For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளைஞர் கண்ணில் குத்திய மாடு, பலியான 14 வயது சிறுவன்: ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?

By BBC News தமிழ்
|
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?
Getty Images
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரணங்கள் தொடர்வது ஏன்?

இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வேடிக்கை பார்க்கச் சென்ற 14 வயது சிறுவன் உட்பட பலர் மரணமடைந்திருப்பது அந்தப் போட்டிகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் ஜனவரி 22ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளைப் பார்க்க பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், பாலக்கோட்டை சேர்ந்த பூ வியாபாரியின் மகனான கோகுல் என்ற 14 வயது சிறுவனும் அந்தப் போட்டிகளைப் பார்க்கச் சென்றிருந்தான்.

பார்வையாளர்களுக்கான மாடத்திலிருந்து போட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் ஆர்வ மிகுதியால் வாடிவாசலுக்கு அருகில் சென்றான். அப்போது திடீரென ஓடி வந்த காளை ஒன்று வயிற்றில் முட்டியதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.கோகுல் மட்டுமல்ல, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உயிர் பலி நடந்துள்ளது.கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி. மலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வடசேரி பள்ளப்பட்டியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் சிவக்குமார் சோர்வடைந்து ஓரமாக உட்கார்ந்திருந்தபோது, ஆவேசமடைந்த காளை ஒன்று அவரைக் கண்ணில் முட்டியது. சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரவிந்த் ராஜ் என்ற வீரரை காளை குத்தி வீசியதில், படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே நாளில் சூரியூர் ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்க்கப் போன ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார். பிறகு, சிராவயல் ஜல்லிக்கட்டிலும் ஒருவர் உயிரிழந்தார்.

திருமயம் அருகில் உள்ள ராயவரம் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டைப் பார்க்க வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் மூன்று பேர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கச் சென்றவர்கள். சுமார் 450 பேர் வரை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளால் காயமடைந்திருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம். சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக நடந்த மிகப் பெரிய போராட்டத்தை அடுத்து, மீண்டும் அனுமதிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு, இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஊடகங்களும் அரசு நிர்வாகமும் கொடுக்கும் கவனம் வெகுவாக அதிகரித்தது. தடைக்கு முந்தைய காலகட்டத்தைவிட, இந்தப் போட்டிகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.ஆனால், அதேநேரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விதிமுறைகள் போன்றவை கடுமையாகச் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. வாடிவாசலுக்குள் மாடுகள் வருவதற்கு முன்பாக முழுமையாக கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்படுகின்றன. மாடு பிடிக்கும் வீரர்கள் குடித்திருக்கிறார்களா என்பதும் மாடுகள் துன்புறுத்தப்படாமல் பிடிக்கப்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு
BBC
ஜல்லிக்கட்டு

இதற்கு முன்பாக, சாதாரண மண் தரையில் நடந்து வந்த போட்டிகளின்போது கீழே விழுவதால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது தென்னை நார் விரிக்கப்பட்ட களங்களிலேயே போட்டிகள் நடக்கின்றன.அதேபோல, பார்வையாளர்களுக்கான மாடங்கள் போன்றவையும் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவர்கள் மாடு பிடிக்கும் இடத்திற்குள் வராமல் தடுக்கப்படுகிறார்கள்.ஆனால், இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறித்தான் மரணங்களும் காயங்களும் ஏற்படுகின்றன. இம்மாதிரி காயமடைபவர்களும் உயிரிழப்பவர்களும் பெரும்பாலும் எளிய பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பதும் இளைஞர்களாக இருப்பதும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தால், இந்த உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என்கிறார்கள் இந்தப் போட்டி ஏற்பாடுகளோடு தொடர்புடையவர்கள்.

"அலங்காநல்லூரைப் பொறுத்தவரை 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு உயிரிழப்புகளே கிடையாது. காரணம், இங்கே களத்தில் மாடு பிடிப்பவர்களை மட்டும்தான் அனுமதிக்கிறோம். மாடு பிடிக்கும்போது குத்துப்பட்டு காயமடைபவர்கள் உண்டு.

ஆனால், வேடிக்கை பார்க்க வந்து காயமடைவர்கள் மிகக் குறைவு. மாடு வாடிவாசலில் வெளியேறியதில் இருந்து, அந்த மாடு ஓடி முடிந்து மாட்டுக்காரர்கள் பிடிக்கும் வரை கண்காணிக்கிறோம். கலெக்ஷன் பாயிண்ட் எனப்படும் இடத்தில் மாட்டுக்காரர்கள் கண்டிப்பாக மாட்டைப் பிடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஊருக்குள் ஓடி, போகிறவர்கள், வருகிறவர்களைக் காயப்படுத்தும்.அதேபோல, பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக இரட்டைத் தடுப்பு அமைக்கப்படுகிறது. இதனாலும் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு
Getty Images
ஜல்லிக்கட்டு

உயிரிழப்புகள் பெரிதும் ஏற்படுவது மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளில்தான். அவற்றில் காளைகள் பல இடங்களில் அவழ்க்கப்படுவதால், எதிர்பாராதவிதமாக சிலர் குத்துப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன," என்கிறார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியின் தலைவர் ரகுபதி.ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது என்கிறார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் மாநிலத் தலைவரான முடக்கத்தான் மணி.

"போட்டிகளில் காயமடைந்தவர்களை 600 - 700 மீட்டர் தூக்கிச் சென்றுதான் ஆம்புலன்சில் ஏற்ற வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இதில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய பொன்னான நேரம் வீணாகிறது.

ஜல்லக்கட்டுப் போட்டிகளுக்கென அமைக்கப்படும் விஐபி கேலரிகளுக்கு பின்னால், கார்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த இடத்திலேயே ஒரு சிறிய மருத்துவமனை அமைப்பை ஏற்படுத்தி, முதலுதவி செய்யலாம். இதன்மூலம் பல உயிர்களைக் காக்கலாம்" என்கிறார் மணி.மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் கண்டிப்பாக ஆயுள் காப்பீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் மணி.

"பாலமேட்டில் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய குடும்பத்திற்கு என்ன பதில் சொல்வது. அரசு அளிக்கும் உதவித் தொகை போதாது. ஆகவே ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடும் கட்டாயமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்," என்கிறார் மணி.

தமிழ்நாட்டில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பிரபலமான ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன என்றாலும், தை மாத இறுதி வரை பல கிராமங்களில் சிறிய அளவில் போட்டிகள் தொடர்ந்து நடக்கவுள்ளன. இன்னும் பலர் காயமடைவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நிகழக்கூடும்.பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்துவதும் விரைவில் மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதும், போட்டிகளின்போது உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க உதவலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
cow stabs youth in eye, 14 year old boy dies, why do deaths continue in jallikattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X