For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை நல்வழிப்படுத்தும் புராணங்களை ஏற்கலாம் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

By Staff
Google Oneindia Tamil News

Central minister Jagatratchagan, MGR Kazhagam president R.M.Veerappan, Arut Chelvar Pollachi Mahalingam and Kundrakudi Ponnambala Adigalar
கட்டுக்கதை என்று சிலரால் வர்ணிக்கப்பட்டாலும் கூட, மக்களை நல்வழிப்படுத்த உதவுகிறது என்பதால் புராணங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.

தவத்திரு ஊரன் அடிகளாரின் பவளவிழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அவர் எழுதிய சைவ ஆதீனங்கள், வீரசைவ ஆதீனங்கள், புரட்சித் துறவி வள்ளலார், தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகமான பத்மபூஷன் அருட்செல்வர், தொழிலதிபர் நல்லி குப்புச்சாமி செட்டியின் வாழ்க்கை வரலாறான பத்மஸ்ரீ நல்லி ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்தப் புத்தகங்களை தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், ஆர்.எம்.வீரப்பன், ஜெகத்ரட்சகன், அவ்வை நடராஜன், சீர்காழி கோ.சிவசிதம்பரம், கணபதி ஸ்தபதியார் ஆகியோருக்கு, அவரவர் துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

பல்கலைச் செம்மல் பொள்ளாச்சி. நா. மகாலிங்கம் ..

கல்வி, சமூகம், சன்மார்க்கத்தில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு பல்கலைச் செம்மல் பட்டம் தரப்பட்டது.

திவ்யபிரபந்தத்துக்கு நய உரை எழுதியதற்காக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு திவ்ய ஜீவன் என்ற பட்டம் தரப்பட்டது. இதழியல், நாணயவியல் உட்பட பல்வேறு துறைகளில் பன்முகத் திறமை கொண்டிருக்கும் தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு பல்கலைச் செல்வர் பட்டம் தரப்பட்டது.

நல்லி குப்புசாமிக்கு பல்கலைச் செல்வர், சிவசிதம்பரத்துக்கு நல்லிசை வள்ளல், கணபதி ஸ்பதியாருக்கு சிற்பச் சக்கரவர்த்தி, ஆர்.எம்.வீரப்பனுக்கு கம்பவேள், அவ்வை நடராஜனுக்கு நகைச்சுவை நாரதர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசுகையில், சமயம் என்பது சமையல் போன்றது என்று கலைஞர் குறிப்பிடுவதைப் போல், மக்களுக்கு தேவையானதை வழங்கும் சமையலாக மதங்கள் இருக்க வேண்டும் என்றார்.

19-ம் நூற்றாண்டுகளில் தமிழுக்கு ஆங்கிலேயர்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களால் பாதிப்பு ஏற்பட்ட போது, தமிழை காப்பாற்றியதில் பெரும்பங்கு சைவ மடாதிபதிகளையே சேரும். ரோமாபுரி மற்றும் கிரேக்க அரசுகள், தமிழக மன்னர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள், பழைய நாணயங்களை ஆராயும் போது தெரிய வருவதாக ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

அன்று தமிழுக்கு சைவ மடங்கள் தொண்டுகள் செய்திருந்தாலும், இன்றுள்ள சைவ மடங்கள் செய்துள்ள தொண்டு என்ன? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புவதாக ஆர்.எம்.வீரப்பன் பேசினார்.

சென்னையில் வள்ளலாருக்கு ஆலயம் ஒன்றை பொள்ளாச்சி நா.மகாலிங்கம் எழுப்ப வேண்டும் என்றும் தனது பங்காக ரூ.5 லட்சத்தை உடனே தரத் தயார் என்றும் மதுரை ஆதீனம் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அறிவியலும் ஆன்மீகமும் இணைந்தால் மக்களுக்கு பயனுண்டாகும். புராணத்தை கட்டுக்கதை என்று கூறுவோர் உண்டு. அது கட்டுக்கதை என்று வைத்துக் கொண்டாலும், அவை மக்களை நல்வழிப்படுத்துகின்றன என்பதால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

சிறுதொண்டர் புராணத்தை கட்டுக்கதை என்று வைத்துக் கொண்டாலும், அதன் வழியில் ஹிதேந்திரனின் இருதயம் தானமாகத் தரப்பட்ட சம்பவம் இன்று நடந்திருக்கிறதே என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், துழாவூர் உட்பட பல ஆதினங்கள் மற்றும் ஆதீன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X