For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கும், எதிலும் மகளிர் ஏற்றும் காணும் சூழல்-கருணாநிதி மகிழ்ச்சி

By Sridhar L
Google Oneindia Tamil News

Kanimozhi
சென்னை: எங்கும் மகளிர் - எதிலும் மகளிர் என ஏற்றம் கண்டுவரும் சூழ்நிலையை நாம் காண முடிகிறது என முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு திமுக மகளிர் அணி தலைவர் நூர்ஜகான் பேகம் தலைமை தாங்கினார்.

கவிஞர் கனிமொழி எம்பி., முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள், எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திமுக துணை பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், மகளிர் அணி புரவலர் இந்திரகுமரி, சமூக சேவகி சரோஜினி வரதப்பன், மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமூக சேவை புரிந்ததற்காக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், ஞான சவுந்தரி, சாவித்திரி வைத்தி, வந்தனா கோபிக்குமார், வைஷ்ணவி ஜெயக்குமார், திராவிட இயக்க முன்னோடி சவுபாக்கியம், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த டாக்டர்கள் அசோகன் - புஷ்பாஞ்சலி, வாள் பயிற்சி மாணவி ஜனனி ஆகியோருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதை நூர்ஜகான் பேகம் வாசித்தார். அதில் கருணாநிதி கூறியிருந்ததாவது:

திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் உலக மகளிர் தின விழா எழுச்சியுடன் கொண்டாடப்படுவது அறிந்து மகிழ்கிறேன். திராவிட இயக்கம் அதன் தொடக்க காலம் தொட்டுப் பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி வந்துள்ளது.

1929ம் ஆண்டில் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியாரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையொட்டியும், பெண்கள் பொருளாதார மேம்பாடு காண வேண்டும் என்னும் உணர்வோடும் திமுக அரசு அமையும் காலங்களில் எல்லாம் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இன்று எங்கும் மகளிர், எதிலும் மகளிர் என ஏற்றம் கண்டுவரும் சூழ்நிலைகளை நாம் ஒவ்வொரு வரும் காணமுடியும். திராவிட இயக்கத்தின் மகத்தான வெற்றிகளில் ஒன்றாக மகளிர் முன்னேற்றம் இன்று மதிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கொண்டாடப்படும் உலக மகளிர் தின விழா' சிறப்பாக நடைபெற மகளிர் சமுதாயம் தொடர்ந்து முன்னேற்ற முத்திரைகள் பதித்திட என் உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில்,

எவ்வளவு மகளிர் தினம் கொண்டாடினாலும், பெண்கள் முன்னேற்றம் அடைந்தாலும், பலர் இன்னும் வீடுதான் உலகம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் கடமை விலகக் கூடியது அல்ல. பெண்களின் பிரச்சினையை மற்றொரு பெண்ணால்தான் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், அதையும் தாண்டி சில விதிவிலக்குகள் திராவிட இயக்கத்தில் உண்டு. வாழ்க்கை போட்ட தடைகளை மீறியவர்கள் இங்கு மேடைகளில் அமர்ந்துள்ளனர். அரசியல், பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் பல போராட்டங்களை தாண்டித்தான் வரவேண்டியுள்ளது.

எனக்கு இன்றைய நிகழ்வு பெருமையாக உள்ளது. வயது முதிர்ந்த திராவிட இயக்க பெண்ணுக்கு விருது கொடுத்த பெருமை அது. இதை என்றும் நன்றியுடன் எண்ணிப்பார்ப்பேன்.

சமுதாயத்தில் மாற்றம் வந்து கொண்டிருந்தாலும், இதுவரை 60 மில்லியன் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு அடிப்படை வாழ்வுரிமைகள் இல்லை.

பெண் பிள்ளைகளை சமூகம் நிராகரிக்க கூடாது. பெண் குழந்தைகளின் வாழ்வுக்காகத்தான் திமுக பல திட்டங்களை கொண்டு வந்தது. சுயஉதவி குழுக்களை அமைத்து சமூகப் புரட்சியை கொண்டு வந்தது திமுக அரசுதான். பெண்களுக்கு சம சொத்துரிமை சட்டத்தை திமுக தான் கொண்டு வந்தது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டுவந்து ஆண்-பெண்களுக்கு ஒரே சம்பளத்தை வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் 82 சதவீத பெண்களுக்கு வேலை கிடைத்தது. பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் திமுக வரும் தேர்தலிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றார்.

கனிமொழியின் உறுப்பு தானம்:

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராதிகா செல்வி, தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறுதியளித்துள்ளார் கனிமொழி. இதற்காக அவரைப் பாராட்டுகிறேன் என்றார். இதையடுத்து அரங்கில் இருந்த அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X