For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாவுக்கு வயது 100!

By Staff
Google Oneindia Tamil News

Anna with Karunanidhi
பேரறிஞர், தென்னாட்டு சாக்ரடீஸ் என அனைத்துக் கட்சியினராலும், மக்களாலும் அன்புடன் அழைக்கப்படும், திமுகவை தோற்றுவித்தவரும், திராவிட இயக்க ஆட்சிகளின் முதல் முதல்வருமான மறைந்த பேரறிஞர் அண்ணாதுரைக்கு இன்று 100 வயதாகிறது. இதையொட்டி அனைத்து திராவிட கட்சிகளும், இயக்கங்களும் அண்ணாவின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றன.

காஞ்சிபுரம் தந்த அருமைத் தலைவர்தான் அண்ணா. சி.என். அண்ணாதுரை என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் அருமையான, பாசத்துக்குரிய அண்ணாவாக அறியப்பட்டவர் அண்ணாதுரை.

தென்னகத்தில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையின் முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் அண்ணா. மிகச் சிறந்த எழுத்தாளர், திறம்பட்ட பேச்சாளர், தமிழைப் போலவே ஆங்கிலத்தையும் அட்சர சுத்தமாக பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர், சிறந்த நிர்வாகி, சீரிய தலைவர், நேர்மைக்கு பேர் போனவர் என்று பன்முகம் கொண்டவர் அண்ணா.

1909ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, காஞ்சிபுரத்தில் பிறந்தார் அண்ணா. அவருடைய தந்த நடராஜ முதலியார். தாயார் பங்காரு அம்மாள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார் அண்ணா. இதனால் அவருடைய சகோதரி ராஜாமணியே, அண்ணாவுக்கு தாயும் ஆனார்.

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா, படிப்பு முடிந்ததும், நகராட்சி அலுவலகத்தில் கிளர்க் வேலையில் சேர்ந்தார். 1934ம் ஆண்டு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்) படிப்பை முடித்தார்.

அதன் பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ. (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்ட மேற்படிப்பை முடித்தார். பின்னர் அங்கு சிறிது காலம் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அவருக்கு இதழியலிலும், அரசியலிலும் ஈடுபாடு ஏற்பட்டது.

மாணவப் பருவத்திலேயே அண்ணாவுக்கு சொற்பொழிவில் அசாத்திய திறமை இருந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக பேசக் கூடிய ஆற்றலைப் பெற்றார்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் பாலபாரதி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நவ யுவன் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பின்னர் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில வார இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார். ஈரோட்டிலிருந்து வெளியான விடுதலை வார இதழின் ஆசிரியர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் நிறுவிய இதழ்தான் விடுதலை.

1942ம்ஆண்டு திராவிட நாடு என்ற பெயரில் சொந்த வார இதழை தோற்றுவித்தார் அண்ணா. தனது எழுத்தாற்றலால் இந்த இதழுக்கு பெரும் திரளான வாசகர்களை ஈர்த்தார். காஞ்சி என்ற இதழையும் அவர் ஆசிரியராக இருந்து கவனித்தார்.

1957ம் ஆண்டு ஹோம்லேண்ட் என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1966ம் ஆண்டு ஹோம்ரூல் என்ற ஆங்கில இதழையும் நிறுவினார்.

மிகச் சிறந்த சிறுகதைகளையும், நாவல்களையும் அண்ணா படைத்தார். அவருடைய கதைகளில் இடம் பெற்ற வசனங்கள் வெகு வேகமாக பிரபலமாயின. எதுகை மோனை நடையுடன் அவர் பயன்படுத்தி மிடுக்கான வசனங்கள், உவமைகள் பிரபலமாகின. கதை, வசனத்திலும் அவர் தேர்ச்சி பெற்றார். நாடகங்களிலும் நடித்தார்.

பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய அண்ணாவுக்கு பெரும் ரசிகர் கூட்டம் திரண்டது. தன் முன் திரண்டு நிற்கும் கூட்டத்தை, தனது பேச்சாற்றலால் அப்படியே, ஆடாமல், அசையாமல் கட்டிப் போடும் வல்லமை அவரது வார்த்தைகளில் இருந்தது.

சென்னை கடற்கரைகளில் அண்ணாவின் கூட்டங்களுக்கு திரண்ட கூட்டம் பெரும் சாதனையாக இன்றளவும் இருந்து வருகிறது. அதிலும் அவரது பேச்சைக் கேட்க முன்வரிசையில் அமர பெரும் தள்ளுமுள்ளே நடக்குமாம்.

பெரியாருடன் இணைந்தபின்னர் அண்ணாவின் அரசியல் வாழ்வு மேலும் மெருகேறியது. பெரியாருடன் இணைந்து, நீதிக் கட்சிைய வலுப்படுத்த உதவினார் அண்ணா. பின்னர் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தபோது அண்ணாவைப் பின்பற்றி பலர் திராவிடர் கழகத்திலிருந்து வந்தனர் - உருவானது திராவிட முன்னேற்ற கழகம்.

1957ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அண்ணாவின் திமுக போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.

சட்டசபையில் திமுக நுழைந்தது, சட்டசபையில் அண்ணாவின் பேச்சுக்கள் சகாப்தம் படைத்தவை. இன்றளவும் அனைவரும் மேற்கோள் காட்டக் கூடிய அளவுக்கு அவை வல்லமையுடன் உள்ளன.

1967ம் ஆண்டு அண்ணா தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அதேபோல செனனை மாகாண சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967ம் ஆண்டு பிப்ரவரியில்நடந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுக்கு அமோக வெற்றி. அண்ணா முதல்வரானார். 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வர் பதவியில் நீடித்தார் அண்ணா. ஆனாலும், அவருடைய எளிமை, நிர்வாகத் திறமை, சுறுசுறுப்பான செயல்பாடுகள் ஆகியவற்றால் மிகச் சிறந்த முதல்வராக உயர்ந்தார் அண்ணா.

ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் எனது அரசு உற்ற நண்பனாக விளங்கும் என்றார் அண்ணா. ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு தருவேன் என்றும் உறுதியளித்தார்.

அண்ணாவின் பதவிக்காலத்தில், சென்னையில் 1968ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் உலகத் தமிழ் மாநாடு சீரிய முறையில் நடந்தேறியது.

உலகத் தமிழர்களின் உன்னத தலைவராக விளங்கிய அண்ணா, 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி மறைந்தார். அவரது புகையிலை பழக்கமே அவரது உயிருக்கு எமனாக மாறியது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னரும் கூட பலனளிக்காமல் மறைந்து போனார்.

சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த இறுதிச் சடங்கின்போது ஒன்றரை கோடி பேர் திரண்டனர். இது ஒரு உலக சாதனையாகும். இன்றளவும் எந்த உலகத்தலைவரின் இறுதிச் சடங்குக்கும் இந்தளவு மக்கள் கூடியதில்லை.

அண்ணாவின் சாதனைகள்

அண்ணாவின் பெரும் சாதனையாகவும், அவருக்கு இன்றளவும் புகழ் சேர்ப்பதாகவும் உள்ளது, சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியமைத்ததுதான்.

அதேபோல காங்கிரஸ் ஆட்சிகளுக்கு தமிழ்நாட்டில் முற்றுப் புள்ளி வைத்ததும் அண்ணாதான். திமுக ஆட்சிக்கு வந்த அன்று முதல் இன்று வரை காங்கிரஸால் ஆட்சிப் பீடத்தை தொடக் கூட முடியாத நிலை உருவாகி விட்டது.

மத்தியில் குவிந்து கிடந்த அதிகாரங்களை மாநிலங்களுக்கும் கணிசமான அளவில் கொண்டு வந்த சாதனையையும் அண்ணாதான் படைத்துள்ளார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வாதத்ைத டெல்லியிலே எடுத்து வைத்து அதை நிரூபித்து, தென்னக மாநிலங்களுக்கும் நிறைய அதிகாரங்கள் கிடைக்க வழி செய்தவர் அண்ணா.

ஓரிரவு என்ற நாடகத்தை ஒரே நாள் இரவில் எழுதி முடித்தார் அண்ணா. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாக்கப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது.

அண்ணாவின் எழுத்துக்கள்

அண்ணாவின் பொன் எழுத்துக்களில் உருவான வேலைக்காரி, ஓரிரவு, ஆரிய மாயை, கம்பரசம் உள்ளிட்ட அனைத்துமே பெரும் புகழ் பெற்றவை.

கம்ப ராமாயணத்தை விமர்சித்து அவர் எழுதிய கம்பரசம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதேபோல பிராமண, ஆரிய ஒப்பீட்டு ஆய்வாக அமைந்த ஆரிய மாயை நூலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அண்ணாவின் பொன்மொழிகள்

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது

ஒன்றே குலம், ஓருவனே தேவன்

கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு

கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு

மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்

சட்ட சபையில் தப்பு தாளங்கள் போடாதீர்

பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல, நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல

தேடிச் செல்வதில்லை, நாடி வந்தால் விடுவதில்லை

ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது

பெரியாரின் சிஷ்யராக விளங்கிய அண்ணா இன்றைய திராவிட இயக்க அரசியல்வாதிகள் பலருக்கும் குருவாகவும் திகழ்கிறார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கு அன்புள்ள அண்ணனாகவும், ஆசிரியராகவும், தலைவராகவும் திகழ்ந்தவர் அண்ணா. அண்ணா இருக்கும் வரை இந்த இரு பெரும் தலைவர்களும் ஓரணியில், ஒருமித்து செயல்பட்டு வந்தனர். அண்ணாவின் மறைவு இவர்களை இரு துருவங்களாக்கி விட்டது. இந்த இரு துருவங்களும் பல அரசியல் நட்சத்திரங்களை உருவாக்கிய பெருமைக்கும் உரியவர்களாகி விட்டனர்.

அண்ணாவின் நூற்றாண்டை இன்று திமுக, அதிமுக, மதிமுக, தி.க. உள்ளிட்ட அனைத்து திராவிட கட்சிகளும், இயக்கங்களும் பல்வேறு முறைகளில் சிறப்பாக கொண்டாடி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X