For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தமிழர் புத்தாண்டு'- பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

By Staff
Google Oneindia Tamil News

Thiruvalluvar
திருவள்ளுவர் ஆண்டு 2036 சுறவம் 03ம் நாள் (16. 01. 2005) அன்று பாரிசில் ஐரோப்பிய தமிழ்ச் சங்கம், நடத்திய தமிழர் விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் ஆற்றிய சிறப்புரை:

புத்தாண்டில் புத்துலகைப் படைக்கப் புறப்படும் தமிழினமே, நில்! உன் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு எங்கே தொடங்குகிறது என அறிவாயா நீ, சொல்!

சித்திரை மாதத்தில் புத்தாண்டு என்றிருந்த நிலை மாற்றிய தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராவது தெரியுமா உனக்கு? அறியாமை தவறில்லை, அறிந்துகொள்ள விரும்பாமையே பெருந்தவறு!

உண்ணல் உறங்கல் பெண்டிரை நண்ணல் என்ற உருப்படா வட்டத்துள் உலா வரும் தமிழினமே, கன்னல் மொழி தமிழுக்கெனத் தனிப் புத்தாண்டைத் தம் ஆராய்ச்சித் திறத்தாலே உருவாக்கித் தந்தவர் மறைமலை அடிகளார்!
தனித் தமிழின் தந்தை இவர்! அன்றிருந்த தமிழகத்தில், வடமொழி கலவாமல் நடை போட முடியாது தமிழ் என்று தவறாகக் கருதி இருந்த நிலையை உறுதியாக நின்று மாற்றியவர். தனித்தமிழ்க் கொடியை ஏற்றியவர். வட மொழியோ பிற மொழியோ ஏதும் கலவாமலேயே வடிவாகத் தனித்தமிழ் எழுதிட முடியும் என எண்பித்தவர்.

'வேதாச்சலம்' என்ற தன் வடமொழிப் பெயரை, 'மறைமலை' என மாற்றிக்கொண்டவர். இல்லறத்திலிருந்து ஒதுங்கித் துறவறம் பூண்டதால் 'அடிகள்' என்ற பின்னடை சேர 'மறைமலை அடிகள்' ஆனவர். வடமொழி படித்தவர், ஆங்கிலப் புலமை மிக்கவர், தமிழ் அறிஞர்! 'மணிவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்', 'முல்லைப் பாட்டு - மூலம், ஆராய்ச்சி உரை' போன்ற ஆய்வு நூல்களின் ஆசிரியர். ஆராய்ச்சிப் பேரறிஞர்.

திருவள்ளுவர் காலம் பற்றிப் பெருமளவு ஆராய்ச்சி மேற்கொண்டு ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வு செய்த பின், கிறித்துவுக்கு 30 ஆண்டுகட்கு முன்னர் வள்ளுவர் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இவர் வந்தார்.

சென்னையில் திருவள்ளுவர் கழகம் 18. 01.1935-இல் வள்ளுவருக்கு விழா எடுத்தது. இவ்விழாவில் தமிழ்த் தென்றல் திருவாரூர் வி.கலியாண சுந்தரனார் (திரு. திருவிக), முத்தமிழ்க் காவலர் திரு கி.ஆ.பெ. விசுவநாதன் (திரு கி.ஆ.பெ)... போன்ற தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய மறைமலை அடிகளார், "கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்ப திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்" என அறிவித்துத் திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.

கிறித்து ஆண்டுடன் 31 அண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட வேண்டும் என்பது அடிகள் குறிப்பு. இதனை அறிஞர்கள் அவை ஏற்றக்கொண்டது.
அன்று தொட்டு அவ்வாண்டு நடைமுறைப் படலாயிற்று. (காண்க: 'திருக்குறள் வாழ்வியல் உரை' -மதுரை இளங்குமரனார். வர்த்தமானன் பதிப்பகம்)

'1969 -இல் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின், பொங்கலுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டு அரசு விடுமுறை அளிப்பது என்றும் 01.01.1970 முதல் அது நடைமுறைக்கு வரும் என்றும் ஆணை இட்டார்.

திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ் நாடு அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட் குறிப்பிலும், 1972 முதல் குறிப்பாக அரசிதழிலும், 1981 முதல் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைத் திங்கள் 2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாள் என்று அரசு 1974 முதல் கொண்டாடி வருகிறது.' (காண்க : திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் 117).

இதுதான் திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பு, வளர்ப்பு, வரலாறு.

திருவள்ளுவர் ஆண்டின் வரலாற்றை அறிந்துகொண்டதோடு நிற்காமல் தமிழர்களாகிய நாம், தமிழ் உணர்வோடு; அந்த ஆண்டு முறையைப் பின்பற்ற வேண்டாவா? கிறித்து ஆண்டோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக்கொள்ளுங்கள் - திருவள்ளுவர் ஆண்டு கிடைத்துவிடும்.

எடுத்துக் காட்டாக, இந்த ஆண்டைக் கிறித்து ஆண்டு முறைப்படி 2005 என எழுதுகிறோம். இத்தோடு 31-ஐக் கூடடினால் 2036 வருகிறது அல்லவா! அவ்வளவுதான். இதுதான் திருவள்ளுவர் ஆண்டு.

மறைமலை அடிகள் காட்டிய தனித்தமிழ் உணர்வு நம்மிடையே மலர வேண்டும், அடிகளார் ஊட்டிய அந்த உணர்வு இன்னும் வளரவேண்டும். "தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழைப் பயில வேண்டியது அவர்களது இன்றியமையாத கடமை. தமிழர், தம் தாய் மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருத வேண்டும்!" சொல்பவர் யார் தெரியுமா?. காந்தி அடிகளேதான்! (காண்க: 'காந்தி அடிகள் வலியுறுத்திய தமிழ் உணர்வு'-லேனா தமிழ்வாணன், குமுதம் 24.05.2004).

அன்று அண்ணல் காந்தி சொன்ன அறிவுரை இன்றும் நமக்குப் பொருந்துகிறதே! பல நிலைகளில் தமிழைக் கோட்டை விட்டிருக்கிறோம். பாருங்களேன், 60 ஆண்டுச் சுழற்சியில் நாம் புழங்கி வந்த, பிரபவ என்று தொடங்கி அட்சய என நிறைவு பெறும் ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள். ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லையே! அத்தனையும் வடமொழிப் பெயர்களின் தமிழ் வடிவங்கள்.

ஆங்கிலேயனை விரட்டிய பிறகும் ஆங்கிலத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். வடமொழிக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகும் புரியாத இந்த வடமொழிப் பெயர்கள் நமக்கு எதற்கு? இனிய தமிழ்க் கனிகள் இருக்க கனியாத காய்கள் மேல் இன்னும் ஏன் உவப்பு?

திருவள்ளுவர் ஆண்டைப் பயன் படுத்தினால் இந்த வடமொழிச் சிக்கல் எழாது, தமிழனின் தனிப் பெரும் தன்மானமும் விழாது! ஆகவே, திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பயன்படுத்துவோம், எங்கும் எதிலும் எப்போதும்!

தொடரும்...

- பெஞ்சமின் லெபோ ([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X