For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உறவுகளின் துரோகம்: முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

By Staff
Google Oneindia Tamil News

1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்... ராஜம் கிருஷணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர்.

1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.

உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது.

இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?

திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். பிள்ளைகள் கிடையாது. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் விட்டு வைத்தாராம்.

ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட்டு மொத்தமாக ஏப்பம் விட்டுவிட, 83 வயதில் நடுத் தெருவில் நிர்க்கதியாய் நிற்க, சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் கை கொடுத்துள்ளனர்.

அவர்கள்தான் ராஜம் கிருஷ்ணனை விச்ராந்தி என்ற இந்த முதியார் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன், இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் 'உயிர் விளையும் நிலங்கள்'.

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.

இப்போதும் கட்டுரைகள் மற்றும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் ராஜம், தமிழ் இலக்கிய உலகப் போக்கு குறித்த தனது அதிருப்தியை இப்படி வெளிப்படுத்துகிறார்:

உப்பளங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்ய தூத்துக்குடி உப்பளத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தேன். காரணம் எதையும் மேம்போக்காக்கப் பதிவதில் எனக்கு விருப்பமில்லை. மக்களின் வாழ்க்கையை அதன் வலிகளோடும், இயல்புகளோடும் பதிவு செய்ய வேண்டும்.

இன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதையின் களத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாமல்தான் எழுதுகிறார்கள். எல்லாம் வறட்டுக் கற்பனை. இவர்களுக்கு சினிமா, சினிமா பாடல்கள்தான் வாழ்க்கை, இலக்கியம் என்றாகிவிட்டது.

யாருக்கும் மக்களைப் பற்றிய அக்கறையோ, குறைந்தபட்சம் அவர்களின் உலகத்தை எட்டிப் பார்க்கும் ஆவலோ கூட கிடையாது.

எழுத்து பெரிய வியாரமாகிவிட்டதன் விளைவாகக் கூட இது இருக்கலாம்...' என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

நெஞ்சைச் சுடும் நிஜம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X