For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்

By Staff
Google Oneindia Tamil News

Robert Caldwell
-முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் 'தேவ பாஷை' என உயர்த்தியும் தமிழை 'நீச்சபாஷை' எனத் தாழ்த்தியும், தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, 1875 ) எனும் நூல் ஆகும்.

தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது. கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள 'கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று 'கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படி பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் 'அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் 'பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டி யிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புக்கொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது.

சென்னைக்கு வந்ததும் 'துருவர்' (Mr. Drew) எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலான வற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மிசன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார். நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விரும்பாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.

மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் (Tracy) அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையை அன்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது....

(தொடரும்)

மின்னஞ்சல்: [email protected]
இணையம்: http://www.muelangovan.blogspot.com/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X