவணைமுறை தவறுகளுக்கும் தண்டனை ஒன்றுதான்

Subscribe to Oneindia Tamil

-கதிர்

ஓய்வு கிடைக்காமல் உழைப்பவர்கள் நிறைய பேர். விபத்து, இழப்பு மாதிரியான அசம்பாவிதம் நடந்தால் கட்டாய ஓய்வு கிட்டும்.

ஓடி ஓடி உழைக்கிறோமே தேவைதானா, நாம் போகும் பாதை சரிதானா என்று நிதானமாக திரும்பிப் பார்த்து யோசிக்க கடவுள் வழங்கும் சந்தர்ப்பம் அது.

மறுப்பாளிகள் இயற்கை எனலாம்.

ஜெயலலிதாவுக்கு கிடைத்திருப்பது அம்மாதிரியான சந்தர்ப்பம். அரசு நிர்வாகத்தில் அன்றாட தலையீடுக்கு இடமில்லை. திரும்பி பார்ப்பது தவிரவும் நிறைய நேரம் கிடைக்கும்.

எங்கெங்கோ கண்காணாத இடங்களில் வசிக்கும் கட்சிக்காரர்களின் கடிதங்களை உதவியாளர்கள் வடிகட்ட விடாமல் தானே எடுத்து படிக்கலாம். நிதர்சனத்துக்கும் தனக்கும் இடையே எழுப்பப்பட்ட சுவரை அளவெடுக்கலாம்.

பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கலாம். சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முட்டி மோதுவதை கண்டு ரசிக்கலாம். புதிய யோசனைகளை பொறுக்கி எடுக்கலாம். தன்னால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் எவ்வளவு திறமையாகவும் வேகமாகவும் செயல்படுகிறார்கள், அல்லது படவில்லை என்பதை மதிப்பீடு செய்யலாம்.

மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. உண்மையில் அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் போயஸ் தோட்டத்துடன் அன்றாட வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு, ஆட்சிக்கு தலைமையேற்க பன்னீர் செல்வத்தை நியமித்த பிறகும் அதிமுக அரசின் செயல்பாடுகள் எதுவும் மாறவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

சகாயம் விவகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். தமிழகத்தின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த பொதுநல வழக்கு தொடரப்படுகிறது. உயர் நீதிமன்றம் மனுதாரர் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு, சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க ஆணையிடுகிறது. என்ன செய்திருக்க வேண்டும் பன்னீர் செல்வம் அரசு?

நீதிமன்றத்தோடு இத்தனை காலமாக நடத்திய கண்ணாமூச்சி ஆட்டம் போதும். அதன் விளைவைத்தான் பெங்களூரில் பார்த்தோம். இனியாவது நீதிமன்றங்களோடு மோதும் போக்கை கைவிட்டு, அது சொன்ன மாதிரி சகாயத்தை அவர் பார்க்கும் பொறுப்பில் இருந்து விடுவித்து அரசாணை பிறப்பித்து, அவர் ஆய்வு நடத்த வழி விடுவோம் என்று தீர்மானித்து இருக்க வேண்டும். செய்யவில்லை. அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் போய் வாதிட்டது.

சகாயத்துக்கு சகாயம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுதலா, என்ன? சகாயம்தான் ஆரம்பத்தில் கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் என்று பரவலாக நிலவும் நம்பிக்கையை நீதிமன்றம் பகிர்ந்து கொண்டது. அவ்வளவுதான். விஷயம் தெரிந்தவர் விசாரித்தால் தாமதம் தவிர்க்கலாம் என்ற ஏற்பாடு. அதைப்போய் நீதிபதிகளுக்கு உள்நோக்கம் இருப்பது போலவும் அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுவது போலவும் நினைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் போகலாமா? போயும் வேஸ்ட். உயர் நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று திருப்பி விட்டது. இங்கேயும் ஒரு மாதத்துக்கு மேல் தாமதித்து மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து குட்டு வாங்கி பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்தியிருக்கிறது.

தவறான ஆலோசனைகளை கேட்டு நடக்கும் அரசும் தலைவனும் - அல்லது தலைவியும் - அதன் விளைவுகளை அனுபவிக்காமல் தப்ப முடியாது.

ஒருவரின் ஆலோசனைப்படி நடந்து, அது விபரீதமாக முடிந்தால் நீங்களோ நானோ மறுபடி அந்த ஆளின் ஆலோசனைப்படி நடப்போமா? அவரை நம் அருகிலேயே வரவிடாமல் தூர நிறுத்துவோம். ஜெயலலிதாவை பொருத்தவரை என்ன நடக்கிறது என்றால், தவறான ஆலோசனை தருபவர்கள் தள்ளிவைக்கப்படுவதே இல்லை. மாறாக, அவர்களின் பதவிக் காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கு ஆலோசகர் என்ற கவுரவமான பெயரை சூட்டி இன்னும் உயரமான இடத்தில் உட்கார வைக்கும் வேடிக்கை நடக்கிறது.

தலைமைச் செயலாளராக இருந்த தேவேந்திரநாத் சாரங்கி, ஷீலா பாலகிருஷ்ணன் வரிசையில் போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராமானுஜம் ஓய்வு பெற்றதும் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் செயலாளர் வேங்கடரமணன், பேரவை செயலாளர் ஜமாலுதீன், லஞ்சத் தடுப்பு துறை ஐஜி குணசீலன் ஆகியோருக்கு ஓய்வுகாலம் வந்த பிறகும் ஐந்தாண்டு பதவி நீடிப்பு. அதிகாரிகள் மத்தியில் இந்த ஆலோசகர் நியமனங்களும் பதவிக்கால நீட்டிப்புகளும் கடுமையான அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

மிகப்பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் இதைப் பற்றி கேட்டபோது, ‘இதெல்லாம் சகஜம். ஏன், கடந்த ஆட்சியில் இப்படி நடக்கவே இல்லையாக்கும்? இதனால் யாருக்கும் அதிருப்தி கிடையாது' என்று வேகமாக மறுத்துப் பேசினார். அவரும் விரைவில் ஆலோசகர் பதவிக்கு அடிபோடுவார் என்பது நன்றாகத் தெரிந்தது.

வேறு இரு அதிகாரிகள் மறைத்துப் பேசவில்லை. நிர்வாகத்தில் பெரிய பெரிய சிக்கல்களை உண்டாக்கக்கூடிய மிக மோசமான முன்னுதாரணங்கள் ஏற்படுத்தப்படுவதாக அவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.

கருணாநிதி செய்தார் என்பதற்காக ஒரு தவறு எப்படி சரியாகிவிடும் என்று நமக்கு புரியவில்லை.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் கீழ் மட்டத்தில் இருந்து கடுமையான பயிற்சி பெற்று ஒவ்வொரு படியாக ஏறி மேலே வருகிறார்கள்.

பிரச்னைகளும் வழிமுறைகளும் ஒருவருக்கு தெரிந்து இன்னொருவருக்கு தெரியாமல் போக வாய்ப்பு இல்லாத வெளிப்படையான, காலத்தால் புடம் போடப்பட்ட பயிற்சி முறை இது. எனவே, உச்சத்தை தொட்டுவிட்ட ஒரு அதிகாரி ஓய்வு பெறும் வேளையில் அந்த இடத்தில் அமர்ந்து அவர் விட்டுச் செலும் பணிகளை தயக்கமின்றி எதிர்கொள்ள அடுத்த நிலை அதிகாரிகள் தயாராகவே இருப்பார்கள்.

சொல்லப்போனால், போகிறவர் எங்கெல்லாம் சறுக்கினார் என்பதை அருகிலிருந்து பார்த்த அனுபவம் இருப்பதால், புதியவரால் இன்னும் சிறப்பாகவே செயல்பட முடியும்.

தவிர, உச்சப் பதவி என்பது தகுதியுள்ள எல்லோராலும் அடையக்கூடியது அல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே தகுதி, அனுபவத்துடன் இருப்பார்கள்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் செம்மைப்படுத்தி வைத்துள்ள அளவுகோல் கொண்டு ஒவ்வொரு அதிகாரியின் பணி அனுபவத்தையும் பரிசீலித்து மூன்று பேர் கொண்ட பட்டியலை தயாரிக்கும். அதிலிருந்து முதலமைச்சர் ஒருவரை தேர்வு செய்து நியமிப்பார்.

இப்படியாக அக்னிப்பாதையில் நீந்தி வந்து உச்சப்பதவியை அடையும் ஓர் அதிகாரி அதற்கான அந்தஸ்து, அதிகாரம், மரியாதை குறைக்கப்படுவதை மனதார அனுமதிப்பாரா?

ஆலோசகர் என்ற பொறுப்பில் பழையவரை தொடரச் செய்துவிட்டு, நீங்கள்தான் டாப் என்று போற்றுவதை ரசிப்பாரா? நக்கலா என்றுதான் மனதுக்குள் கறுவுவார். அந்த நொடியில் அங்கே ஒரு புதிய அதிகார மையம் உருவாகி, கண்களுக்கு புலப்படாத பனிப்போர் தொடங்கி விடும்.

ஒவ்வொரு இலாகாவிலும் இந்த பனிப்போரின் விளைவுகளை அடுகடுக்காகச் சொல்கிறார்கள். பல புத்தகங்கள் போடலாம் போலிருக்கிறது.

அரசு நிர்வாகம் எனும் ராட்சத எந்திரத்தில் என்ன கோளாறு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படுபவது அப்பாவிகளான பொது மக்கள்தான். முதல்வர் மாற்றத்தால் அரசு நிர்வாகத்தில் மாற்றம் வந்துவிட வில்லை என்பதை தினந்தோறும் பார்க்க முடிகிறது. ஆளும் கட்சி மாறவில்லை, அதன் தலைமையும் மாறவில்லை, அப்படி இருக்கையில் அரசு நிர்வாகம் மட்டும் எப்படி மாறும் என்ற கேள்வி நியாயமானது.

இங்கு நாம் குறிப்பிடுவது பழைய தலைமையின் கீழ் அரசு நடந்த தவறான பாதையை.

மறுபடியும் சகாயம் கேசுக்கே வருவோம். அரசாணை எதுவும் பிறப்பிக்காமலே சகாயத்துக்கு கூடுதல் பொறுப்பாக கிரானைட் ஆய்வை ஒப்படைத்தது அரசு. அந்த தகவலையே ரகசியமாக மதுரை கலெக்டருக்கு மட்டும் தெரிவித்தது.

கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த நேரத்தில் அரசாணை பிறப்பித்து விட்டோமே என்று அவசரமாக ஒரு ஆணையின் நகலை தாக்கல் செய்தது. ஏன் இந்த ரகசியம்? மறைத்த பிறகு எதற்காக இந்த அவசரம்?

அந்த ஆணையிலும்கூட சகாயத்தை அவர் வகிக்கும் தற்போதைய பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை. மேலும், தமிழக கனிம வளக் கொள்ளையை

ஆய்வு செய்வார் என்பதற்குப் பதிலாக, மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் தொடர்பாக மட்டும் சகாயம் ஆய்வு செய்ய அரசு வட்டம் போட்டிருக்கிறது. எனினும் ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இதோடு அவமதிப்பு வழக்கை முடிக்கிறோம் என நீதிபதிகள் கூறிவிட்டனர்.

court

ஆனால் ஒரிஜினல் வழக்கு முடியவில்லை. அது விசாரணைக்கு வரும்போது, சகாயத்தின் ஆய்வு வரம்பை அதிமுக அரசு தன்னிச்சையாகச் சுருக்கி அரசாணை வெளியிட்ட விவகாரம் நிச்சயமாக விவாதத்துக்கு வரும். நாங்கள் ஒரு ஆணை பிறப்பித்தால் அதிலேயே நீங்கள் குறுக்கீடு செய்கிறீர்களா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது.

இதுதான் ஆலோசகர்கள் அரசுக்கு காட்டும் வழி. நீதிமன்றங்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும் வழி.

பொதுவாக நீதிமன்றங்கள் - கீழ் கோர்ட் தொடங்கி சுப்ரீம் கோர்ட் வரையிலும் - அரசுக்கு எதிராக சண்டை போடுவது போன்ற தோற்றத்தை எழுப்ப விரும்பாது.

இரண்டுமே அரசியல் சாசன அதிகார அமைப்புகள் என்பது போக, அத்தகைய தோற்றம் எழுந்தால் மக்களுக்கு இரண்டு அமைப்புகள் மீதும் நம்பிக்கை குறைந்துவிடும் என ஒரு அச்சம் இருக்கிறது. தவிர, என்னதான் சுய அதிகார அமைப்பாக இருந்தாலும் சின்னச் சின்ன தேவைகளுக்குக்கூட அரசைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக அவை சும்மா வேடிக்கை பார்ப்பதாகவோ வேறுபக்கம் திரும்பிக் கொள்வதாகவோ அர்த்தமில்லை. சரியான நேரம் வரும்போது போட்டுப் பார்த்துவிட எந்த நீதிபதியும் தயங்குவதில்லை.

இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்த சொத்துக் குவிப்பு தனி நீதிமன்றம் கடைசியில் போட்டதல்லவா ஒரு போடு. ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அப்பீல் செய்தபோது உச்ச நீதிமன்றம் கேட்டதல்லவா ஒரு

கேள்வி: ‘கீழ் கோர்ட்டிலும் ஸ்பெஷல் கோர்ட்டிலும் கேசை 18 ஆண்டுகள் இழுத்தடித்த நீங்கள், ஹைகோர்ட்டில் 20 ஆண்டுக்கு மேல் இழுத்தடிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?'

ஜெயலலிதாவும் சரி அவரது நிழல் ஆட்சியாளர்களும் சரி, தெளிவாக உணர வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், 'இங்கு நடக்கும் எல்லாவற்றையும் எல்லாரும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்பதுதான்.

தவணை முறையில் தவறு செய்தாலும் மொத்தமாகத்தான் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். தவறு செய்பவர்களே மாறுங்கள். மாற்றம் ஒன்றே நிலையானது.

உங்கள் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் அதை எதிர்பர்க்கிறார்கள்.

ரகசியம், ஒளிவுமறைவு போன்ற வார்த்தைகள் அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டிய காலகட்டம் வந்தாயிற்று என்பது அதிகார வர்க்கத்துக்கு உறைக்கும்போது

நல்லது நடக்கத் தொடங்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+