For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதறும் நிர்வாகிகள்... உடையும் கட்சி? அதிமுகவில் ஆரம்பித்தது கலகம்!

By Super Admin
Google Oneindia Tamil News

இரும்புப் பெண்மணி, சிறந்த நிர்வாகி, சர்வாதிகாரி என்றெல்லாம் பெயரெடுத்த ஜெயலலிதா இருந்தபோதே கட்சிக்குள் பூசல்களும் கோஷ்டிகளும் இருந்துகொண்டே தான் இருந்தன. ஒவ்வொரு பொது தேர்தலிலும் இது அம்பலத்துக்கு வரும். முதலில் ஒரு வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பின்னர் சில நாட்களிலோ சில மணி நேரங்களிலோ அது மாற்றம் செய்யப்பட்டும் புது பட்டியல் வெளியாகும். கட்சியை வளர்க்க பாடுபட்டார்களோ இல்லையோ மன்னார்குடி குடும்பத்தினர் கட்சியை பிளவுபடுத்த ஆரம்பத்தில் இருந்தே முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது ஜெயலலிதா இல்லாததால் அது இன்னும் எளிதாக நடந்துகொண்டிருக்கிறது.

AIADMK in big crisis

தனிக்கட்சியா? அதிமுகவா? யோசனையில் தீபா

ஜெயலலிதா இறப்புக்கு பின் கட்சி காணாமல் போய்விடும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இரண்டாம் கட்ட தலைவர் என்று யாரையும் ஜெயலலிதா உருவாக்காததால் உடனே கட்சி உடையும் சூழல் உருவாகவில்லை. சசிகலா அரியணையை கைப்பற்றிய பின்பு தான் ஆட்டம் ஆரம்பமானது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு பெருகியது. அரசியல் அனுபவம் சுத்தமாக இல்லாத தீபாவுக்கு இந்த அளவுக்கு கூட்டம் சேரும் என்று சசிகலா தரப்பு எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா உடன் இருந்த காரணத்துக்காகவே சசிகலா தன்னை தலைவராக முன்மொழியும்போது ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா வாரிசாக வருவதில் என்ன தவறு இருக்கிறது என்ற மனப்பான்மை கட்சியினருக்கு வந்துவிட்டது. வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தனது முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார் தீபா. பகல் இரவு பாராமல் தீபா வீட்டு முன் தொண்டர்களும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர். தனிக்கட்சி தொடங்கலாம் என்ற யோசனையில் இருந்த தீபாவின் மனதை சில நிர்வாகிகள் கலைத்து வருகிறார்கள்.

தனிக்கட்சி தொடங்குவதை விட அதிமுகவின் தலைமையை கைப்பற்றுவதே சிறந்தது. அதற்கான வாய்ப்புகளை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிச்சயம் வழங்கும் என்று தைரியம் தந்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் தீபாவுக்கு இன்னும் குழப்பம் நீடிக்கிறது. அதிமுகவில் 90 சதவீத ஆதரவு தீபாவுக்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தனிக்கட்சியோ அதிமுகவோ 24 ஆம் தேதிக்கு முன் தன் பெயரில் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பேரவைகள், அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருக்கிறார். அதிமுகவில் ஏற்கெனவே இருக்கும் நிர்வாகிகள் என்றால் அவர்களுக்கு பதவிகளில் முக்கியத்துவம் வழங்க ஏதுவாக இப்போதே பட்டியல் எடுத்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக முக்கிய பிரச்னைகளில் குரல் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறார் தீபா. இது சசிகலாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் தீபாவை கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லிவந்த நடராஜனே இப்போது தீபா விரைவில் எங்களுடன் வருவார் என்று சொல்லி சமாதானம் பேசிக்கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இதற்கு தீபா 'சிலர் உள்நோக்கத்தோடு வதந்திகளை கிளப்புகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. யாரிடமும் சமாதானமாக போவதற்கோ ஆதரிக்கவோ வாய்ப்பு இல்லை' என்று சொல்லிவிட்டார். கட்சியின் பெரும்பானமை பலம் தீபா பக்கம் சென்றுகொண்டிருக்கிறது.

ஆட்சியோடு கட்சியையும் கைப்பற்றும் ஓபிஎஸ்

சசிகலாவுக்கு அடுத்த செக் ஓ. பன்னீர்செல்வம். ஆட்சியில் சசிகலா குடும்பத்தை ஓபிஎஸ் ஓரம் கட்ட கட்ட கட்சியில் ஓபிஎஸ்சை ஓரம் கட்டி தனிமைபடுத்தும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. எம்பிக்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்படாத ஓபிஎஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஓரமாக உட்கார வைக்கப்பட்டார். இதன் பின்னர் ஓபிஎஸ் அடங்கி விடுவார் என்று எதிர்பார்த்த சசிகலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த அவமதிப்புகளுக்கு பிறகு ஓபிஎஸ்சுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது. தனது சகிப்புத்தன்மையாலும் மென்மையான போக்காலும் ஓபிஎஸ்சுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாவதால் எம்.எல்.ஏக்களும் எம்பிக்களும் தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சுக்கு போன் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நாம் ஏன் ஒரு குடும்பத்தின் அதிகார பசிக்கு இரையாக வேண்டும்? என்பது எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது. நாளை ஓபிஎஸ்சை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலாவை அமர்த்தும் முயற்சிகள் நடந்தால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள்.

சகோதர சண்டை

குடும்பத்துக்கு வெளியே இவ்வளவு நடக்கும்போது அதிகாரத்தில் இருக்கும் குடும்பத்தினர் எவ்வளவு ஒற்றுமையாக இருக்க வேண்டும்? ஆனால் சசிகலா குடும்பத்தில் சகோதர யுத்தம் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. சசிகலா கட்சி நிர்வாகத்தில் தினகரனுக்கும் வெங்கடேஷுக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறார். இது நடராஜன் மற்றும் திவாகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரனின் கையே இப்போது கட்சியில் ஓங்கியுள்ளது. பன்னீர்செல்வம் கட்டுப்படுவது தினகரன் ஒருவருக்கு மட்டும் தான். எனவே தினகரனை வைத்துதான் பன்னீரிடம் சில காரியங்களை சாதிக்க வேண்டியுள்ளது சசிகலாவுக்கு. இது சசிகலாவின் தம்பி திவாகரன், கணவர் நடராஜன், தங்கை இளவரசி மூவருக்கும் பிடிக்கவில்லை. நடராஜன் முதல்வர் ஆகத் துடிக்கிறார். அதற்காக சசிகலாவை சிறைக்கு தள்ளவும் தயங்க மாட்டார் என்பது சசிகலாவுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடராஜனின் தயவு பல விஷயங்களில் சசிகலாவுக்கு தேவைப்படுகிறது. திவாகரன் தனக்கும் தன் மகனுக்கும் கட்சியில் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். டெல்டா மாவட்டங்களை தன் பிடியில் வைத்திருக்கிறார் திவகாரன். இளவரசிக்கு தன் மகன் விவேக்கை கட்சியில் முன் நிறுத்த
வேண்டும் என்ற எண்ணம். விவேக் கையில்தான் அதிமுகவின் பணம் கொழிக்கும் சில நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களது மூவர் கூட்டணி தினகரனையும் வெங்கடேஷையும் வெளியேற்றினால் கட்சியை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போடுகிறது. இந்த பிரச்னை, வாக்குவாதங்கள் தினமும் நடப்பதால் தன சசிகலா வெளியிலேயே வருவதில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். அதிகார மையங்கள் ஆளுக்கொரு பக்கமாக தங்களது விசுவாசிகளை இழுக்கிறார்கள். கோஷ்டிகள் உருவாகி விட்டன.

ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களும் மீண்டும் கட்சியில் ஜெயலலிதா இருந்தவரை யாரையெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தாரோ அவர்கள் எல்லோரும் இப்போது கட்சிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பிரிந்துகிடக்கும் அதிகார மையங்கள். அரசு வேளான் அதிகாரி முத்துக்குமாரசுவாமியை டார்ச்சர் செய்து அவரது தற்கொலைக்கு காரணமாகி அதனால் அமைச்சர் பதவியை இழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆவின் முறைகேடுகளில் சிக்கி அதன் காரணமாக ஜெயலலிதாவால் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட மாதவரம் மூர்த்தி, ராஜகண்ணப்பன், செங்கோட்டையன், டாக்டர் விஜய், நயினார் நாகேந்திரன், கோகுல இந்திரா, இசக்கி சுப்பையா போன்றோருக்கு மீண்டும் அதிமுக மேடையை அலங்கரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நடராஜன், திவாகரன் ஆகியோரின் சிபாரிசே காரணம்.

இன்னொரு பக்கம் பிஎச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், கேபி.முனுசாமி போன்ற ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் ஓரம் கட்டப்படுகின்றனர். அவர்கள் தனி கோஷ்டியாக உருவாகி விட்டனர்.

எம்ஜிஆருக்கு நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டு இது. இந்த நூற்றாண்டு விழாவை சீரும் சிறப்புமாகக் கொண்டாட விரும்பினார் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கும் சசிகலா குடும்பத்துக்கும் தொடர்பு இல்லை என்பதால் அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதில் அக்கறை காட்டவில்லை. பெயருக்கு ஒரு விழா நடத்தி அதனோடு முடித்துக்கொண்டார்கள். அவரது அடுத்த பிறந்தநாள் அதாவது நூற்றாண்டு முடிவதற்குள் அவர் தொடங்கிய கட்சியை உடைக்காமல் விடமாட்டார்கள் போல...!

- க.ராஜிவ் காந்தி

English summary
MGR, Jayalalithaa's AIADMK is in big crisis due to the internal clashes between leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X