• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம்

By Staff
|

Malaysian tamil Kalanjiyam
முதல் பக்கம்

மலேசியா, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் 1887முதல் 1987 வரை எழுதியுள்ள கவிதைகளை 40 ஆண்டுகளாகத் தொகுத்து முரசு நெடுமாறன் வெளியிட்ட நூலே மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ஆகும். இந்நூல் 1080 பக்கம் கொண்டது. 254 கவிஞர்கள் எழுதிய 650 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ ஒரு இலட்சம் கவிதைகளிலிருந்து 650 கவிதைகள் சிறப்பு நோக்கித் தொகுக்கப்பட்டுள்ளன.14 உட்தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.

மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

இந்நூல் வெறும் களஞ்சியமாக மட்டும் அமையாமல் மலேசியத்தமிழ் இலக்கிய வரலாறு, மலேசிய நாட்டுவரலாறு,தமிழக வரலாறு எனப் பல சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ளது. மலேசியத் தமிழர்களின் அனைத்துத் துறை பற்றிய செய்திகளையும் தாங்கியுள்ளது. மலேசியாவில் வெளிவந்த, வெளியாகும் இதழ்கள், நூல்கள், ஆண்டுமலர்கள், சிறப்பு வெளியீடுகள் எனப் பலவற்றைப் பற்றிய செய்திகள் உள்ளன.ஒரு களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்றால் இந்நூலைப் பார்த்துத் தொகுக்கவேண்டும் என்ற அளவில் இது மாதிரி நூலாக விளங்குகிறது.

முரசு நெடுமாறன் தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆய்வரங்குகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்தவர். தமிழகத்தின் புகழ்பெற்ற ஏடுகள் பல இவரின் சிறப்புச் செவ்வியை வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் தோன்றியும் இலக்கிய அரங்குகளில் கலந்து கொண்டும் மலேசியத்தமிழ் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். முரசு நெடுமாறனின் தமிழ்ப்பணியைப் பாராட்டி அரசும், தமிழ் அமைப்புகளும் பல்வேறு பாராட்டுகளை வழங்கியுள்ளன. பரிசுகளைத் தந்துள்ளன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1997 இல் இவரின் மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியத்தைத் தேர்ந்தெடுத்து வெ.மாணிக்கவாசகம் புத்தகப்பரிசான 5000 மலேசிய வெள்ளியை அளித்தது.தமிழக அரசு பாவேந்தர் விருது அளித்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவருக்குத் தமிழவேள் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது.

முரசு நெடுமாறன் வளர்ந்துவரும் அறிவியல்,தொழில் நுட்ப வளர்ச்சியினைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒலிப்பேழைகளிலும், குறுவட்டுகளிலும் தம் படைப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். பாடிப்பழகுவோம் என்னும் தலைப்பில் இவர் உருவாக்கிய குறுவட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

முரசு நெடுமாறன் செயற்கரிய பல செயல்களைச் செய்த பெரியவராக விளங்கும் அதே வேளையில் தம் குடும்பப் பணிகளிலும் செம்மையாக வாழ்ந்துள்ளார். இவரின் துணைவியார் திருவாட்டி சானகி(மதி) அம்மையார்.1960 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முரசு முத்தெழிலன், இளவரசு எனும் ஆண்மக்கள். அமுதா, அல்லிமலர் என்னும் இரு பெண்மக்கள்.

முத்தெழிலன் கணிப்பபொறி வல்லுநராக உலக அளவில் மதிக்கப்படுபவர். முரசு அஞ்சல் செயலியைக் கண்டுபிடித்தவர். தமிழைக் கணிப்பொறிக்குக் கொண்டு வந்த முன்னோடிகளுள் ஒருவர். உத்தமம் என்ற தமிழ் இணைய அமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர். முரசு நெடுமாறனின் இளைய மகன் இளவரசு. இவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர். பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

முரசு அவர்களின் இரு பெண்மக்களும் இசையறிவு பெற்றவர்கள்.முரசு எழுதிய பாடலுக்கு அவர் மகன் இசையமைக்க அவர் மகள் பாடுவதால் அவரின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் எனல் பொருந்தும்.அவ்வகையில் பாடிப்பழகுவோம் என்ற ஒலிப்பேழை பத்துப் பாடல்களுடன் 1998 இல் உருவானது. இரண்டாம் பகுதியும் அண்மையில் வெளிவந்துள்ளது.

முரசு நெடுமாறன் தேர்வெழுதும் மாணவர்களுக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசத் தமிழ்வழிகாட்டி வகுப்புகளை நடத்திவருகிறார்.இதனால் எண்ணற்ற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இவர் தமிழ்ப்பண்பாடு மலேசியாவில் செழித்துவளர 1978 முதல் மாணவர் பண்பாட்டு விழாக்களை நடத்திவருகிறார். மாணவர்களைப் படைப்பாற்றல் மிக்க வர்களாக்க இவ்விழா பெரிதும் உதவுகிறது. கல்வியாளர்கள்,சமுதாய அரசியல் தலைவர்களால் பெரிதும் வரவேற்கப்படும் விழாவாக இது மலேசியாவில் விளங்குகிறது.

எளிய தமிழ்க்குடும்பத்தில் பிறந்து, கொள்கையுணர்வுடனும், தமிழ்ப்பற்றுடனும் விளங்கி, மனைத்தக்க மாண்புடையவரைப் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தம் பணிகளுக்கு என்றும் துணைநிற்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அருள்திரு பங்காரு அடிகளாரையும் அவர்களின் துணைவியார் புலவர் இலக்குமி பங்காரு அடிகாளாரையும் உயர்வாகப் போற்றுபவர்.

(தமிழ் ஓசை நாளேட்டில் இணைப்பாக வெளிவரும் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் வரிசை 1 என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X