அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்.. கோகுல இந்திரா நீக்கம்: தினகரன் அதிரடி அறிவிப்பு


சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு நடிகர் செந்திலை அந்த பொறுப்பிற்கு டிடிவி. தினகரன் நியமித்துள்ளார்.

அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் மாற்றத்தை அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி . தினகரன் வெளியிட்டு வருகிறார். அமைச்சர்கள் காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை தினகரன் வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து கோகுல இந்திரா நீக்கம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 மா.செக்கள் மாற்றம்

இதே போன்று அரியலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமரை எஸ்.ராஜேந்திரன் நீக்கப்பட்டு பெ.முத்தையன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து குமரகுரு எம்எல்ஏ விடுவிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ ஞானமூர்த்தியும், சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தில்நாதன் விடுவிக்கப்பட்டு உமாதேவன் புதிய செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல நிர்வாகிகள் மாற்றம்

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து குமார் எம்பி, அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து கீர்த்திகா முனியசாமி, அதிமுக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எஸ்.ஆர். ராஜவர்மன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுரை அவனியாபுரம் அதிமுக இலக்கிய அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராமலிங்கம் ஜோதியும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆதரவாளர்களுக்கு பொறுப்பு

கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தினகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பொறுப்பிற்கு கோனேஸ்வரனும், ஜெயலலிதா பேரவைக்கு இணைச் செயலாளர்களாக எஸ்.ஏ.மணிகண்டராஜா, ஜெயராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர், ஜெ. பேரவையிலும் மாற்றம்

இதே போன்று எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்களாகக மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கமும், சங்கர், இரவுசேரி முரகன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைச் செயலாளராக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பால மணிமார்பனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்மதிக்கு பொறுப்பு

அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசரை செயலாளராக கே.சி.விஜயும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

TTV. Dinakaran expelled Ex minister Gokula Indra and replaced her posting with veteran comedy actor Senthil