For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Stress Reduction
“வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்" என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம். கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

பண அழுத்தம்

பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.

பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.

மது போதை பழக்கம்

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுகமான சுமைகள்

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

உற்சாக ரசாயனம்

உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

மனசே ரிலாக்ஸ்

தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியே வழி

கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.

இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

English summary
The old saying that 'prevention is better than cure' certainly holds true for stress management. Regarded as a clinical problem, stress is experienced by almost every individual in varying forms and degrees every day. In small doses, stress can definitely help motivate and stimulate you to get things done. But, if the level of pressure gets too high, it might affect your mental and physical functioning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X