For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவாத குடியிருப்புகள்: கல்வி பாதிப்பு- விவாகத்திற்குத் தள்ளப்படும் சுனாமி குழந்தைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெகு தொலைவில் குடியிருப்புகள் ஒதுக்கப்படுவதால் அவர்களின் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வயதிலேயே அவர்களை திருமணம் செய்து வைக்கும் அவலம் நிலவுவதாக மக்கள் தீர்ப்பாயம் முன்பு புகார் கூறப்பட்டுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் தேவையை நிறைவு செய்வதாக இல்லை என்று கூறி இதுகுறித்து விசாரிக்க பல்வேறு அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து சுனாமிக்கு பின் மறுவாழ்வு, குடியிருப்பு, நிலம், வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த தேசிய அளவிலான மக்கள் தீர்ப்பாயத்தை அமைத்துள்ளன.

மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எச்.சுரேஷ் தலைமையிலான இந்த தீர்ப்பாயம் சென்னையில் தனது விசாரணையை தொடங்கியது.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கடலோர பெண்கள் பாதுகாப்பு இயக்க தலைவி சாமுண்டீஸ்வரி பேசுகையில், பரபரப்புத் தகவல்களை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், சுனாமி நிவாரணத்தில் ஆண்களுக்கு படகு, வலை போன்றவற்றுக்கு இழப்பீடு கொடுத்தது போல பெண்களுக்கென நிவாரணம், இழப்பீடு எதுவும் தரப்படவில்லை.

ஒரு குடும்பத்தில் கணவனை இழந்திருந்தால் அங்கு கணவனை இழந்ததற்கான இழப்பீடு மட்டும் தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த குடும்பத்தில் இருந்த படகு, வலை போன்றவற்றுக்கு இழப்பீடு தரவில்லை.

தற்காலிக குடியிருப்புகள் தகடுகள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தனி கழிப்பறையோ அல்லது குளியலறையோ இல்லாததால், பெண்கள், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

கல்விக் கட்டணம் இல்லை என்று அரசு அறிவித்தது. ஆனால் பள்ளிகளில் கேட்டால், உங்களுக்கு டியூஷன் கட்டணம் தான் இல்லை. பள்ளிக் கட்டணம் உண்டு என்றனர். டியூஷன் கட்டணம் வெறும் 55 ரூபாயாக இருக்கும். பள்ளிக் கட்டணமோ ரூ.1500. இது எந்த வகையில் நியாயம்.

நிரந்தர வீடுகள் வெகு தூரத்தில் வழங்கப்படுவதால், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவர்கள் இடையிலேயே கல்வியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பெற்றோர் பால்ய திருமணம் செய்து வைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.

அந்தமானை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் கூறுகையில், அந்தமான் நிர்வாகம் எந்த அடிப்படை உதவிகளையும் உடனடியாக செய்யவில்லை. மக்கள் கருத்தறியாமலேயே நிரந்தர வீடுகள் வெகு தொலைவில் கட்டப்படுகிறது.

மீனவர்கள் முன்பு இருந்த இடத்திலேயே வீடு கட்டிக்கொள்வதாக கூறினால் கூட பாதுகாப்பு கருதி மறுக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்கு பணிகள் நடக்கிறது. இது மட்டும் பாதுகாப்பானதா? என்றார்.

அந்தமான், கேரளா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கிறார்கள்.

அரசு அதிகாரிகளும் தங்கள் விளக்கங்களை தெரிவிக்கிறார்கள். இறுதியில் தீர்ப்பாயம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X